வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (28/04/2017)

கடைசி தொடர்பு:20:22 (28/04/2017)

''எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் அ.தி.மு.கவை வளர்த்தெடுத்தார் தெரியுமா..?!" - கலங்கும் லதா

லதா

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.முக-வில் பிளவு ஏற்பட்டு... குழப்பம், கூச்சல், பரபரப்பு நிகழ்ந்த வண்ணமே உள்ளது. `அ.தி.மு.க மக்கள் பிரதிநிதிகள் எப்போது எந்த அணியில் சேர்வார்கள்?' என்பதே  முக்கியமான டாபிக்காக இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலின்போது நடிகை லதா ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு அளித்ததோடு, `கட்சி விரைவில் ஒன்றிணையும்' என சூளுரைத்திருந்தார். அவரிடம் கட்சியின் நிலைமை பற்றிப் பேசினோம்.

''எம்.ஜி.ஆர்  கட்சியைத் தொடங்கிய காலகட்டத்தில் நானும் கட்சியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி பல படங்கள்ல பாடி, ஆடி, பேசி நடிச்சிருக்கேன். கட்சிப் பணிகள்லேயும் ஈடுபட்டிருக்கேன். அதோடு,  எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதன் பேரில் பல ஊர்களுக்குப் போய் பேசி, நிதி திரட்டி 35 லட்சம் ரூபாய் கொடுத்தேன். எம்.ஜி.ஆர் கட்சியை வளர்க்க ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். அதை உடனிருந்து பார்த்திருக்கேன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் தேசிய அளவில் பெரிய கட்சியாக அ.தி.மு-வை உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அவரைச் சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்; ஆனால், முடியவில்லை. அவரது இறப்புக்கு யார் காரணம்னு எல்லோருக்குமே தெரியும். ஜெயலலிதா இறந்த  பிறகு நிலைமையே மாறிப்போயிடுச்சு. அம்மா இறந்த சமயம், `கட்சி உடையக்கூடாது; எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான தலைமை உருவாகணும்; அந்தத் தலைமையை தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளணும்'னு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி, ஒரு குடும்பத்து நபர்களோட கைப்பிடிக்கு போகக்கூடாதுனு நினைச்சேன். பன்னீர்செல்வம் முதல்வரா  தொடர்ந்தா, எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்திருக்கும். மக்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கமாட்டார்கள். ஆர்.கே நகர் தொகுதியில ஓ.பன்னீர்செல்வம் அணி ஜெயிச்சுட்டாங்கன்னா, கண்டிப்பா பிளவுபட்ட அ.தி.மு.க ஒண்ணு சேரும்னு நம்பினேன். பன்னீர்செல்வம் அணியின் வெற்றிக்காக ஆர்.கே.நகர்ல பிரசாரம் பண்ணினேன். சசிகலா குடும்பத்தினரால தேர்தல் நின்னுப் போச்சு. 

கட்சியை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தைகள் துவங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம். இரண்டு அணிகளும் சேர்வதற்கு பன்னீர் செல்வம் வைத்துள்ள கோரிக்கைகளும்  வரவேற்புக்குரியவை. இக்கோரிக்கைகள் சாதாரண மக்களின் மனதிலும் எழுந்துள்ளவைதான். கட்சியில் நடைபெறும் குழப்பங்களுக்கும், பிரிவினைகளுக்கும் காரணமான சசிகலா குடும்பத்தை முழுமையாக கட்சியை விட்டு துரத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் இணைவார்கள் என  நம்புகிறேன். 

கட்சி இணைந்துவிட்டால், தமிழகத்தில் எவ்வித பிரச்னையும் இன்றி மக்களுக்கு நான்கு ஆண்டுகள் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறேன். சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. இது நல்ல அணுகுமுறை. நான்  எங்கு சென்றாலும், சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதை மக்கள் என்னிடம் கோரிக்கையாக வைத்துவருகின்றனர். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பதற்கேற்ப அ.தி.மு.க-வில் நல்லதே நடக்கணும்; அதுவும் சீக்கிரம் நடக்கணும் என்பதே என் ஆசை. தமிழகத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அ.தி.மு.க-வினர் ஒன்றிணைந்து மக்கள் சேவையைப் பிரதானமாகக்கொண்டு செயல்பட வேண்டும். 

எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல் பா.ஜ.க-தான் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துவதாக நான் நம்பவில்லை. போதுமான ஆணவங்கள் சாட்சியம் இருப்பதை வைத்துதான் தினகரனை  கைது செய்துள்ளனர். கட்சிக்குள் சண்டை என்பதை அண்ணன் - தம்பி குடும்பத்து சண்டை மாதிரிதான் நான் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் வளர்த்த கட்சி உடையக்கூடாது என்பதே என் நோக்கம்’ என அக்கறையுடன் சொல்லி முடித்தார் லதா.

- ஆர்.ஜெயலெட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்