வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (26/04/2017)

கடைசி தொடர்பு:14:59 (26/04/2017)

நள்ளிரவில் நடந்த ரகசியப் பேச்சு! பன்னீர்செல்வம்- பழனிசாமி அடுத்த மூவ்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி அணியினர், நள்ளிரவில் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இரு அணியினர் நடத்திய பேச்சுவார்த்தை, சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, தீபா அணி எனப் பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து இரு தரப்பினர், இரட்டை இலைச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இரு தரப்பினரின் வாதத்துக்குப் பின்னர், அ.தி.மு.க பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிரம்காட்டி வருகின்றனர்.

இதனிடையே, கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்ற உள்ளதாகவும், இதனால் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து தள்ளிவைப்பதாகவும் முதல்வர் பழனிசாமி அணி அறிவித்தது. இதை வரவேற்ற பன்னீர்செல்வம் அணியினர், சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம்குறித்து சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்ய வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தனர். பன்னீர்செல்வம் அணியினரின் இந்த நிபந்தனையால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாக டெல்லியில் இடைத்தரகர் சுகேஷை காவல்துறையினர் கைதுசெய்தனர். சுகேஷின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தினகரன்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, நேரில் வந்து அவருக்கு சம்மன் வழங்கினர். இந்தச் சம்மனைத் தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தினகரனுக்கு டெல்லி காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லிக்குச் சென்ற தினகரனிடம், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே, சுகேஷ்- தினகரன் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவைக் காவல்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தனர். இந்த நிலையில், நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு, தினகரனை நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்தக் கைது நடவடிக்கை, அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையவைத்தது.

முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த நிலையில், இரு அணி தரப்பினரும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பழனிசாமி அணி சார்பில் செங்கோட்டையனும், வைத்திலிங்கமும் பன்னீர்செல்வம் அணி சார்பில் நத்தம் விஸ்வநாதனும், கே.பி.முனுசாமியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நள்ளிரவு ஒரு மணி வரை இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, இணைப்புகுறித்து அவர்கள் விரிவாகப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இரு அணி தரப்பினரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு அணி தரப்பிலும் தலா  ஏழு பேர் பங்கேற்க உள்ளனர். தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இரு அணி யினரும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது, தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.