தினகரன் கைது உறுதி... இரட்டை இலையின் நிலை..!?

              மந்திரிகளுடன் டி.டி.வி.தினகரன்         

 தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும்  பெற அ.தி.மு.க. அம்மா அணியின் லீடர் டி.டி.வி.தினகரன் மேற்கொண்ட முயற்சி இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. "இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக முறைகேடான வழிகளில் முயற்சி செய்துள்ளார் தினகரன். இதற்காக ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசி  எட்டரை கோடி ரூபாயை முன்பணமாகவும் கொடுத்ததை கண்டுபிடித்து விட்டோம்" என்கிறது தினகரனைப் பிடித்து வைத்திருக்கும் டெல்லி க்ரைம் பிராஞ்ச். அதே டெல்லித்தரப்பின் இன்னொரு பக்கமோ ரொம்பவும் யோசிக்க வைக்கும்படியான தகவல்களை வீசிச் செல்கிறது. "வி.ஐ.பி-களின் குரல்களில் பேசி மோசடி செய்ததாக பலமுறை கைதானவர் இந்த சுகேஷ் சந்திரசேகர்.  தினகரனின் டெல்லி லாபி என்பது  மிகவும் பெரிது. சுகேஷ் சந்திரசேகர் போல பலரை தினகரனுக்குத் தெரியும்.  அப்படி இருக்கும்போது, இதுபோன்ற 'டீல்' களை  தினகரன் போனில் பேசினார் என்று சொல்வதற்கே வாய்ப்பு இல்லை.  தினகரன், அவ்வளவு விவரமில்லாத ஆளும் அல்ல. தினகரன் சார்பில் யாராவது பேசினார்கள் என்ற லெவலில்தான் இந்த வழக்கை முடிக்க முடியும். அப்படி ஒரு நிலையில் தினகரனை பெரிய அளவுக்கு முடக்கி வைக்கவும் முடியாது.  இப்போதைக்கு தினகரன் மீது  இன்னொரு எஃப்.ஐ.ஆர். போடலாம், அவ்வளவுதான்  செய்ய முடியும். தினகரனை முதல்நாள் விசாரிக்கும் போதே போலீசுக்கு தெரிந்திருக்கும்...  இதில் நாம் அரைகிணறு கூட தாண்ட முடியாது என்று. தினகரன் மீது போடப்படும் எஃப்.ஐ.ஆரை வைத்துக் கொண்டு எதிர்தரப்பு வலுவாக ஆர்க்யூமென்ட் செய்யவும் வாய்ப்பில்லை. 
சென்னை சைபர் க்ரைம் போலீசிலேயே சுகேஷ் சந்திரசேகர் மீது பல வழக்குகள் விசாரணை முடிக்கப்படாமல், கிடப்பில் கிடக்கிறது. அந்த வழக்குகளை தூசு தட்டினாலே சுகேஷ் சந்திரசேகர் பின்னணி வெளிச்சத்துக்கு வந்து விடும். சென்னையில், இருந்த தினகரனுக்கு சம்மன் கொடுத்து டெல்லிக்கு வரவழைத்த போலீஸ், சுகேஷ் சந்திரசேகர் குறித்த தகவல்களைத் தோண்டியெடுக்க எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?  இவ்வளவுதூரம் தினகரனை நெருக்குவதற்கு என்ன காரணம்? இரட்டை இலையை மீட்கக் கொடுத்ததாக சொல்லப்படும் எட்டரை கோடி ரூபாய் மட்டும்தானா? தினகரன் டெல்லி க்ரைம் பிராஞ்ச் பிடியிலும், சசிகலா பெங்களூரு சிறையிலும் இருக்க,  'கொடநாடு' எஸ்டேட்டில் நடந்த கொலை குறித்து என்ன விசாரணை நடந்திருக்கிறது? பொலிரோ ஜீப்களில் வந்தவர்கள்தான் இந்தக் கொலையைச் செய்துள்ளனர். பொலிரோ ஜீப்பின் முகப்பிலும், பின்னாலும் அரசின் முத்திரை இருந்ததாக  முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த அரசு முத்திரை உண்மையானதா, போலியா?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்.


