வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (27/04/2017)

கடைசி தொடர்பு:20:09 (27/04/2017)

அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவது யார்.. யார்..? பரபர பின்னணி !

பன்னீர்செல்வம்

சிகலா கைது, வருமானவரித் துறை ரெய்டு, இரட்டை இலைச் சின்னம் முடக்கம் ஆகியவை அடுத்தடுத்து அரங்கேறின. இது, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்தது. 'இந்தப் பிரச்னைகளை எதிர்கொண்டு கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஒன்றுசேர வேண்டும்' என்று குரல்கள் இரு அணிகளிலும் எதிரொலித்தன. அதைச் செய்ய வேண்டும் என்றால், சசிகலா குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் ஓ.பன்னீர்செல்வம். அதை ஏற்பதில் எடப்பாடி பழனிசாமி அணியில் முரண்பாடான கருத்துகள் இருந்தாலும் டி.டி.வி.தினகரனே, ''தாம் கட்சியில் இருந்து ஏற்கெனவே ஒதுங்கிவிட்டேன்'' என்று தன்னிலை அறிக்கை வெளியிட்டு ஒதுங்கிக்கொண்டார். ஏப்ரல் 16-ம் தேதி இந்த அறிவிப்புகள் எல்லாம் அரங்கேறின.

அதன்பிறகு இரு அணிகளும் இணைப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் தலைமையில் குழு தனித்தனியாக அமைக்கப்பட்டது. ''நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் அழைப்புவிடுத்தார். அவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் ஏப்ரல் 24-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அன்று அ.தி.மு.க அலுவலகத்துக்கு வரவில்லை. அதனால், அவர்கள் கே.பி.முனுசாமிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்தனர். ஆனால், அன்று யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதையடுத்து, ''பேச்சுவார்த்தைக்கு எப்போது வேண்டுமானாலும் ஓ.பி.எஸ் அணி வரலாம்; நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு வைத்திலிங்கம் டீம் கலைந்துசென்றது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள்

இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கடந்த 25-ம் தேதி அ.தி.மு.க அம்மா அணி கூட்டியது. முதல் நாள் கூட்டத்தில், ''மே தின பொதுக்கூட்டம், அணிகளின் இணைப்புக் குறித்துப் பேசினர். அதில் பேசிய பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், ''122 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு நாம் ஏன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும். கட்சியும் ஆட்சியும் நம் கையில்தான் இருக்க வேண்டும். சசிகலா குடும்பத்தினரை நீக்க வேண்டும். தினகரன், தானே வெளியே சென்றுவிட்டார். சசிகலா ஜெயிலில் இருக்கிறார். இதையும் தாண்டி நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்'' என்று காரசாரமாகப் பேசி இருக்கிறார்கள். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஒருவர், ''சசிகலா பேனரை எடுக்க வேண்டும். அவர் படமே இருக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் அணி சொல்கிறது. அதைச் செய்தால்தானே அவர்கள் தலைமைக் கழகத்துக்குப் பேச வருவார்கள். இங்கு எல்லாம் சசிகலா படம்தானே இருக்கிறது. அதை அகற்றச் சொல்லுங்கள்" என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது குறுக்கிட்டு அமைதியை ஏறபடுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்தத் தகவல் ஓ.பி.எஸ் முகாமுக்குச் சென்றுவிட்டது. உடனே இதுபற்றி ஓ.பி.எஸ் அணியில் இருந்து வைத்திலிங்கத்திடம் பேசியிருக்கிறார்கள். அன்று இரவில் எழும்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரு அணியில் உள்ள சில நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, ''சசிகலா படத்தை அகற்றுங்கள். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வருகிறோம்'' என்று சொன்னார்கள். இந்தப் பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நடந்தது. இதையடுத்து, நேற்று (26-04-17) காலை 8 மணிக்கு ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதுபற்றி கருத்துச் சொன்ன ஓ.பன்னீர்செல்வம், ''சசிகலா படத்தை அகற்றியதால் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆகிவிட்டோம்'' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, இரு அணிகளின் பேச்சுவார்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை; இன்றும் பேச்சுவார்த்தை இல்லை. ஏற்கெனவே அறிவித்தபடி 3-வது நாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்தான் தலைமைக் கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு வந்த வைத்திலிங்கம், ''இரு அணிகளின் பேச்சுவார்த்தை குறித்து கே.பி.முனுசாமி அணியினர் பேசி இருக்கிறார்கள்'' என்று ஒற்றைவரி பதில் சொன்னார்.

