'அவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!' - உயர்நீதிமன்ற உத்தரவு! #NEET

மே 7-ம் தேதி மருத்துவம் (எம்.பி.பி.எஸ்), பல் மருத்துவம் (பி.டி.எஸ்), கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி), சித்த மருத்துவம் போன்ற படிப்புகளுக்காக நீட் தேர்வை நடத்துகிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ). தற்போது விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருக்கும் வேளையில், 'தொழில்நுட்பம் காரணமாக ஏற்க மறுத்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்' என்று இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

நீட் தேர்வு சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கான வெளியீடு, பிப்ரவரி மாதம் வெளியானது. மார்ச் முதல் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பை வழங்கியிருந்தது. `சரியான முறையில் தகவல் வழங்கவில்லை' என உச்ச நீதிமன்றத்தைப் பலரும் அணுகினார்கள். மார்ச் முதல் தேதி வரை விண்ணப்பிக்காமல் இருந்தவர்களுக்கு, ஏப்ரல் 5-ம் தேதி வரை வாய்ப்பை நீட்டித்தது உச்ச நீதிமன்றம். விண்ணப்பிப்பதற்காக, இணையதளத்தில் பலரும் நுழைந்தபோது, தொழில்நுட்பம் காரணமாக, காலதாமதமாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது சிபிஎஸ்இ.

`இவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது உயர் நீதிமன்றம். ஆனால், விண்ணப்பத்தை ஏற்க மறுத்து, தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடிசெய்து 'தொழில்நுட்பம் காரணமாகக் காலதாமதமாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்தால், இடைநிலைக் கல்வி வாரியத்தின் இயக்குநர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும்' என்று சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு குறித்த தமிழக அரசு நிறைவேற்றியிருக்கும் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் உடனே பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.


இந்தக் கடிதத்தின் முக்கிய அம்சமாக 'மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு, பாதிப்பை ஏற்படுத்தும். நகரப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் இருக்கின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு அந்த வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்' என்பதைச் சுட்டிக்காட்டி, உடனே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தரக் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். 

நீட் தேர்வு சென்னை உச்சநீதிமன்றம்

மற்றொரு புறம், கிராமப் பகுதிகளிலும், மலைக் கிராமங்களிலும் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டுமுறையை ரத்துசெய்ததற்கு எதிராக மருத்துவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டுவருகிறார்கள். இதுகுறித்தும் தெளிவான கொள்கை வரைவு இல்லை என தமிழக அரசிடமும் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விளக்கம் கேட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்

மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமும், இந்திய மருத்துவ கவுன்சிலும் என்ன முடிவெடுக்கப்போகின்றன என்பதை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்துகொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் மருத்துவர்களும்.

நல்ல முடிவு கிடைக்கட்டும், போராட்டம் இல்லாத மருத்துவ உலகமாக இருக்கட்டும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!