                     ​​​​​​​டெல்லி க்ரைம் பிராஞ்ச் விசாரணையில் டி.டி.வி. தினகரன்                

                           

சுகேஷ் சந்திரசேகர் சிக்கியுள்ள பல மோசடி  வழக்குகளில், ஜெயலலிதாவுக்கு ஆஜரான பி.குமார் எனும் வழக்கறிஞரே ஆஜரானதாக சொல்லப்படுகிறது. டி.டி.வி. தினகரனை விசாரித்த டெல்லி போலீசார், மேற்கொண்டு வழக்கறிஞர் பி.குமார்,  தினகரனுக்கு வேண்டப்பட்ட இன்னொரு வழக்கறிஞர் கோபி, டி.டி.வி. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன்  உள்ளிட்ட மேலும் மூவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். "தினகரன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்... 'இரட்டை இலைச் சின்னத்தை இந்த உள்ளாட்சித் தேர்தலுக்குள் பெற்றுவிட்டால், போதும்' என்ற அவசரம் அவருடைய தொலைபேசி உரையாடலில் அப்பட்டமாகத் தெரிகிறது. பல அணிகளாக கட்சி சிதறியிருந்தாலும், இரட்டை இலை கைக்குவந்துவிட்டால் அனைத்தையும் சரிசெய்து விடலாம் என்ற நம்பிக்கையில்தான் அவரே நேரடியாக இதில் தலையிட்டிருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் சந்திப்பதற்காக தினகரன் எந்த ஹோட்டலில் வந்து காத்திருந்தார், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது யார் போன்ற மொத்த விபரங்களும் சாட்சிகளாக கைவசம் உள்ளது. முதல்நாள் விசாரணையில் தினகரனை கொஞ்சம் விட்டுப் பிடித்தோம். அடுத்தநாள் விசாரணையின் போது, 'எங்களிடம் இந்த ஆவணங்கள் உள்ளது' என்று சிலவற்றை மட்டுமே சொன்னோம். தினகரன் அதன்பின்னர் ஏதும் பேசவில்லை. அமைதியாகிவிட்டார்.
'என்னிடம் போனில் பேசிய குரல், மிகவும் நெருக்கமான ஒரு நீதிபதியின் குரல். அதனால்தான்  அவரிடம்,  ஏதாவது இதில் உதவ முடியுமா? என்று கேட்டேன்' என்று   தன்னுடைய போன் உரையாடலை ஏறக்குறைய தினகரன்  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  வாய்ஸ் டெஸ்ட்டுக்கு அந்தக் குரலை அனுப்பி வைத்துள்ளதோடு இது தொடர்பாக பல விஷயங்களை பாதுகாத்து  வருகிறோம். அனைத்து கேள்விகளுக்கும், இப்போது  'ஆம்' என்றேதான்  தினகரன் தலையை ஆட்டுகிறார். ஆம் என்றுதான் விசாரணை ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.  வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (28-ம்தேதி) தினகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவோம். விசாரணைக்கு உரிய முகாந்திரங்கள் இருப்பதை கோர்ட்டில் தெரிவித்த காரணத்தால்தான்  எட்டுநாட்கள் விசாரித்த பின்னரும் எங்கள் கோரிக்கையை கோர்ட் ஏற்று சுகேஷ் சந்திரசேகரை மேலும் முன்றுநாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க  கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. தினகரன் கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.  இரட்டை இலை மீட்பு என்ற அவரது நோக்கம்தான் உறுதியாக சொல்ல முடியாத அளவில் இருக்கிறது." என்று நம்பிக்கையுடன் சொல்கிறது டெல்லி விசாரணைத் தரப்பு. சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் எப்படியாவது வென்று அடுத்த அத்தியாயத்தை எழுதலாம் என்றிருந்த டி.டி.வி. தினகரன்,  தேர்தல் நிறுத்தம், இரட்டை இலை முடக்கம், சசிகலாவுக்கு தண்டனை என்று அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வருகிறார். நான்காவது சரிவாக அவரே கைது நடவடிக்கைக்குள் வரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 'இலை' யை மீட்கப் போய், தினகரன் தன்  'தலை' யைக் கொடுத்து இருப்பதுதான் புதிய திருப்பம்.

 - ந.பா.சேதுராமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!