'வாரே...வாவ்!' வீக் எண்ட் விவசாயத்தில் அசத்தும் ஐ.டி பெண்கள்! | IT women spend their weekend in farm lands!

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (25/04/2017)

கடைசி தொடர்பு:18:22 (25/04/2017)

'வாரே...வாவ்!' வீக் எண்ட் விவசாயத்தில் அசத்தும் ஐ.டி பெண்கள்!

விவசாயத்தில் அசத்தும் ஐ.டி. பெண்கள்

னைவருக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளின் நிலை, வலிகளும் கடன்களும் நிறைந்ததாகவே இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளே அலட்சியமாக இருக்கும் நிலையில், ஐடி நிறுனவங்களில் வேலை செய்பவர்கள் சத்தம் இல்லாமல் புதிய வழியில் புரட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்கள், மற்றவர்களின் கவலைகளை கண்டுகொள்ளாதவர்கள் என்ற தங்கள் மீதான பிம்பத்தை மாற்றும் வகையில் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள் அனைவருமே பல ஆயிரங்களில் இருந்து லட்சங்களில் ஊதியம் பெறுபவர்கள். அத்தகையவர்களில் ஒருவர்தான் கலைவாணி. தன் விவசாயப் பணி அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். 

"விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த என்னோட பெற்றோர், புதுக்கோட்டை மாவட்டத்துல விவசாயம் செஞ்சுகிட்டு இருக்காங்க. விவசாயப் பணிகள்ல பெற்றோர்கூட நானும் சின்ன வயசுல நிறையவே வொர்க் பண்ணியிருக்கேன். ஆனா, சென்னையில ஐ.டி. வேலைக்கு வந்தபிறகு விவசாயத்துக்கும் எனக்குமான கனெக்டிவிட்டி குறைஞ்சுப்போச்சு. ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான் 'TWA' (The Weekend Agriculturist) அமைப்பு, விவசாயிகளின் நிலத்துக்கே சென்று சேவையா வொர்க் பண்ணிக்கொடுக்கிறதை தெரிஞ்சுக்கிட்டேன். சனி, ஞாயிறுகள்ல சும்மாதானே இருக்கிறோம். அந்த சமயத்துல நாமளும் விவசாயிங்களுக்கு உதவலாம்னு நினைச்சு, அந்த அமைப்புல உறுப்பினரா சேர்ந்து தொடர்ந்து விவசாய வேலைகளை செய்துகிட்டு இருக்கிறேன். இப்போ ஐ.டி. நிறுவனங்கள்ல வேலை செய்ற 30 பெண் தோழிகளும் ரெகுலரா என்கூட விவசாய வேலைகள் செய்ய வர்றாங்க. பெருசா ஒரு நல்ல விஷயத்தை செஞ்சுகிட்டு இருக்குற சந்தோஷத்தை, இந்த விவசாய வேலைகள் கொடுத்துகிட்டு இருக்கு. கூடவே என் தம்பியையும் இப்போ ஆர்கானிக் விவசாயம் செய்ற அளவுக்கு ஊக்கம் கொடுத்திருக்கேன்" என உற்சாகம் பொங்க கூறுகிறார், கலைவாணி.

விவசாய வேலைகள் செய்யும் பெண்கள்

தம்பதியாக இந்த அமைப்பில் இணைந்து விவசாய வேலைகளை செய்துவரும் ரேவதி, தன் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

"ஆள் பற்றாக்குறை, தண்ணீர் பிரச்னை, விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைக்காததுனு பல துன்பங்களை விவசாயிகள் தொடர்ந்து சந்திச்சுட்டு வர்றது விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த எனக்கும் என் கணவருக்கும் நல்லாவே தெரியும். பல விவசாயிகள் மாற்று வேலைகளை நோக்கிப் போயிட்டு இருக்காங்க. விவசாயம் அழிஞ்சுடக் கூடாது. விவசாயிகளுக்கு நம்மால் முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்ங்கிற நோக்கத்தோடு பல வருஷங்களா 'TWA'  (The Weekend Agriculturist)- என்கிற பெயரில் ஃபேஸ்புக் குரூப்பை, ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் விவசாய ஆர்வம்கொண்டவங்க ரன் பண்ணிட்டு இருக்காங்க. இந்த அமைப்பில் முக்கிய நபரா இருக்கும் நண்பர் சதீஸூன் அறிமுகத்துக்குப் பிறகு, நானும் என் கணவரும் இந்த அமைப்பில் சேர்ந்து வேலை செய்ய முடிவெடுத்தோம். 

