வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (26/04/2017)

கடைசி தொடர்பு:15:43 (26/04/2017)

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க டி.டி.வி.தினகரன் ரகசியத் திட்டம்?

டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். சமீபத்தில், டெல்லி போலீஸில் சிக்கிய சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தொடர்ந்து, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனனிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. தினகரனின் செல்போன் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

தினகரன், விசாரணைக்காக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரானார். கடந்த நான்கு நாள்களாக தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். நான்கு நாள்களில் 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், தினகரன் டெல்லி குற்றப்பரிவு காவல்துறையினரால் நேற்று நள்ளிரவு கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம், தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்ட சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்ட தினகரனும் சிறைக்குச் சென்றுவிட்டதால், அ.தி.மு.க-வில் சிக்கலான சூழல் நிலவிவருகிறது. இந்தச் சூழல் தினகரனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. வேண்டுமென்றே அ.தி.மு.கவின் ஒரு கோஷ்டிக்காக இதை பா.ஜ.க செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என்று கருதிய அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்தனராம். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களான தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, குணசேகரன், பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், கனகராஜ் உள்ளிட்ட சிலர் ஆளுநரிடம் இதைத் தெரிவிக்க முடிவுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை, இவர்கள் மும்பை செல்வதாக இருந்ததாம். ஆனால், தினகரனின் குடும்பத்தினருக்கு இந்த முடிவில் விருப்பம் இல்லாததால், எம்எல்ஏ-க்களின் மும்பைப் பயணம் ரத்தாகியுள்ளது.  தினகரனின் குடும்பத்தினர், இந்த முடிவுக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.