வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (27/04/2017)

கடைசி தொடர்பு:21:22 (27/04/2017)

‘மிடாஸுக்காக ஜெயலலிதா செய்யாததை, நான் செய்தேன்!’ - பலம் காட்டும் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

 

‘அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் எப்போது இணையும்?' என்ற கேள்விக்கு இரண்டு தரப்பிலும் உறுதியான பதில்கள் இல்லை.' பன்னீர்செல்வத்துடன் இணைவதைக் காட்டிலும், தன்னை பலப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சரவையைத் தாண்டி சமுதாயரீதியாகவும் சில திட்டங்களைத் தீட்டி வருகிறார்' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

‘இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது’ என்ற ஒற்றைப் புள்ளியில் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் மையம் கொண்டுள்ளன. ‘சசிகலா குடும்பத்தை கட்சியில் நீக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும்; ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணையை முதல்வர் கோர வேண்டும்’ என்ற இரண்டு நிபந்தனைகளில் பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி தெளிவாக இருக்கிறார். நேற்று காலை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டதை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனாலும், முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. இதுகுறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி அணியின் வைத்திலிங்கம், 'இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்கும்' எனப் பதில் அளித்தார். “அணிகள் இணைப்பின் மூலம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதில் எந்தவித சிரமமும் இருக்கப் போவதில்லை. முனுசாமி தரப்பினரின் பிடிவாதத்தால்தான் பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டது. ' பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்வர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானித்துவிடலாம்' என்றெல்லாம் பேசுகின்றனர். 'பதவியை விட்டுத் தரும் முடிவில் இங்கு யாரும் இல்லை' என்பதை பன்னீர்செல்வம் அணிக்கு உறுதியாகத் தெரிவித்துவிட்டோம். முதல்வர் பதவியை நிறைவு செய்துவிட்டு, ஒதுங்கிக் கொள்ளாமல் வரும் காலங்களிலும் சிறந்த முதல்வராக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

“கொங்கு மண்டலத்தைத் தாண்டி அரசியல் செய்தால்தான், அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பைப் பெற முடியும் என நினைக்கிறார் பழனிசாமி. சட்டமன்றத் தேர்தல்கள் வரும்போதெல்லாம் கொங்கு விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது, தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கும் கோரிக்கைதான். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம்' என தேர்தல் முடியும் வரையில் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு இந்தக் கோரிக்கையை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்குப் பெருவாரியான வெற்றி கிடைப்பதற்கும், இந்த வாக்குறுதி முக்கியமானதாக இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 20-ம் தேதி தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்துக்கு  அனுமதி அளித்தார் பழனிசாமி.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார்  8 கோடி தென்னை மரங்களில் இருக்கின்றன. 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றது. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நீரா பானத்தின் மூலம் ஒரு தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் நிரம்பி இருப்பதால், கள் இயக்க நிர்வாகிகளும் மதுவுக்கு மாற்றாக இதை முன்னிறுத்தினர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான், அனுமதி கொடுத்தார் பழனிசாமி" என விவரித்தவர், 

பன்னீர்செல்வம்“அதேபோல், நாடார் சமுதாயத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள, முக்கிய நடிகர் ஒருவர் தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருக்கின்றனர். அந்த நடிகரிடம் பேசிய கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், ‘நீங்கள் ஏழு வருடமாக அ.தி.மு.க அணியில் இருந்துவிட்டீர்கள். இதுவரையில் கஷ்டப்பட்டது போதும். முழுதாக எங்கள் பக்கம் வந்துவிடுங்கள். நல்ல பதவி வழங்குகிறோம்' என உறுதி அளித்துள்ளனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவர் வருவதன் மூலம் கொங்கு மண்டல நாடார்கள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என நம்புகிறார் பழனிசாமி. பன்னீர்செல்வம் அணியைப் பயன்படுத்தி, தினகரன் எதிர்ப்பு இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்துவதுதான் அவருடைய மிக முக்கியமான திட்டம்.

இதுகுறித்து அமைச்சர் ஒருவரிடம் பேசிய பழனிசாமி, ‘பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை அவருக்கு ஆளுநர் வழங்கியிருப்பார். அப்படி ஒரு சூழல் வந்திருந்தால், ஆட்சி கவிழ்ப்பு பயத்திலேயே எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவருக்கு வாக்களித்திருப்பார்கள். பா.ஜ.கவின் அதிரடிகளால் கார்டனில் இருந்தவர்களும் அந்த நேரத்தில் அச்சத்துடன் இருந்தார்கள். இன்றைக்கும் அதே  சூழ்நிலைதான் இருக்கிறது. என்னுடைய பதவியும் பறிபோய்விட்டால், அரசின் நிலைப்புத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். தற்போது அரசியலும் சட்டமும் எனக்குச் சாதகமாக உள்ளது. எம்.எல்.ஏக்களும் என் பக்கம்தான் உள்ளனர். நீரா பானத்துக்கு அனுமதி கொடுத்ததால், கொங்கு மண்டலத்தில் தொகுதிக்கு 16 ஆயிரம் ஓட்டு நிச்சயம் கிடைக்கும். அந்த ஓட்டு என்னைப் பலப்படுத்தும். மிடாஸ் சாராய ஆலையை மனதில் வைத்துத்தான், நீரா பானத்துக்கு ஜெயலலிதா அனுமதி கொடுக்கவில்லை. அவர் செய்யாததை நான் நிறைவேற்றியிருக்கிறேன். வரும் நாட்களில் பனைமரத்துக் கீழேயே கள்ளை இறக்குவதற்கும் அனுமதி கொடுக்கும் முடிவில் இருக்கிறேன். இதன்மூலம் நாடார் சமுதாய மக்களும் என்னை ஆதரிப்பார்கள்' என மனம் திறந்து பேசியிருக்கிறார். தற்போது திரையரங்குகளிலும் பழனிசாமி அரசின் செயல்பாடுகளை, செய்தி விளம்பரத் துறை விவரிக்கத் தொடங்கிவிட்டது. பதவியை விட்டுவிடாமல் இணைப்பு முயற்சிகளைப் பேசத் தொடங்கியிருக்கிறார் பழனிசாமி" என்றார் விரிவாக. 

ஆனால், பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர்களோ, “சசிகலாவால் முன்னிறுத்தப்பட்டவர் என்ற ஒரு காரணமே, பழனிசாமி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். சசிகலா பெயரைப் பயன்படுத்தி வாக்கு வாங்க முடியாது என்பதால்தான், இணைப்புக்குப் பச்சைக் கொடி காட்டுகிறார்கள். எங்கள் நிலைமை அப்படி இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால்தான், 'பேச்சுவார்த்தையின்போது அனைத்தையும் முடிவு செய்து கொள்ளலாம்' என வலியுறுத்துகிறோம். பன்னீர்செல்வத்தின் ஆட்சி எப்படி இருந்தது என்பது மக்களுக்கே தெரியும்" என்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்