வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (27/04/2017)

கடைசி தொடர்பு:12:40 (27/04/2017)

அமைச்சர் செல்லூர் ராஜுவின் மிகப்பெரிய கவலை இதுதான்!

'அ.தி.மு.க இன்று, தாயும் தகப்பனும் இல்லாத இயக்கமாக இருக்கிறது' என்று கவலையுடன் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, 'அம்மா பாடுபட்டு உருவாக்கிய அ.தி.மு.க, இன்றைக்கு ஒரே கட்சியாக இணைந்து செயல்பட வேண்டும்' என்று மக்கள் நினைப்பதாகக் கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று, செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. தொடக்க கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் செயல்பாடுகளையெல்லாம் ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதாவது, வலைதளம் மூலமாக அனைத்து கூட்டுறவு சங்கங்களும் இணைக்கப்பட்டு, அது எந்த அளவுக்கு சிறப்பாக இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதைத் தொடர்ந்து, 'இரு அணியினருக்குமிடையே பேச்சுவார்த்தை எப்போது நடக்கும்' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, 'அ.தி.மு.க இன்று, தாயும் தகப்பனும் இல்லாத இயக்கமாக இருக்கிறது. எங்க அம்மா இல்லை. அம்மா பாடுபட்டு உருவாக்கிய அ.தி.மு.க, இன்றைக்கு ஒரே கட்சியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று மக்களும், தொண்டர்களும் நினைக்கிறார்கள். இவர்களின் நினைப்பை இரு தலைவர்களிடத்திலும் பிரதிபலித்திருக்கிறது. நிச்சயமாக இரு இயக்கங்களும் ஒன்றுபடும். அதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அ.தி.மு.க ஆட்சிதான் நான்கு ஆண்டுகள் இருக்கும். அடுத்து வருகிற 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும். நிச்சயமாக அடுத்த தேர்தலில் மாற்றுக் கட்சியினருக்கு வாய்ப்பே இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். இதற்கான பணிகளை இருஅணியினரும் செய்துகொண்டிருக்கிறார்கள்' என்றார்.

தலைமைக்கழகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. மாவட்ட கட்சி அலுவலகங்களில் உள்ள சசிகலா பேனர்கள் அகற்றப்படுமா?

''இதற்கு, குழு ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவினர்தான் இதுபற்றிப் பேசுவார்கள். முதல்வர் பழனிசாமி, தனிப்பட்ட கருத்துகளை யாரும் செல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார். முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க எந்தக் கருத்தும் சொல்லவிரும்பவில்லை. ஆட்சி பற்றியும், என்னுடைய துறைபற்றியும்  நீங்கள் கேட்பீர்களானால், அதைப் பற்றி விரிவாக, விளக்கமாக சொல்லத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.