வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (26/04/2017)

கடைசி தொடர்பு:14:54 (26/04/2017)

நீட் தேர்வு! தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்.

'நீட் தேர்வுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, தற்போது சம்மதிக்கிறதா...  என்று கடுமையாகக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அரசில் ஸ்திரத்தன்மை இல்லாததால் நீட் தேர்வை அரசு ஏற்றுள்ளது என்றும், நீட் தேர்வு தொடர்பாக எம்சிஐ-யும் தமிழக அரசும் நாளை விரிவான பதில்மனு தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவ மேற்படிப்பை எம்சிஐ விதிகளின்படி நடத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக, அரசு மருத்துவர்கள் 13 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர்.

அதில், மலைப்பகுதி கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மார்க் வழங்கவில்லை என்றும், தொலைதூர கிராமங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, தற்போது சம்மதிக்கிறதா... என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசில் ஸ்திரத்தன்மை இல்லாததால் நீட் தேர்வை அரசு ஏற்றுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும், நீட் தேர்வு மதிப்பெண்ணை அடிப்படை மார்க்காக எடுப்பதாக அரசு கூறுகிறதே... என்று வினா எழுப்பிய நீதிபதிகள், மருத்துவ மேற்படிப்பில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது பற்றி எம்சிஐ-யும், தமிழக அரசும் விரிவான பதில் மனுவை நாளை தாக்கல்செய்ய உத்தரவிட்டதோடு, அனைவருக்கும் சமமான மதிப்பெண் வழங்குவது குறித்தும் பதில் தர வேண்டும்' என்றும் ஆணை பிறப்பித்தனர்.