வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (28/04/2017)

கடைசி தொடர்பு:09:24 (28/04/2017)

“அவலும் உமியும்!" - அ.தி.மு.க. அணிகளும் ஆடு புலி ஆட்டமும்!

ஆவடி குமார்

கோடை வெயிலைத்தாண்டி அதிமுக தொண்டர்களுக்கு தகிப்பை தந்துகொண்டிருக்கும் விஷயம்  அதிமுகவின் இருஅணிகளும் இணையுமா இல்லையா என்பதுதான். அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய ஓ.பி.எஸ்ஸின் பின்னணியில் பாஜக இருப்பதாக சொல்லப்பட்டது. மத்திய அரசும் மாநில கவர்னரும் எழுப்பிய சட்டச் சிக்கலினால் கைக்கு வந்த முதல்வர் பதவி வாய்க்கு வருவதற்குள் சசிகலா சிறை செல்லவேண்டியதானது. அவரைத்தொடர்ந்து கட்சிக்குள் கால் வைத்த தினகரனுக்கும் இப்போது கட்டம் சரியில்லை. தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைப்பறவையாகிவிட்டார் அவர். 

'அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துகிறது மன்னார்குடி குடும்பம்' என ஓ.பி.எஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இப்போது நடைமுறை சாத்தியமே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்ட பின்னும் ஓ.பி.எஸ் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முரண்டுபிடிப்பதால் அதிமுகவின் இருஅணிகளும் இணையாது என்றே சொல்கிறார்கள் இந்த விவகாரத்தை கூர்ந்துகவனித்துவரும் அதிமுக நிர்வாகிகள். 
சசிகலா குடும்பத்தினரின் ராஜினாமா, ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ விசாரணை என இணைப்பு பேச்சுவார்த்தைக்கு பெரிய நிபந்தனைகளை விதித்த ஓ.பி.எஸ் தரப்பு, அதிமுக தலைமைக்கழகத்திலிருந்து சசிகலா பேனர்களை அகற்றவேண்டும் என கொசுறு நிபந்தனையையும் கடந்த வாரம் விதித்தது. ஆச்சர்யமாக மறுநாளே அதை கர்மசிரத்தையாக செய்தனர் அதிமுக நிர்வாகிகள். சசிலாவின் தலைமையை ஏற்று ஓ.பி.எஸ்க்கு எதிராக சீறிக்கொணடிருந்த நிர்வாகிகளின் இந்த திடீர் அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. தலைமைக்கழகம் அலுவலகம் மட்டுமின்றி தங்கள் மனதிலும் இதுநாள் வரை தாங்கிவந்த சசிகலாவை  அதிமுகவினர் துாக்கியெறிந்துவிடுவதற்கான முன்னோட்டமா  இது, என அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம்.

“சசிகலாவையோ தினகரனையோ நாங்கள் எங்கிருந்தும் துாக்கி எறியமாட்டோம். இக்கட்டான நேரத்தில் கட்சியை காப்பாற்றியவர் சசிகலா. ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவின் பினாமியாக கட்சியை உடைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் மேல்மட்டத்தில் நடந்த இந்த  பூசல், படிப்படியாக வளர்ந்து இன்று கீழ்மட்டத்தொண்டர்கள் பிரிந்து அடித்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இது கட்சியின் கட்டுக்கோப்பை பாதித்து உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் அதிருப்தியாளர்களை அழைத்துப்பேசி பிரச்னையை சரி செய்ய முயன்றோம். அதனால் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு முதல் அடையாளமாக அவர்களது  பேனர்களை அகற்றும் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால் பதிலுக்கு கண்ணியமான அணுகுமுறையை பின்பற்றாமல் தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி இணைப்பை தடுக்கப்பார்க்கிறார்கள் அவர்கள். 

ஓ.பி.எஸ்

இரு அணிகளும் இணைவதில் என்ன சிக்கல் உள்ளது...?

அது ஒரு அணி அல்ல; அதிருப்தியாளர்கள் கும்பல். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது. எங்களிடம் எந்த பிரச்னையும் இல்லை. இணைய விருப்பம் உள்ளதாக தெரிவித்துவிட்டு அதற்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளை ஓ.பி.எஸ் அணிதான் செய்துவருகிறது.  பொதுவாக எந்தக் கட்சியிலும் அவரவர்களுக்கு ஒரு எதிர்ப்பு அணி என ஒன்று இருக்கும். கட்சிக்கு பாதகமில்லாத வழக்கமான அரசியல்தான் இது. ஓ.பி.எஸ்க்கு இணைப்பு நடந்தால் தான்தான் முதல்வராக இருக்கவேண்டும் என்ற ஆசை ஓ.பி.எஸ்சுக்கு. எடப்பாடிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கியதில் அதே மாவட்டத்துக்காரரான செம்மலைக்கு அதிருப்தி. அவைத்தலைவர் பதவியை தனக்கு தராமல் செங்கோட்டையனுக்கு தந்ததால் பொன்னையன் வெளியேறினார். ஒரே மாவட்டத்தில் அரசியல் செய்பவர் என்பதால் மதுசூதனனுக்கு வெற்றிவேலுக்கு கட்சி தரும் முக்கியத்துவம் பிடிக்கவில்லை. இப்படி கடந்த காலத்தில் மனக்கசப்பினால் அதிருப்தி அடைந்தவர்கள் குழுதான் அது. எங்கள் தரப்பிலும் சிலருக்கு இப்படி அதிருப்தி உண்டு. இவர்கள்தான் இணைவதால் தங்களுக்கு பயனில்லை என்று அதை தடுக்கப்பார்க்கிறார்கள். இப்படி இரு தரப்பிலும் தங்கள் நோக்கங்களை மனதில் கொண்டு தேவையற்ற நிபந்தனைகளை முன்வைப்பதால் இணைப்பு தள்ளிப்போகிறது. 

