வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (26/04/2017)

கடைசி தொடர்பு:17:01 (26/04/2017)

அவர்கள் அடிக்க வருகிறார்கள்; இவர்கள் பின்னாடியே வருகிறோம் என்கிறார்கள்- குமுறும் ஜெயங்கொண்டம் மக்கள்

காவிரி நீருக்காக தினம் தினம் விவசாயிகள் இங்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவிரியே அழிந்துகொண்டிருக்கிறது. இது யாருக்கும் தெரியவில்லையா. மணல் குவாரி என்ற பெயரில் எங்களுடைய சந்ததியே அழிந்துகொண்டிருக்கிறது. தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளும் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு எங்களைப் பாழ்ங்கிணற்றில் தள்ளுகிறார்கள். இனி நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பல வகையான போராட்டத்தையும் நடத்திவிட்டோம். எந்தப் புண்ணியமுமில்லை. எங்களது கிராமத்தையே காலிசெய்துவிட்டு ஆற்றில் வீடு கட்டி வாழப்போகிறோம் என்று கலெக்டரிடம் மனுக்கொடுக்க உள்ளோம் என்று அடுத்த கட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர் ஜெயங்கொண்டம் மக்கள்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கிராமத்தில் உள்ளவர்கள் மணல் குவாரியை எதிர்த்துப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசினோம். விவசாயி மதன் என்பவரிடம் பேசினோம். ”இந்த மணல் குவாரியால் விவசாயிகள் வாழ்வதா சாவதா என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். டெல்டா பகுதியான திருமானூர், தா.பழூர் இப்போது மணல் குவாரியின் பிடியில் சிக்கிச் சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அதிகாரிகள்தான். தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் தென்கச்சிப்பெருமாள் நத்தம், வாளைகுறிச்சி என்ற இரண்டு கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. வாளைக்குறிச்சி கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்த அளவைவிட முப்பது அடிக்கும் மேல் ஆழமாக ஆற்றுமணலை வெட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. முப்பது அடியில் கிடைத்த தண்ணீர் இப்போது 150 அடிக்கும் மேல் போய்விட்டது. இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விவசாயத்துக்கும் நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்தான் மண் எடுக்க வேண்டிய நேரம். ஆனால், இவர்கள் நேரங்களை முழுமையாகப் பின்பற்றுவது கிடையாது. எப்போது வேண்டுமானாலும் வரைமுறையில்லாமல் மண்ணை வெட்டி எடுக்கிறார்கள்.

மண்ணை ஏற்றிச் செல்ல ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் இப்பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கிறது. மணலை ஏற்ற லாரிகள் போட்டி போட்டுக்கொண்டு  வேகமாக வருவதால் மனிதர்கள் உட்பட கால்நடைகளும் விபத்தில் இறந்துள்ளன. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குவாரி தரப்பினரிடம் சொன்னால் ஆட்களை வைத்து அடிக்க வருகிறார்கள். அதிகாரிகளிடம் சொன்னால் நீங்கள்போங்க பின்னாடியே வருகிறோம் என்கிறார்கள். வாளைக்குறிச்சியில் மண்ணை எடுத்தது போதாதென்று மேலகுடிக்காடு பகுதிகளிலும் குவாரியைத் தொடங்கியுள்ளார்கள். இந்தப் பகுதிகளையே பாலைவனம் ஆக்கப்போகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. பணம் படைத்தவர்களை சட்டத்தால் ஒன்றுமே செய்யமுடியாதா" என்றார் வேதனையுடன்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் விழிப்பு உணர்வு சேவை சங்கத்தின் தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம். "அரியலூர் மக்கள் எவ்வளவு பிரச்னையைதான் சந்திப்பார்கள். ஒரு பக்கம் மணல் குவாரியால் பிரச்னை; இன்னொரு பக்கம் சிமென்ட் ஆலையால் பிரச்னை; மற்றொரு பக்கம் மீத்தேன் பிரச்னை. எங்கள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சுதந்திரமாக அதிகாரிகளின் துணையோடு மணல் கொள்ளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாளைக்குறிச்சி கிராமத்தில் அரசு நிர்யிணத்த அளவு 500 மீட்டர் சுற்றளவு 2 மீட்டர் ஆழம் வரையிலும்தான் மணல் எடுக்கலாம். ஆனால், இவர்கள் 30 அடி ஆழத்துக்கு மூன்று கிராமத்தைத் தாண்டி மணல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது. ஆற்றில் இரண்டு ஜேசிபி வாகனம்தான் மணல் அள்ளவேண்டும். ஆனால், இங்கு பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபியை வைத்து மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதை என்றாவது ஒருநாள் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்களா. இங்கு தாசில்தாரிடம் மனுக் கொடுத்தால், அளவுக்கு அதிகமாக மணல் அள்ள வாய்ப்பில்லையே என்று சொல்கிறார். பொதுப்பணித்துறை ஏ.ஈ தெய்வீகத்திடம் புகார் கொடுத்தால் நீங்கள் மனுவைக் கொடுத்துட்டுப் போங்க நான் பார்த்துக்கிறேன் என்கிறார். இதுவரைக்கும் அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. கலெக்டர் முதல் காவலாளி வரையிலும் பணம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் யாரிடம் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்கிறார்கள் குவாரி தரப்பினர்.

கர்நாடகாவில் காவிரி நூறு கிலோ மீட்டர் வரை பாய்கிறது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டியுள்ளார்கள். ஆனால் இங்கு இருநூறு கிலோமீட்டர் வரையிலும் காவிரி பாய்கிறது. ஒரு தடுப்பணைகூட கட்டவில்லை. இதற்கும் காரணம் அரசியல்தான். தடுப்பணைகள் கட்டினால் மணல்குவாரியின் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கமுடியாது என்பதற்காகவே இங்குள்ள அரசியல்வாதிகள் தடுப்பணைகள் கட்டமறுக்கிறார்கள். கேரளாவில் 45க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அங்கிருந்து மண்ணை எடுக்காமல், மாற்று முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாம் இங்கிருந்து வெளிநாடு, வெளி மாநிலத்துக்கு மணலை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். கேவலம் பணத்துக்காக அடுத்த சந்ததிக்கு நஞ்சை விளைவிக்கிறார்கள் இந்த அதிகாரிகள்" எனக் கொந்தளித்தார்.

குவாரி தரப்பில் கரிகாலன் என்பவரிடம் பேசினோம். "நாங்கள் அரசின்  விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறோம். நாங்கள் விதிமுறை மீறி மணல் அள்ளுகிறோம் என்று சொல்வது பொய்” என்றார். நாம் அவர்களை மடக்கிக் கேள்வி கேட்டபோது உங்களிடம் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்று முடித்தார்.

தகவலைச் சொல்லி கலெக்டர் சரவணவேல்ராஜிடம் பேசினோம். "முழுவதையும் கேட்டுக்கொண்டு நானே சம்பவ இடத்துக்குச் செல்கிறேன். குழுவை அமைத்து ஆய்வு செய்யச் சொல்கிறேன். விதிமுறையை மீறிச் செயல்பட்டுள்ளார்கள் என்றால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றார் உறுதியாக.

- எம்.திலீபன்

படங்கள்: எஸ்.ராபர்ட்