டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? #Inspiring #3MinsRead | Meet this eighty-seven old man. He has something special to share #Inspiring #3MinsRead

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (25/04/2017)

கடைசி தொடர்பு:20:24 (25/04/2017)

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா? #Inspiring #3MinsRead

போராளிகள்

டந்த 41 நாட்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் போராடிவந்தனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை நேரில் சந்தித்து, 'உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்' என கூறியுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு இன்று காலை (25-04-2017) தமிழகம் வந்தடைந்தனர்.

தாத்தாவை முத்தம் கொடுத்து வரவேற்கும் பேரன்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை வரவேற்க இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் திரண்டிருந்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு "விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாங்கள் போராட்டம் நடத்தி வந்தோம். 'எப்படியாவது மோடி எங்களின் குறைகளை கேட்கமாட்டாரா?' என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அவர் எங்களை சந்திக்க வரவில்லை. அதனால் எலிக்கறி உண்ணுதல், மொட்டை அடித்தல், நிர்வாண போராட்டம் செய்தோம். இறுதிவரை அவர் எங்களை சந்திப்பதை தவிர்த்தே வந்தார். இந்த போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும் எங்களை ஊருக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். அதனால் எங்களுக்கு எந்த அளவுக்கு கஷ்டம் கொடுக்க முடியுமோ? அந்த அளவுக்கு கொடுத்தனர். நாங்கள் இருந்த பகுதியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்தார். அந்த கொலை வழக்கை எப்படியாவது எங்கள் மேல் சுமத்துவதற்கான நாடகமும் நடந்தது. அரசியல்வாதிகள் மற்றும் காவலர்களின் மிரட்டல்களும் அதிகமாக இருந்தது. ஆனால், நாங்கள் யாரும் பயப்படவில்லை. தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நாங்கள் போராடி வந்தோம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழக முதல்வர் பழனிசாமி எங்களை வந்து சந்தித்தார். அப்போது அவர் 'உங்களை மோடியுடன் பேசுவதற்கு நான் அழைத்துச் செல்கிறேன்' என்றார். ஆனாலும் முடியவில்லை. கடைசியாக 'தமிழக அரசால், உங்களுக்கு என்னென்ன சலுகைகள் தர முடியுமோ அந்த அனைத்து சலுகைகளையும் நான் செய்து தருகிறேன். தயவு செய்து போராட்டத்தை கைவிடுங்கள்' என்றார். அதனால் இந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம். ஆனால், விவசாயிகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும்." என்றார். 

பிரகாஷ்

போராட்டத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர் "விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கவே நான் டெல்லிக்குச் சென்றேன். அங்கு நம் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையவே நானும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். நமது விவசாயிகளுக்கு விரைவில் நன்மை நடக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டும் இளைஞர்களை ஒன்று திரட்டி டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் செய்வோம். ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிய நம் இளைஞர்கள் கண்டிப்பாக விவசாயிகளுக்காகவும் ஒன்று கூடுவார்கள். மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால், விரைவில் டெல்லியே அதிரும்படியான மிகப்பெரிய போராட்டம் நடக்கும். நம்ம விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்னையின்னா முதல்ல இளைஞர்கள்தான் முன் வர வேண்டும்." என்றார்.

87 வயதான சம்மந்தம் தாத்தா

"தமிழக விவசாயிகள் மட்டுமல்ல... அனைத்து மாநில விவசாயிகளையும் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இதை டெல்லியில் போராடியபோது தான் தெரிந்துகொண்டேன். மற்ற மாநில விவசாயிகளும் எங்களுடன் போராடுவதற்குத் தயாராக இருந்தனர். எங்களுக்கு முழு ஆதரவையும் அவர்கள் கொடுத்து வந்தனர். தமிழ் மக்கள் மட்டுமல்ல... தினம் தினம் பல மாநில விவசாயிகளும் எங்களை சந்தித்து ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன் பஞ்சாப்பிலிருந்து ஒரு விவசாய குழு ஒன்று வந்தது. உங்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. உங்கள் மனதைரியத்தை பாராட்டுகிறோம். இந்த நேரம் எங்களுக்கு அறுவடை காலம் என்பதால் எங்களால் உங்களுடன் சேர்ந்து போராட முடியவில்லை. இன்னும் சில தினங்களில் அறுவடை முடிந்துவிடும். அதன் பின் எங்கள் விவசாயிகளும் உங்களுடன் இணைந்து போராடுவார்கள். அதை சொல்வதற்கே இங்கு வந்தோம்'' என்றார்கள். அதேபோல பல விவசாயிகள் எங்களுக்கு முழு ஆதரவையும் கொடுத்தார்கள். மத்திய அரசு எங்களுக்கு நல்ல முடிவை எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் டெல்லியில் வெடிக்கும். அப்போது தமிழக விவசாயிகளுடன் பல மாநில விவசாயிகளும் கலந்துகொள்வார்கள். விவசாயிகள் நலன் காக்க இந்திய அரசு உடனே நல்ல முடிவை எடுக்க வேண்டும். இனி அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும்போது நான் முதல் ஆளாக வருவேன். எனக்கு வயது ஒரு தடையே இல்லை." என்கிறார் 87 வயதான சம்மந்தம் என்ற தாத்தா.

அமரஜோதி

அமரஜோதி என்ற பெண் நம்மிடம் பேசியபோது "பல நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், மோடி எங்களை வந்து சந்திக்கவே இல்லை. பலவிதமான போராட்டங்கள் செய்தோம். எங்களை கலைக்க நினைத்தார்களே தவிர யாருமே பேச முன்வரவில்லை. அந்த ஊர் மக்கள் எங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வந்தார்கள். விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செஞ்சா புண்ணியமா போகும்" ஒருவித கனத்த இதயத்தோடு தெரிவித்தார்.

உணவுண்ணும் விவசாயிகள்

இடுப்பில் ஒரு கோவணமும், தோளில் ஒரு துண்டையும் மட்டுமே உடுத்தி வந்த அனைத்து விவசாயிகளுக்கும், 'எப்படியாவது தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடந்துவிடாதா?' என்ற ஏக்கம் மட்டுமே மிச்சமிருந்தது.

படங்கள் : ஸ்ரீனிவாசலு 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close