முதலில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றார்கள். அப்புறம் நிபந்தனைகள் விதித்தார்கள். இப்போது புதுப்புது நிபந்தனைகள் சொல்கிறார்கள். கட்சியின் ஒற்றுமை கருதி இருதரப்பிலும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் இணைப்பு சாத்தியப்படும்.இல்லையோல் இழுபறிதான் நீடிக்கும். இதில் இருதரப்புக்கும் நல்லதல்ல.

ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை கேட்கும் நிபந்தனையை ஏற்க மறுப்பது ஏன்...

 உண்மையில் நீதிவிசாரணை கேட்பதாக இருந்தால் மாநில விசாரணையையோ அல்லது நீதிபதி தலைமையிலான விசாரணையையோ  கேட்கலாம். ஆனால் அவர்கள் மாநில அரசை சங்கடப்படுத்துவதற்காக உள்நோக்கத்துடன் சி.பி.ஐ விசாரணை கேட்கிறார்கள். அதாவது பிரச்னையை மத்திய அரசிடம் விட்டு மாநில அரசுக்கு சங்கடங்களைத் தருவதுதான் நோக்கம். நேற்றுவரை முதல்வராக உங்களின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. 

சசிகலா

சி.பி. ஐ விசாரணையை மோடியிடம் கேட்கவேண்டியதுதானே. மாநில அரசிடம் கேட்பது அபத்தமாக இல்லையா...அதுவுமின்றி 75 நாட்கள் ஜெயலலிதாவுடன் இருந்தவர், அதுநாள் வரை எந்த சந்தேகமும் எழுப்பாமல் பதவி பறிபோனபின் நீதிவிசாரணை கேட்கும் மர்மம் என்ன?...தனக்கு சந்தேகமில்லை. மக்கள் சந்தேகப்படுவதால் சி.பி.ஐ விசாரணை கேட்பதாக சொல்பவர், 75 நாட்கள் உடனிருந்தவர் என்ற முறையில் அவர்களை தெளிவுபடுத்தமுடியாதா?... அவரது அணியைச் சேர்ந்த பி.எச் பாண்டியன் “நாங்கள் குற்றவாளியை நெருங்கி விட்டோம். விரைவில் சொல்வோம்” என்றார். ஆனால் அதன்பிறகு அதுபற்றி வாய்திறக்கவேயில்லை. சாதாரண விஷயத்திற்காக வெல்லாம் நீதிமன்றப்படியேறும் ஓ.பி.எஸ் , ஜெயலலிதாவின் மரணத்தில் குற்றவாளியையும் அதற்கான ஆதாரங்களையும் உண்மையில் திரட்டியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கலாமே. அல்லது குற்றவாளி பற்றி தெரிந்திருந்தால் அதை பாஜக அரசுக்கு நேரடியாக சொல்லலமே.

சி.பி.ஐ விசாரணைக்காக தெய்வமாகிவிட்ட ஜெயலலிதாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் என்ற பெயரில் கூறுபோடுவதை எந்த தொண்டனும் சகித்துக்கொள்ளமாட்டான். இப்படி சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உணர்வு கூட இல்லாமல் தனது அதிகாரப் பசிக்காக தன்னை வளர்த்த கட்சிக்கும்  அம்மாவுக்கும் துரோகம் இழைத்துவிட்டார் ஓ.பி.எஸ். 

தினகரன்

அதுமட்டுமின்றி காபந்து முதல்வராக அவர் இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மாநில விசாரணையைத்தானே நியமித்தார். சி.பி.ஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவில்லையே. இப்படி அவருடைய முரண்களை சொல்லிக்கொண்டே போகலாம். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் இத்தனை விரைவாக விசாரணை நடத்தி கைது தினகரனை செய்துள்ள மத்திய அரசு, அம்மாவின் மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என சின்ன ஆதாரம் கிடைத்திருந்தால் கூட இந்நேரம் சும்மா விட்டிருக்குமா..?  

