இணைக்காவிட்டால் ஆட்டம் க்ளோஸ்!’ - பன்னீர்செல்வம் மனம் மாறிய பின்னணி

பழனிசாமி - பன்னீர்செல்வம்

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைப்புக்கு முயற்சியில் இறங்கியிருக்கும் நேரத்தில், இணைப்புக்கு  பன்னீர் அணி ஒத்துவராவிட்டால்  அவரது அணியில் இருந்து  நிர்வாகிகளை இழுக்கும் முடிவுக்கு எடப்பாடி தரப்பு வந்துள்ளது.
இரண்டு அணிகளையும் இணைக்க வேண்டும் என்ற சிந்தனை இரு தரப்பிலும் கடந்த மாதமே ஏற்பட்டுவிட்டது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இதில் தீவிர ஆர்வம் காட்டிவந்தனர். இரண்டு அணிகளும் இணைந்தால் வரவேற்பதாக தம்பிதுரை பேட்டி கொடுப்பதற்கு முன்பே, அதற்கான பேச்சுவார்த்தை சத்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டது. 

பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்ற முடிவுக்கு அமைச்சர்கள் வந்ததற்கு தினகரனும் ஓரு காரணம். ஆர்.கே நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்குப் பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனின் அணுகுமுறை சில அமைச்சர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரனுக்கு வலதுகரமாக இருக்கும் ஒரு நிர்வாகியின் நடவடிக்கைகள்தான் அமைச்சர்களை ரொம்பவே காயப்படுத்தியுள்ளது. தினகரன் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே விரும்பத்தகாத சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதால், “நீங்கள் கட்சியை அழிக்க முடிவு செய்துவிட்டீர்கள். என்னமோ செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு அமைச்சர் ஒருவர் எழுந்து வெளியே வந்துள்ளார். அவர் தான் பிறகு பன்னீர் அணியுடன் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார். 

பன்னீர் அணியின், 'சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது' என்பதை ஆரம்பத்திலே சொல்லியுள்ளார்கள். அதே கருத்தில் பல அமைச்சர்களும் இருப்பதாக பன்னீர் தரப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அணிகள் பிரிந்து நிற்பது கட்சிக்கு நல்லதல்ல, மத்திய அரசு நம்மிருவரையும் பகடைக்காயாக பயன்படுத்திவிடும் என்று அமைச்சர்களிடையே கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்ற பின்தான் “சின்னம்மா குடும்பம் கட்சிக்குள் இருக்கும் வரை அணிகளை இணைக்க முடியாது” என்று மூத்த அமைச்சர் வெளிப்படையாக சொல்லியுள்ளார். அதன்பிறகு அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. 

தினகரன்

அந்த ஆலோசனையில் “பன்னீர் செல்வம் வந்தால் அவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்போம். கட்சிப் பொறுப்புகளில் இரண்டு அணியினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம். அவர்கள் தரப்பில் மேலும் இரண்டு பேருக்கு மந்திரி பதவிக்கு ஒப்புக்கொள்ளலாம்” என்று பேசப்பட்டது. அந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கபட்டபோது அவரும் “எனக்கு அமைச்சர் பதவி போதும், என்னைவிட சீனியர் பன்னீர்செல்வம் அவர் முதல்வராக இருக்கட்டும்”  என்று சொல்லியுள்ளார். 

மறுதினமே ஜெயக்குமார் “தினகரன்  குடும்பம் கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவார்கள். பன்னீர் அணியுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் ” என்று அதிரடியாக அறிவித்தார். தினகரன் தரப்பில் இப்படி ஒரு நிகழ்வு எதிர்பார்த்தே இருந்தனர். தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட சில நிபந்தனைகள் எடப்பாடியால் ஏற்றுக்கொள்ளபட்டதால், தினகரன் தான் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார்.

பன்னீர் தரப்பும் இந்தத் தகவலை கேள்விப்பட்டு உற்சாகமாகத்தான் இருந்தார்கள். தங்கள் தரப்பில் யாருக்கு என்ன பதவி, என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீர் என தம்பிதுரை “எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை” என்று பற்றவைக்க  பேச்சுவார்த்தை துவங்குவதிலேயே சிக்கல் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு அமைச்சர்கள் மத்தியில் பல்வேறு சலசலப்புகள் எற்பட்டன. பன்னீருக்கு அமைச்சர் பதவி மட்டும் வழங்கவேண்டும் என ஒரு தரப்பும், முதல்வராக பன்னீரை கொண்டுவர நாம் ஏன் கூவத்துாரில் முகாமிட்டு செலவு செய்திருக்க வேண்டும் என்று சில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

பன்னீர்செல்வம்

மேலும் கட்சிப் பொறுப்பையும் பன்னீருக்கு வழங்குவதில் ஆட்சேபம் இருந்துள்ளது. பன்னீர் தரப்பில் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அதை  முழுமையாக எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்ததால் இணைப்பு தள்ளிபோனது. பன்னீர் அணி முரண்டு பிடித்தால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். 

“பன்னீர் அணியுடன் இணைந்தால் சின்னத்தைப் பெற்றுவிடலாம், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படாது. அவர் ஒத்துழைக்காவிட்டால் நாம் அவர் அணியை கலகலக்கச் செய்யவேண்டும் ”என்று மூத்த அமைச்சர் ஒருவர் சொல்லியுள்ளார். 

பன்னீர் அணியின் நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தையிலும் அமைச்சர்கள் தரப்பு இறங்கியுள்ளது. குறிப்பாக மதுசூதனனை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும் செயல்பட்டுள்ளார்கள். எம்.எல்.ஏ-க்களிடம் “நீங்கள் அங்கு இருப்பதை விட இங்கு வாருங்கள். நான்கு ஆண்டு ஆட்சி நம்மிடம் இருக்கிறது. உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று சொல்லியுள்ளார்கள். இந்த தகவல்கள் எல்லாம் பன்னீர் காதுக்கு சென்றபிறகு தான், அவரே களத்தில் இறங்கியுள்ளார். மதுசூதனன் வீட்டுக்கே சென்று அவரிடம் பேசியுள்ளார். அதன் பிறகு தான் மதுசூதனன் பெயரில் “சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று திடீர் அறிக்கை வந்தது. அதேபோல் தன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களிடமும் பேசியுள்ளார். 

தன் அணியில் எடப்பாடி தரப்பு ஆட்டம் காட்டுவதால் கடுப்பான பன்னீர், எடப்பாடி அணியில் இருந்த செந்தில்பாலாஜியை தன் பக்கம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். செந்தில் பாலாஜியிடம் தி.மு.க தரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதால் பன்னீரும் செந்தில் பாலாஜி பக்கம் திரும்பினார். 

ஆளும் தரப்பிலோ, 'நாம் தான் இறங்கிப்போகின்றோம், இனி அவர்கள் தரப்பு வந்தால் பேசுவோம். இல்லை, 122 எம்.எல்.ஏக்களோடு ஆட்சியை தொடருவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இது இன்று காலையில் எடப்பாடி அணியிலிருந்து ஒரு அமைச்சர் மூலம் பன்னீர் காதுக்கு வந்தது. அதன் பிறகுதான் பன்னீர்செல்வம் தடாலடியாக, “ பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலை வந்திருப்பதாக” கருத்து தெரிவித்துள்ளார். முறுக்குக் காட்டினால், முடங்கிப்போய் விடுவோம் என்ற அச்சத்துக்கு பன்னீர் வந்துவிட்டதே இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்கிறார்கள்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!