“இனப்படுகொலைக்கு நீதி கேட்காதவர்கள், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கிறார்கள்!” - சீமான் | Naam Thamizhar Chief Seeman Speaks about recent political scenario

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (28/04/2017)

கடைசி தொடர்பு:13:35 (28/04/2017)

“இனப்படுகொலைக்கு நீதி கேட்காதவர்கள், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கிறார்கள்!” - சீமான்

.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை, அனைத்துக்கட்சிப் போராட்டம், தினகரன் கைது... என கொளுத்தும் வெயிலுக்குப் போட்டியாக தகித்துக் கிடக்கும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசுகிறார் 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்...

“ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ ‘அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைப்புதான் நாட்டின் முதன்மையானப் பிரச்னை' என்பதுபோல காட்டிவருகிறார்கள். கடந்த 10 நாள்களாக, 'நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்... அவர்கள் இறங்கிவரவில்லை... சுமுகமான சூழல் உருவாகலாம்...' என்று மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுவா நாட்டில் பிரச்னை? தமிழ்நாடே தண்ணீர் பிரச்னையில் தவித்துக்கிடக்கிறது. வட்டாட்சியர் காலில் விழுந்து கும்பிட்டு நம் அக்காவும் தங்கையும் அம்மாவும் 'ஒரு குடம் தண்ணீர் கொடுங்க சாமி...' என்று கதறுகிறார்கள். நாடு முழுக்க நடக்கும் கொடுமை இது... இதுபற்றிய அக்கறையோ அறிவோ இங்கே ஆள்பவர்களுக்கு இருக்கிறதா?

ஜெர்மனும், ஜப்பானும் நீர்ப்பரப்புகள் மேல் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை அமைத்து நீர் ஆவியாவதைத் தடுப்பதோடு மின்சாரமும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோ இப்போதுதான் ஆவியைத் தடுக்க தெர்மாகோல் போட்டு மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

சீமான்

இந்தப் பேச்சுவார்த்தையில் முதல் நிபந்தனையாக, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கிறார்களாம். லட்சக்கணக்கில் என் இன மக்களைக் கொன்றொழித்ததற்கு நீதி கேட்க துப்பில்லை... நூற்றுக்கணக்கில் என் மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறான்... அதற்கு நீதி கேட்கவில்லை.... 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செத்திருக்கிறார்கள் அதற்கு நீதியும் இல்லை; நிதியும் இல்லை. 20 தமிழர்களை ஆந்திரக் காட்டுக்குள் வைத்து சுட்டுக்கொன்றார் சந்திரபாபு நாயுடு... அதற்கு நீதி கேட்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.... என்ன கொடுமை இது? நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?''

''வளமையான தொன்மையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறாரே....?''

''தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்தால், தமிழில் வழக்காடும் உரிமையைத் தந்துவிட வேண்டியதானே...? எல்லாமே நடிப்பு. தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம்... என எல்லாமே தமிழில் இருந்து பிறந்த கலப்பு மொழி. மொகலாயர் இந்த நாட்டை ஆளும்போது அவனுடைய ஆட்சி மொழி பாரசீகம். அந்த நேரத்தில், சமஸ்கிருத மொழியோடு பாரசீக மொழியைக் கலந்து பேசிப் பிறந்ததுதான் உருதுவும், இந்தி மொழியும். இந்தியாவிலேயே மிகவும் பிந்தைய மொழியாக இந்தி இருக்கிறது. அதேபோல், மூத்த மொழியாக தமிழ் இருக்கிறது. ஆனால், 'எல்லா தேசிய இன மொழிகளையும் கொன்றுவிடவேண்டும். நாடு முழுக்க ஒரே மொழியாக இந்தியைக் கொண்டுவந்துவிடவேண்டும்' என்றால், நாடு எப்படி இறையாண்மைமிக்க நாடாக இருக்கும்? என் அம்மாவை 'அம்மா என்று சொல்லாதே' என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

இந்தியாவிலேயே தூய இனமாக இருப்பது தமிழ் இனம் மட்டும்தான். இமயம் வரை பரந்து இருந்த இந்தக் கூட்டம் குறுகி குறுகி தமிழ்நாடாக சுருங்கி நிற்கிறது. இந்தத் தமிழ்நாட்டையும் குறிவைத்து இவர்கள் எதிர்ப்பதற்கு காரணம் இருக்கிறது. 
போர்த்துக்கீசியர், மொகலாயர், பிரிட்டிஷார், பிரெஞ்சுக்காரர்களில் ஆரம்பித்து மராட்டியர், தெலுங்கு நாயக்க மன்னர் என்று எல்லாப் பயல்களும் படையெடுத்து வந்து எங்களை ஆண்டு அடிமைப்படுத்தி, வளங்களையும் நிலங்களையும் சுரண்டி அழித்து கொள்ளையடித்துப் போனபின்னரும்கூட, இவன் இன்னமும் பண்பாடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான் என்றால் பயப்படுவானா இல்லையா? அதனால்தான் கூடிக் கருவறுக்கும் வேலைகளைச் செய்துவருகிறார் மோடி. ஆகச்சிறந்த மொழி என்று கூறும் ஐயா மோடி இந்த தமிழ் மொழிக்கு  நல்லது என்ன செய்திருக்கிறார்? வழக்காடு மொழி உரிமை, வழிபாட்டு உரிமை, படிக்கிற உரிமை... என்று எதையாவது செய்திருக்கிறாரா? இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆதரிக்கப்படுகிறதா? பாராளுமன்றத்துக்குள் தமிழிலேயே பேசுவதற்கு வழிவகையை செய்திருக்கிறீர்களா? இப்படி எதுவுமே செய்யாமல், ஆகச்சிறந்த மொழி தமிழ் என்பது யாரை ஏமாற்றுவதற்காக...?''

