தமிழக கிராமங்களுக்கு வருகிறது பாரத்நெட்! முதல்வர் பழனிசாமி அசத்தல் ஒப்பந்தம் | Centre signs MOU with the state for Bharatnet which will benefit 12,524 villages

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (25/04/2017)

கடைசி தொடர்பு:17:49 (25/04/2017)

தமிழக கிராமங்களுக்கு வருகிறது பாரத்நெட்! முதல்வர் பழனிசாமி அசத்தல் ஒப்பந்தம்

பாரத்நெட் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான  கையெழுதிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "14.9.2015 அன்று ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ்,  "அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணையம் மூலமாக இணைத்து அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற்று, அதன்மூலம் பயன்பெறும் வகையில் பாரத்நெட் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியதின் அடிப்படையில் மத்திய அரசு இத்திட்டத்தினை தமிழகத்தில் தமிழக அரசே செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் Optical Fibre  மூலம் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தினை 3000 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கென  தமிழ்நாடு  ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (Tamil Nadu FibreNet Corporation) என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும்" என்பதை அறிவித்திருந்தார்கள்.

ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் (Tamil Nadu FibreNet Corporation) நிறுவனம் உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு அரசின் பங்கு முதலீடாக 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்நிறுவனத்தினை பதிவு செய்யவதற்கான பூர்வாங்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான  கையெழுதிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்  Memorandum of Understanding (MoU) முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் இன்று (25.4.2017) தலைமைச் செயலகத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் Optical Fibre மூலம் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான "இல்லந்தோறும் இணையம்" திட்டத்தினையும்  இக்கட்டமைப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்படுத்த இயலும்" என்று கூறப்பட்டுள்ளது.