தேர்தல் கமிஷன் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ரத்து செய்தால்,,,

நிச்சயம் வராது. ஓ.பி.எஸ் அணி என்பது தனிஅணியல்ல...ஒரு கும்பல். அது எந்த ஆதாரத்தைக்கொண்டும் அதிமுகவை கைப்பற்றமுடியாது. முதலில் பொதுச்செயலாளர்தேர்வு ஏதோ வாய்வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. முறையாக பொதுக்குழு கூடி, குறிப்பாக சசிகலாவின் விருப்பமின்றி திரு்பமான் நிறைவேற்றி அவரை தேர்வுசெய்தோம். அங்கிருக்கிற ஓ.பி.எஜ் மற்றும் மதுசூதனன் போன்றவர்கள் அன்று பொதுக்குழுவில் இருந்து நிறைவேற்றய திரு்பமானம். அதனால் மீண்டும் சசிகலா, தினகரன் பொறுப்புகளை நீக்க பொதுக்குழுவுககு மட்டுமே தகுதி உண்டு. முறைப்படி தேர்ந்தேடுக்கப்பட்டவர்களை தனி மனிதர்கள் தான்தோன்றித்தனமாக நீக்குவதோ ராஜினாமா கடிதம் கொடுங்கள் என கேட்டுப்பேறுவதோ ஜனநாயக ரீதியான நடைமுறை அல்ல. மீண்டும் பொதுக்குழுவை கூட்டித்தான் முறைப்படி செய்யமுடியும். அதுமட்டுமின்றி தற்காலிக பொதுச்செயலாளர் என்றே சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்படியே தேர்தல் ஆணையத்திலும் தெரிவித்திருக்கிறோம்.

ஆவடிக்குமார்அத்தனையும் ஓ.பி.எஸ் அணியில் இன்றுள்ளவர்கள் சம்மதத்தின்படி அவர்கள் முன்னிலையில் நடந்தவை. இதையெல்லாம் இப்போது விளையாட்டுத்தனமாக நீக்கச் சொல்ல முடியாது. ஒருவேளை தேர்தல் ஆணையம் சசிகலா பொதுச்செயலாளர் பதவி செல்லாது எனச் சொல்லட்டும். அப்போது தேர்தலை நடத்துகிறோம். அப்போதும் சசிகலா அந்த தேர்தலில் போட்டியிட விரும்பினால் யாரும் அதைத் தடுக்கமுடியாது. அது கட்சியின் ஜனநாயகம். அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. கட்சியும் ஆட்சியும் எங்களிடம் உள்ளது. கட்சி அலுவலகம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. 37 எம்.பிக்கள், தமிழகம், புதுவை சேர்த்து 128 எம்.எல்.ஏக்கள் மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட 32 தலைமைக்கழக நிர்வாகிகளில் 28 பேர் எங்களுடன்தான் உள்ளனர். எனவே நாங்கள்தான் உண்மையான அதிமுக. அதனால் எங்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் தீர்ப்பு அளிக்க முடியாது. 

“நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; அதை எங்கள் வீட்டுத் திண்ணையில் ஊதி ஊதித் திண்ணலாம்” என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. ஓ.பி.எஸ் உமியை கையில் வைத்துக்கொண்டு அரிசி வைத்துள்ள எங்களிடம் முரண்டுபிடிக்கிறார். 

உண்மையில் சசிகலா, தினகரன் இவர்கள் இருவருமே இப்போது கட்சியை  வழிநடத்தவில்லை. சசிகலா சிறையிலிருக்கிறார்; கட்சியிலிருந்து தானே ஒதுங்கிவிட்டதாக தினகரன் சொல்லிவிட்டார். இதுவே கிட்டதட்ட அவர்கள் ஒதுங்கியதுபோல்தான். இதை மீறி அவர்களிடம் சென்று ராஜினாமா செய்துவிட்டுப்போங்கள் என்று சொல்வதற்கு எங்களுக்கு யாருக்கும் அதிகாரமில்லை. அது அவர்களாகவே முடிவெடுக்கவேண்டிய விஸயம். இப்படி அவர்களின் நோக்கம் நிறைவேறிய பின்னும் தொடர்ந்து முரண்டு பிடிப்பதில் பாஜகவின் பின்னணி உள்ளது.

பாஜகவுக்கு இதில் என்ன நோக்கம் இருக்கமுடியும்...

மோடியின் சமீப கால நடவடிக்கைகளை பார்த்தால் அவரது நோக்கம் புரியும். திராவிடக்கட்சிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது பாஜகவின் திட்டம். அதிமுகவில் இந்த சலசலப்பை பயன்படுத்தி அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளப்பார்க்கிறது. “அதிமுக அழிந்துவிட்டது. திமுக அழியப்போகிறது” என தமிழக பாஜகவினர் வெளிப்படையாக மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் பலம் பொருந்திய நாங்கள் ஓ.பி.எஸ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறோம். அதேசமயம், வழக்கம்போல் உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பதற்கான சட்டப்படியான போராட்டத்தையும் தொடர்ந்து மேற்கொள்வோம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்