மதுவுக்கு எதிரான போராளி நந்தினி மதுரையில் திடீர் கைது! | Activist Nandhni arrested at her residence in madurai

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (28/04/2017)

கடைசி தொடர்பு:15:29 (28/04/2017)

மதுவுக்கு எதிரான போராளி நந்தினி மதுரையில் திடீர் கைது!

மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்செய்துவரும் நந்தினி மற்றும் அவரது தந்தையைத் திடீரென மதுரையில் இருக்கும் அவர்களது இல்லத்தில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தக் கைதுகுறித்து நந்தினியின் தங்கை நிரஞ்சனா ஆனந்தன் கூறுகையில், 'வரும் மே மாதம் 1-ம் தேதி சென்னையில் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று கேள்வி கேட்கும் போராட்டம் நடத்திட திட்டமிட்டிருந்தோம். இந்தப் போராட்டத்துக்கான பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக, சென்னைக்குப் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்த அக்கா நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் ஆகிய இருவரையும் இன்று மதுரையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து கைதுசெய்தனர்' என்று கூறினார்.

நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டதன் எதிரொலியாக, தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3303 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பொதுமக்கள், புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டும், சில இடங்களில் மதுபாட்டில்களை அடித்து நொறுக்கியும் எதிர்ப்புக்காட்டிவருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் வீட்டுக்கே சென்று போராட்டத்தை முன்னெடுக்க இருந்த நந்தினி, கைதுசெய்யப்பட்டுள்ளார்.