வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (26/04/2017)

கடைசி தொடர்பு:21:24 (26/04/2017)

என்னய்யா பண்ணார் என் கட்சிக்காரர்? - செல்லூர் ராஜு ரசிகனின் கடிதம்! #VikatanFun

ஊர்ப்பட்ட டிரெண்டிங், மீம்ஸ், சமூக வலைதளங்களில் மரண கலாய் என்று எட்டுத்திக்கும் உள்ள மக்களுக்கு சமீபத்திய பொழுதுபோக்கு வைகை அணையில் 'தெர்மாகோல் விட்ட' அமைச்சர் செல்லூர் ராஜுதான். இன்னும் ஒரு மாமாங்கத்துக்கு அவரை 'வச்சு' செய்வார்கள் போலிருக்கு. நமக்கு மட்டும் அவர் செஞ்ச வேலை பிம்பிலிக்கி பிலாப்பி மாதிரி தெரியலை. அவர் செயலுக்கு பின்னே ஆயிரம் அர்த்தம் இருக்கிறதாவே படுது. நாணயம்ன்னா ரெண்டு பக்கம் இருக்குல, அதுபோல் அவர் செஞ்ச காரியத்தை பச்சை தண்ணி பல்லுல படாம மல்லாக்க படுத்து விட்டத்தை வெறிச்சு யோசிச்சதுல... அவர் தெர்மாகோல் விட்டது மூலமா என்னென்ன நல்ல விஷயம் பண்ணி இருக்கிறார்ன்னு புரிஞ்சுச்சு. உங்களுக்கும் அப்படி தோணுதான்னு பாருங்க மக்களே..!

செல்லூர் ராஜு

மனுசப் பிறவின்னாலே, நாலு எழுத்து படிச்சாதான் அறிவு வளரும். அறிவு வந்தாதான் சிந்தனை பெருகும். உண்டா இல்லையா? அப்படிப்பட்ட அறிவுக்கு யாரு அதிபதி? 'நம்ம சரஸ்வதி'ன்னு கைசூப்புற பச்சைக் 'கொயந்த' கூட சொல்லிப்புடும். அந்த சரஸ்வதி வீற்றிருப்பது தாமரையில்தானே. அதுவும் வெள்ளைத் தாமரையில். அந்த தாமரை எங்கே இருக்கும்? நீர்நிலைகளில். அங்கேதான் செல்லூர் ராஜு நமக்கு அறிவு பெருக வைக்கும் பொருட்டு சிந்தித்திருக்கிறார். வெள்ளை தாமரையில் சரஸ்வதி வீற்றிருந்தது அந்த காலம். இந்த காலத்தில் நாகரிகம் பெருகி நவீன சரஸ்வதி ஆகிவிட்ட அவளை போற்றும்விதமாகவே வெள்ளை கலர் தெர்மாகோல்களை விட்டிருக்கிறார் அமைச்சர். 
 
அடுத்த பாயின்ட்டையும் கல்வி சார்ந்தே சிந்தித்திருக்கிறார் மாண்புமிகு அமைச்சர். இப்ப, மனுசனால இயற்கை இயற்கையாவே இல்லை. மழை பெய்யுறப்ப வெயில் அடிக்குது. வெயில் அடிக்க வேண்டிய நேரத்துல காத்து அடிக்குது. காத்து அடிக்க வேண்டிய நேரத்துல.....வார்த்தை வரலை, வெறும் காத்துதான் நமக்கு வருது. இப்ப, மேற்சொன்ன எதுவுமே இல்லாம இயற்கை ஸ்தம்பித்து போயிட்டுது. இந்த சூழலில்தான், ஆர்க்கிமிடிஸின் 'மிதவை தத்துவம்' செயல்பாட்டில் இருக்கா, இல்லையான்னு அமைச்சருக்கு சந்தேகம் வந்திருக்கு. காரணம், சமீபத்தில் சென்னை துறைமுகத்தில் ராணுவ கப்பல் வந்து, முதல்வர் தொடங்கி அமைச்சர் பெருமக்கள் வரை சுத்தி பார்க்கும் பேறு பெற்றார்கள். அதே போல அணைகளில் விட்டால் கப்பல் மிதக்குமா, மூழ்குமான்னு ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை சரிபார்க்க வைகை அணையில் தெர்மாகோல்களை வைத்து அமைச்சர் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார். 
 
நெஞ்சை நெகிழ வைக்கிற பாயின்ட் இது. அமைச்சரிடம் நான் பாரதிக்கு இருந்த 'ஜீவகாருண்ய' உணர்வை பார்க்கிறேன், பாராட்டுகிறேன். முன்னாடி ஆறு, குளம், கம்மாய்ன்னு எங்கும் மீன் நிறைஞ்சுருக்கும். ஆனால் மனுசன் பயன்படுத்துன செயற்கை உரங்களால இப்போ எங்கும் எதிலும் மீன் இல்லை. அவ்வளவு ஏன், 'கடல்லயே இல்லையாம்' கதையாகிடும் போலிருக்கு நிலைமை. ஆனால், வைகையில் மீன்கள் துள்ளி விளையாண்டிருக்கு. அதை கொக்கு, குருவி, கோட்டான், பருந்திடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டே தெர்மாகோல் பந்தல் போட்டு மறைக்கப் பார்த்திருக்கிறார். அதுங்க கரை ஒதுங்கினாலும், அமைச்சரின் ஜீவகாருண்ய உணர்வு கரை தட்டலையேப்பு. சொல்லச் சொல்ல சிலிர்க்குதே!
 
தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாறின மாதிரியே முந்தின பாயின்ட்டில் இருந்து இப்போ சொல்லப் போற பாயின்ட்டில் சடாரென்று மாறுபடுகிறார் அமைச்சர். எங்கும் மீன் இல்லையே, அதனால், மீனவர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது. வைகை அணையில் மீன் பிடிக்கவும் முடியலை. இப்ப உள்ள மீன்களெல்லாம் கழுவுற மீனில் நழுவுற மீனா இருக்கு. அதனால், மீனவர்களுக்கு ஈஸியாக மீன் பிடிக்கவும், வாழ்வு தரவும் ஐடியா பண்ணி தெர்மாகோல்களை அணையில் விட்டிருக்கிறார். அதாவது, சதத்தை கடந்து அடிக்கிற டிகிரி வெயில்ல, மீன்களெல்லாம் சூடு தாங்காம அல்லாடுது. அதனால், அவைகள் அமைச்சர் போட்ட தெர்மாகோல்களின் கீழே ஒதுங்கும். அந்த தெர்மாகோல்கள் கரைக்கு காற்றில் ஒதுங்கும்போது, அந்த அப்பாவி மீன்களும் விபரீதம் புரியாம தெர்மாகோல்களோடு சேர்ந்து கரைக்கு வரும். அப்புறம் என்ன, மீனவர்கள் வலை இல்லாமல், தூண்டில் போடாமல், சிரமம் இல்லாமல் ஈஸியா மீன்களை கரையிலேயே கண்டெடுக்கும் யோகம் ஏற்படும் இல்லையா? அமைச்சரின் இந்த தொலைநோக்கு பார்வை உங்களுக்கு தொல்லை நோக்கு பார்வையா? 'முந்தைய பாயின்ட்டில் மீன்களைப் பறவைகளில் இருந்து பாதுகாக்க உதவினார், இங்கே மீனவர்கள் கையில் மாட்ட வழி பண்ணிட்டார்'ன்னு நீங்க அவர்மேல கோபப்படலாம். அதுக்கு அவர், 'கொன்னா பாவம் தின்னா போச்சு'ன்னு காந்திய கொள்கையை கையில் எடுத்துக் கதைக்கலாம். நமக்கேன் வம்பு அப்பு.

'அமைச்சர் எதையுமே சிம்பாலிக்கா சொல்லித்தான் பழக்கம்'ன்னு அவரோடு பழகும் தோழர் பெருமக்கள் சொல்கிறார்கள். அதாவது, வெள்ளை என்றால் சமாதானத்தின் குறியீடு இல்லையா? சமாதானத்துக்கு தயாராவது எங்களுக்கு 'தண்ணிப்பட்ட பாடு'ன்னு இந்த வைகை அணை தெர்மாகோல் மூலமா உணர்த்த வருகிறார். நம் நாடு சார்பாக சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 'சண்டைக்கோழி' நாடுகளுக்கு உணர்த்துகிறார். அடுத்ததாக, தான் சார்ந்த கட்சியில் இருந்து பிரிந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணிகள் இணைய பரஸ்பரம் சமாதான கொடிகள் வீசுகிறார்கள் இல்லையா?. அதனால் தான் சார்ந்த இ.பி.எஸ் அணி சார்பில் ஓ.பி.எஸ் அணிக்கு, 'சமாதானத்துக்குத் தயார்' என்று சிக்னல் கொடுத்து,'வெள்ளை தெர்மாகோல் எறிந்த வேந்தன்' என்று அன்போடு தான் அழைக்கப்படதான் அவரின் இந்த முயற்சி. வெள்ளை நல்லது.
 
இங்கேயும் அமைச்சரின் சகல ஜீவராசிகள் மீதான கரிசனமே தொக்கி நிக்குது. நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினம் தவளை. நீரில் இருக்கும்போது ஓகே. ஆனால், நிலத்துக்கு போகணும்ன்னா, அவ்வளவு பெரிய அணையில் இருந்து கரைக்கு போகுறதுக்குள்ள அந்த இனத்துக்கே கால் வலி வந்துடுதாம். அதனால், அணையின் நடு மையத்தில் வாழும் தவளை இனங்கள் கூட்டம் கூட்டமாக கரைக்கு போய் திரும்ப வசதியாக தெர்மாகோல்களை விட்டாராம். தட் கொசுவுக்கு எல்லாம் கொடி பிடிக்கிறாரு மொமென்ட்!
 
எல்லாத்தையும்விட, தான் சார்ந்த அ.தி.மு.க அல்லாட்டத்தில் இருக்க, எதிர்க்கட்சியான சூரிய கட்சி அ.தி.மு.கவை சுட்டெரிக்க பார்க்கிறதா கருதும் அமைச்சர், 'சூரியன் நீங்க தண்ணீர்போல உலகம் முழுக்க பரவி இருக்கும் பெரிய கட்சியான எங்க கட்சியை குலைக்க, குடிக்க பார்த்தா, தெர்மாகோல்கள் வச்சு தடுப்போம்'ன்னு ஸ்டாலினுக்கு விடும் கடும் எச்சரிக்கையே இந்த தெர்மாகோல் வீசல் விவகாரம் என்று உளவுத்துறையில் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
 
அடுத்து, அரபிக்கடல்ல லாரி டயர்கள் மிதக்கவிடும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொள்ள இருக்கிறாராம். அதனால், நாம அவரோட அடுத்த 'மீம்ஸில்' சந்திப்போம். நன்றி வணக்கம்.

துரை.வேம்பையன்


டிரெண்டிங் @ விகடன்