ஓ.பி.எஸ். - எடப்பாடி

 ''தமிழகப் பிரச்னைகளில், மத்திய பி.ஜே.பி அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இருக்கின்றனவா?'' 

''நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னமும் மக்கள் தங்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு போராடிவருகிறார்கள். வாயு எடுப்போம் அல்லது எடுக்கவில்லை என்பதை சொல்லாமலேயே காலம் கடத்தி வருகிறது அரசு. கேட்டால், 'மக்கள் கருத்தைக் கேட்போம்' என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். 'என் நிலத்தை, அதன் வளத்தை, நீரை நஞ்சாக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது' என்றுதான் நாங்கள் போராட்டம் நடத்தி சொல்லிவிட்டோமே... இன்னும் என்ன மக்கள் கருத்து வேண்டும்? இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 'மக்கள் கருத்து கேட்டே செயல்படுவோம்' என்று உள்ளே பேட்டி கொடுத்துவிட்டு, வெளியே வந்து, 'ஆறு மாதம் கழித்து வாயு எடுப்போம்' என்கிறார்கள். எதைத்தான் நாங்கள் நம்புவது?
விவசாயிகள் போராட்டம் 40 நாட்களைத் தாண்டி நடைபெற்றது. அந்தப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேறியதா? போராட்டம் முற்றுப்பெற்றதா? எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. ஆனால், எல்லாப் பிரச்னைக்கும் 'பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்கிறார்கள். காலக் கொடுமைடா...''

''விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி கலந்துகொள்ளவில்லையே...?''

''அனைத்துக்கட்சிப் போராட்டம் என்பதே ஒரு ஏமாற்று வேலை. இந்த ஐந்து வருடத்தில்தான் விவசாயி சாகிறானா? தி.மு.க ஆட்சியின்போது தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளை, 'கடன் தொல்லையால் சாகிறான்' என்று இவர்கள் சொல்லவில்லையா? காவிரி நதிநீர்ப் பிரச்னையில் உச்சநீதிமன்ற வழக்கை அன்றையப் பிரதமர் இந்திராகாந்தியின் பேச்சைக் கேட்டு திரும்பப் பெற்றது யார்? மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது யார்? எல்லாமே தி.மு.க -தான். இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்துகொண்டே தி.மு.க-வோடு போய் நின்று, 'கூட்டணிக்கான இடங்கள் முடிந்துவிட்டது' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். 'தமிழ்நாட்டின் மானத்தை மு.க.ஸ்டாலினால்தான் காப்பாற்ற முடியும்' என்று அண்ணன் திருமா சொல்கிறார். தமிழ்நாட்டின் மானத்தைக் கெடுத்ததே, ஸ்டாலினும் கருணாநிதியும்தான். கட்சி அலுவலகங்களில் நூலகம் திறக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்கிறார். அங்கே பொதுமனிதன் வந்து படிப்பானா? நல்லது செய்வதாக இருந்தால், தெருவுக்கு தெரு படிப்பகங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க ஆட்சியில், தெருவுக்குத் தெரு குடிப்பகங்களைத்தானே திறந்தீர்கள்...  மக்களிடம் இருக்கிற வறுமை, அதையொட்டி இருக்கிற அறியாமை, அதனால இருக்கிற மறதி... இந்த மூன்றையும் முதலீடாக வைத்து அரசியல் செய்பவர்கள் இவர்கள்.''

மோடி

''தற்போதைய தமிழக அரசியல் மாற்றங்களின் பின்னணியில், பி.ஜே.பி இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே...?''

''தமிழக அரசியலில், முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு. தினகரன் கைது என்பது அச்சுறுத்தல் நடவடிக்கை. நாளையே எவனோ ஒரு குற்றவாளியைப் பிடித்து, 'சீமான் இதைச் செய்யச்சொன்னார்' என்று சொல்லச் சொன்னால் சொல்லமாட்டானா? அப்போது என்னைக் கைது செய்து விசாரிக்கும்போது, 'நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஐயாதான் இதைச் செய்யச்சொன்னார்' என்று நான் சொல்லமாட்டேனா? ஆட்சியாளர்கள் நினைத்தால் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். 'என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்' என்று கூறியதாலேயே 'தேசத் துரோகி' என்று கூறி கருணாநிதி என்னைக் கைது செய்யவில்லையா?

உலகக் குற்றவாளி ஒருவனை வைத்து தினகரனுக்கு உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தும் வேலையைத்தானே செய்துவருகிறது மத்திய அரசு. பேசியதற்கான ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் அதனை வெளியிட வேண்டியதுதானே? அந்தப் பேச்சில், 'தேர்தல் ஆணையத்தில் இந்த அதிகாரி இருக்கிறார். அவரிடம் பேசிவிட்டேன். அவர் மூலம் சின்னத்தை பெற்றுத் தருகிறேன்' என்ற விவரமெல்லாம் இருக்கும்தானே...? பணம் கொடுத்தவரைப் பிடித்துவிட்டீர்கள். தரகரையும் பிடித்துவிட்டீர்கள். சரி... தேர்தல் ஆணையத்தில் இருந்துகொண்டு 'இதையெல்லாம் செய்து தருகிறேன்' என்று சொல்லிய ஆளையும் பிடிக்கவேண்டுமல்லவா? ஏன் பிடிக்கவில்லை? இதெல்லாம் உலகத்துக்கே தெரியும்.''


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close