வாட்ஸப்பில் பரவும் முதல்வர் ப்ளஸ் அமைச்சர்கள் செல்போன் எண்! - பன்னீர்செல்வம் அணியின் விஷமமா? | OPS team's IT wing shares CM and other ministers contact details in WhatsApp

வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (25/04/2017)

கடைசி தொடர்பு:17:38 (25/04/2017)

வாட்ஸப்பில் பரவும் முதல்வர் ப்ளஸ் அமைச்சர்கள் செல்போன் எண்! - பன்னீர்செல்வம் அணியின் விஷமமா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா குடும்பத்தை விரட்ட ஏன் தயக்கம் என்ற கேள்வியை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேளுங்கள் என்ற பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கேள்வியைக் கேட்க அவர்களின் செல்போன் நம்பர்களும் அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளானது. சசிகலா தலைமையிலான அணி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா அணியினருக்குத் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்து வந்தனர். சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து விரட்ட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்வைத்தனர். இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சில அமைச்சர்கள் மனம் மாறி, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இதற்கு, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு முயன்றுவருகின்றனர். 

இந்தச் சூழ்நிலையில் கட்சிப்பணிகளிலிருந்து ஒதுங்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதனால், அ.தி.மு.கவில் சசிகலா அணி என்பது மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற புதிய அணி உருவானது. இந்த அணியில் உள்ளவர்கள் சசிகலாவையும் டி.டிவி.தினகரனையும் கட்சியிலிருந்து ஓரம்கட்ட முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு வெளியானபிறகும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பு அமைதியாகவே இருந்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் விடாப்பிடியாக சசிகலா, டி.டி.வி.தினகரனைக் கட்சியிலிருந்து நீக்கிய பிறகே பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரோ, பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று பகிரங்கமாகவே அறிவித்த பிறகும் அதற்கான முயற்சிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் 'சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து விரட்டுங்கள்' என்ற வாசகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது. அதில், 'இன்னும் தயக்கம் ஏன் முழுமையாக சசிகலா குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள், பேச்சுவார்த்தைக்கு மதிப்பளியுங்கள், இதுபோன்ற கருத்துகளை அமைச்சர்கள் அணிக்கு தொண்டர்களும் பொதுமக்களுமாகிய நீங்கள் உங்கள் கருத்துகளை உணர்வுகளைத் தெரிவிக்க.. அமைச்சர்கள் அணியின் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்பி வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் செல்போன் நம்பர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம்,சசிகலா

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக நடைபெற வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அமைச்சர்கள் அணி தெரிவித்தாலும் அந்தத் தரப்பினர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தயக்கம் காட்டிவருகின்றனர். குறிப்பாக சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அதுதொடர்பாக மதுசூதனன், வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி அலுவலகத்தில் சசிகலா புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா புகைப்படத்தை நீக்க முடியாது என்று பதிலளித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாகவே அழைப்புவிடுத்தபோதிலும் அமைச்சர்கள் அணியினர் தயக்கம் காட்டிவருகின்றனர். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு கட்சிப்பதவி வழங்கப்பட்ட சமயத்திலும், கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போதும் அவர்களின் செல்போன் நம்பர்கள் வெளியிடப்பட்டன. எம்எல்ஏக்களைப் பொதுமக்களும் தொண்டர்களும் தொடர்பு கொண்டு பேசினர். அதுபோலத்தான் உடனடியாகப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைச்சர்கள் அணியில் இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தைக் குழுவினரின் செல்போன் நம்பர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்பிறகு விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்"என்றனர். 
சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களின் செல்போன் நம்பர்களுக்கு நாம் தொடர்பு கொண்டோம். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அவரிடம் விவரத்தைச் சொன்னதும், "நிச்சயமாக இந்தக் காரியத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செய்திருக்க மாட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று கருதுபவர்களின் வேலையாகத்தான் இது இருக்கும். விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும்" என்றார். 

 சமூக வலைத்தளங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செல்போன் நம்பர்கள் வைரலாகி வருகின்றன. அந்த நம்பர்களுக்கு தொண்டர்கள், பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டுவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முயற்சி பேச்சுவார்த்தையைத் தொடங்க வழிவகுக்குமா அல்லது முட்டுக்கட்டையாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 - எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close