இன்று (27-04-17) நடந்த 3-வது நாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சென்னை மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் வி.என்.ரவி, கலைராஜன், பாலகங்கா, வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரு அணிகளின் இணைப்புக் குறித்து காரசார விவாதம் நடந்தது. ''ஓ.பி.எஸ் அணிகளின் எந்த நிபந்தனையையும் ஏற்கக்கூடாது. தினகரனின் பெருந்தன்மையை அவர்களுக்கு மதிக்கத் தெரியவில்லை. கட்சி நன்மைக்காக அவர் ஒதுங்கிவிட்டார். ஆனால், இன்னும் சசிகலா குடும்பத்தையே குறிவைத்துக் குறைசொல்லித் தாக்குகின்றனர். கட்சியில் பிளவு ஏற்படுத்தி இந்த ஆட்சியைக் கவிழ்க்கப் பார்த்தவர் ஓ.பி.எஸ். அவரோடு 12 எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கிறார்கள். 122 பேரை வைத்துக்கொண்டு இந்த ஆட்சியைக் காப்பாற்ற சசிகலாவும் தினகரனும்தான் உழைத்தார்கள். அது நமக்குத் தெரியும். இரட்டை இலை முடக்கத்துக்கும் ஓ.பி.எஸ் கொடுத்த புகார்தான் காரணம். இப்போது, சசிகலா, தினகரன் நியமனத்தையே வாபஸ் வாங்க வேண்டும் என்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறதா, இல்லையா? அதை மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். எக்காரணம் கொண்டும் பொதுச்செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. சுயமரியாதையோடு செயல்படுங்கள். பேச்சுவார்த்தையைத் தலைமைக் கழகத்தில் நடத்தக்கூடாது. பொதுவான வேறு இடத்தில் நடத்துங்கள்'' என்று பேசியிருக்கிறார்கள். 

எடப்பாடி பழனிச்சாமி

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்த விபரங்கள் அனைத்தும் ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றுவிட்டது. இதுகுறித்து ஓ.பி.எஸ் அணியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ''எங்கள் தலைவர் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை குறித்துத் தெளிவாக ஏற்கெனவே சொல்லிவிட்டார். சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து உடனே எடுக்க வேண்டும். பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் செல்வாக்கு ஓ.பி.எஸ்ஸுக்குத்தான் உள்ளது. அவர், அரசு நிர்வாகம் தெரிந்தவர். அவர்தான் முதல்வர் பதவியில் இருக்கப் பொருத்தமானவர். பேச்சுவார்த்தையை எங்கு நடத்தினாலும் அங்குச் சென்று பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று சொன்னார். இப்படி இரு அணியைச் சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருடைய பேச்சுகள் ஓ.பி.எஸ் அணியில் யாருக்கும் பிடிக்கவில்லை. அதுபோல ஓ.பி.எஸ் அணியில் பேச்சுவார்த்தைக்குத் தலைமை ஏற்றுள்ள கே.பி.முனுசாமியின் அணுகுமுறை, எடப்பாடி பழனிசாமி அணியில் யாருக்குமே பிடிக்கவில்லை.அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஈகடம்பூர் ராஜீ கொடுக்கும் பேட்டிகளும் இரு அணிகளில் இருக்கும் தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு, ஓ.பன்னீர்செல்வத்தையே எரிச்சலூட்டி வருகிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என்று இரு அணியைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனி அஜென்டாக்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். அதனால்தான், கடந்த 10 நாட்களாக அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை பேச்சாகவே இருக்கிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்