வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (28/04/2017)

கடைசி தொடர்பு:11:03 (28/04/2017)

ஹவாலா ஏஜென்ட் டெல்லியில் சிக்கினார்! டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல்

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில், ஹவாலா ஏஜென்ட் நரேஷை குற்றப்பிரிவு காவல்துறையினர் டெல்லியில் கைது செய்துள்ளனர். டி.டி.வி.தினகரனுடன் இவருக்கு நேரடித் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 18-ம் தேதி, டெல்லியில் உள்ள ஹோட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைதுசெய்ததோடு, அவரிடமிருந்து 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க, டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, டி.டி.வி.தினகரனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ஐந்து நாள் காவலில் எடுத்துள்ள டி.டி.வி.தினகரனை, நேற்று டெல்லி காவல்துறையினர் சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். சென்னை ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதி மற்றும் அடையாறில் உள்ள தினகரனுடைய வீட்டில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, பல மணி நேரம் நடந்தது. தினகரனை இன்று பெங்களூரு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை, குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். இரட்டை இலைச் சின்னம் பெற, 10 கோடி ரூபாய் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை, அவர் சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு அனுப்பியிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளது, மேலும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நரேஷுக்கு, டி.டி.வி.தினகரனுடன் நேரடித் தொடர்பு உள்ளதா? என்பதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே, மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட்டை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.