வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (28/04/2017)

கடைசி தொடர்பு:08:24 (28/04/2017)

‘தீபா என்றாலே வசூல்தான்?’ போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்!

         ஆதரவாளர்களுடன் தீபா      

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, அதன் பொதுச் செயலாளர் ஜெ.தீபா பண வசூலில் ஈடுபடுகிறார் என போலீஸ் டி.ஜி.பி.யிடம்  புகார் கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் தீபா மீது புகார் கொடுத்த ஜானகிராமன் இப்போது போலீஸ் டி.ஜி.பி.யிடமும்  புகார் கொடுத்து உள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. அவரது கணவர் மாதவன். ஜெயலலிதா இறந்தபிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் தனித்தனியாக தங்களால் முடிந்த அளவுக்கு குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

‘ஜெயலலிதாவுக்கு மாற்றாக தீபா வருவார்’ என ஆரம்பத்தில் ஒருதரப்பு நம்பிக் கொண்டிருந்தது. ஆனால், நாளாக நாளாக அந்த நம்பிக்கையை தனது செயல்பாடுகள் மூலம் தீபாவே தகர்த்தார். ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்று தீபா ஒரு அமைப்பை பெயருக்குத் தொடங்கி வைத்துள்ளார். ஆனால், இன்றுவரை அந்த பேரவை எந்த செயல்பாடும் இல்லாமல் தீபாவைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தீபாவின் கணவர் மாதவன், ‘எம்.ஜெ.டி.எம்.கே’ என்ற பெயரில் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதற்குக் காரணம் சொன்ன மாதவன், “தீபா நடத்துகிற ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ ஒரு அரசியல் கட்சி அல்ல; அது வெறும் பேரவைதான். ஆனால், நான் தொடங்கி இருப்பது அரசியல் கட்சி. தீபாவின் பேரவை வளர்வதற்கும் இந்தக் கட்சி பாடுபடும். தீபாவை முதலமைச்சராக ஆக்கும் வரை என் கட்சிக்கு ஓய்வே கிடையாது" என்று விசித்திரமான விளக்கமும் சொன்னார்.

 

                                    பேர்வை துவக்க நாளில் கணவர் மாதவனுடன் தீபா பேட்டி

தீபாவும் ‘நான் முதலைமைச்சர் ஆகியே தீருவேன்' என ஜெயலலிதாவின் உடல்மொழியோடு குரல்தொனியோடு உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தென்மண்டல பொறுப்பாளராக இருந்த ஜானகிராமன் தீபா மீது தொடர்ந்து புகார் கூறி வந்தார். போலீஸிலும் புகார் கொடுத்தார். இப்போது போலீஸ் டி.ஜி.பியிடம் புகார் கொடுத்துள்ளார். அதுபற்றி ஜானகிராமனைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் நம்மிடம், “சொசைட்டி ஆக்ட்டில் தான் தீபா தனது பேரவையைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளில் தீபாவின் கார் டிரைவர் ராஜாவையும், ராஜாவின் மனைவி சரண்யாவையும் நியமித்துள்ளார். பொருளாளர் பதவியை தீபா எடுத்துக் கொண்டார். அந்த அடிப்படையில்தான் ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது விநியோகம் செய்யப்படும் உறுப்பினர் படிவத்திலும், பேரவையின் அடையாள அட்டைகளிலும் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் தீபாதான் கையெழுத்துப் போடுகிறார். பேரவையைத் தொடங்கும்போது, “இதைக் கட்சியாகக் கொண்டு போகமாட்டோம்; மக்கள் நலன்களுக்கான சேவைகளை மட்டுமே செய்வோம்” என்றுதான் உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்துப் போட்டார் தீபா. ஆனால் தற்போது தீபா, விதிகளை மீறி அரசியல் கட்சிகளைப்போல பண வசூலில் ஈடுபடுகிறார்.

                                              தீபா மீது மோசடிபுகாரை போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள ஜானகிராமன்

எனவே, பதிவாளர் சட்டப்படி தீபாவின் பேரவையை கடந்த மாதம் 27-ம் தேதி பதிவாளர் ரத்து செய்து விட்டார். தீபா அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருபது கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து விட்டார். அதோடு லேட்டஸ்டாக, உழைப்பாளர் தினமான ‘மே நாள்’ கொண்டாட்ட வசூலுக்கும் பில் புக் தயாரித்து வைத்திருக்கிறார். தீபாவின் இந்த  நடவடிக்கைகளால் பலர் பணத்தை இழப்பார்கள். அதனால்தான் நான் இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். ஆர்.கே.நகர்  இடைத் தேர்தல் பொறுப்பாளரான என்னையே தெரியாது என்று தீபா சொல்லி வருகிறார். அவர் கணவர் மாதவனோ, ஏப்ரல் 21-ம் தேதி தீபா போலவே ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து ‘எம்.ஜி.ஆர் ஜெ.ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். எல்லாமே நாடகக் கம்பெனி போலப் போய்க் கொண்டிருக்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கும் தீபாவின் மோசடியால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் நான் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.

ஜானகிராமனின் குற்றச்சாட்டு குறித்து தீபாவிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். தீபாவின் உதவியாளர் என்று நம்மிடம் போனில் பேசிய குரல், "தீபாம்மா வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் இப்படி பல ஜானகிராமன்களை உருவாக்கி உள்ளனர். இதுபோன்ற அவதூறுகளை 'அம்மா' சட்டப்படி சந்திப்பார்" என்றது. வி.கே.எஸ், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், டி.டி.வி, என்று மூன்றெழுத்துக் குழப்பங்கள் தமிழக அரசியலில் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. இதற்கிடையில், தீபா என்ற இரண்டெழுத்துக் குழப்பமும், மாதவன் என்கிற நான்கெழுத்துக் குழப்பமும் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கிறது..


டிரெண்டிங் @ விகடன்