விப்ரோ நிறுவனத்தில் பல வருஷமா வொர்க் பண்ணிட்டு இருந்தேன். சமீபத்துலதான் வேலையை ரிசைன் செஞ்சேன். சிடிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் கணவரும் நானும் தொடர்ந்து சில வாரங்களாக 'TWA' அமைப்புடன் சேர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருத்தணிப் பக்கத்துல இருக்கும் ஒரு விவசாய நிலத்துக்கு வேலை செய்யப் போய்ட்டு இருக்கோம். காலை முதல் மாலை வரை வேலைகளைச் செய்வோம். இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்களோட ஃப்ரெண்ட்ஸ் பலரையும் இந்த அமைப்பில் இணைச்சு இருக்கோம். பச்சைப்பயறு, ராகி அறுவடைப் பணிகளுடன், களையெடுக்கும் வேலைகளைப் போன வாரம் செஞ்சோம்'' என்கிற ரேவதி, விவசாயிகளின் வலிகளைச் சொல்கிறார். 

விவசாயப் பணியில் ஐ.டி. பெண்கள்

"வெறும் 15 சென்ட் நிலத்துல விளைஞ்ச ராகியை நாங்க பத்து பேர் சேர்ந்து அறுவடை செய்யறதுக்குள்ளே அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால், நிலத்தை தயார்செய்றதுல தொடங்கி அறுவடை செய்ற வரைக்கும் விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்கனு நினைச்சுப் பார்த்தோம். இப்படி விவசாயிகளின் வலியை கண்கூடப் பார்க்குறப்போ விவசாயத்தின் மீது அளவுகடந்த மதிப்பும், சிறுதானிய உணவுகள் சாப்பிடுறதுல பெரிய ஆர்வமும் ஏற்பட்டிருக்குது. நானும் என் கணவரும் இன்னும் சில வருஷங்கள் கழிச்சு சொந்த ஊருக்குப் போய் இயற்கை விவசாயம் செய்யலாம்னுன் திட்டம் போட்டிருக்கோம். அந்தத் திட்டத்துக்கு, இப்போ நாங்க செய்யும் விவசாய வேலைகள் உதவியாக இருக்கு. கூடவே, விவசாயிகளுக்கு எங்களால் முடிஞ்ச சின்ன உதவியாகவும் இதை நினைக்கிறோம். ஐடி வேலை செய்யும் பெண்கள் பலரும் தங்களோட குழந்தைகளோடும் கணவரோடும் வந்து விவசாய வேலைகளை செய்வாங்க. அதையெல்லாம் பார்க்குறப்போ, இன்னும் உற்சாகமா இருக்கு'' என்கிறார் மகிழ்வுடன். 

விவசாய வேலை செய்யும் ஐ.டி. பெண்கள்

TWA அமைப்பின் தொடக்கம் மற்றும் பணிகளைப் பற்றி கூறுகிறார், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், ஐ.டி. நிறுவன ஊழியருமான சதீஸ். 

"எங்க அமைப்பின் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் ஒருத்தர், சில வருஷத்துக்கு முன்னாடி மூன்றாம் உலகப் போர் புத்தகத்தைப் படிச்சிருக்கார். 'இனி விவசாயமும் விவசாயிகளின் நிலையும் மிக மோசமான நிலைக்குப் போகும்' என்பதை உணர்ந்து, நம்மால் முடிஞ்ச உதவியை விவசாயிகளுக்குச் செய்யணும்னு நண்பர்கள்கிட்ட சொன்னார். அதன்படி உருவானதுதான், 'The Weekend Agriculturist' என்ற ஃபேஸ்புக் குரூப். விவசாய ஆர்வம்கொண்ட ஐடி நிறுவன ஊழியர்கள் பலரும் தொடர்ந்து இந்த அமைப்பில் உறுப்பினராக சேர, இப்போ 15,000 பேருக்கும் மேல இருக்காங்க. எங்களோடு நிறைய விவசாயிகள் தொடர்பில் இருக்காங்க. அவங்க தங்கள் விவசாயப் பணிகளைப் பற்றி எங்களுக்கு தகவல் சொல்வாங்க. அதை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குரூப்பில் தெரிவிப்போம். ஆர்வமும், அந்தப் பகுதிக்கு அருகில் உள்ளவங்களும் சனி, ஞாயிறுகளில் வேலைக்கு வருவாங்க. இப்படி ஒரு விளைநிலத்துக்கு சராசரியா 10 - 20 பேர் ஒண்ணு சேர்ந்து வேலை செய்வோம். தண்ணி விடுறது, களை எடுக்குறது, அறுவடை செய்றது, பாத்தி கட்டுறது, உரம் போடுறதுன்னு அந்த விளைநிலத்துல, அப்போது என்ன தேவையோ, அந்த வேலைகளைச் செய்வோம். 

வாரத்துல அஞ்சு நாள் ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்னாடி வேலை செஞ்சுகிட்டு இருக்குற எங்களுக்கு, தலைக்கு மேலே சூரியன், காலடியில் மண் என இயற்கையோடு வேலை செய்யறது புத்துணர்ச்சியையும் கொடுக்குது.தொடர்ந்து இயற்கை விளைபொருள் விழிப்புஉணர்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் உற்சாகமாக. 

 
- கு.ஆனந்தராஜ்


டிரெண்டிங் @ விகடன்