''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும்!'' - இரா.செழியன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

இரா.செழியன்''எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல... பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன்; அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன். மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்''  தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னபோது கூறிய வார்த்தைகள் அவை. அவருடைய பிறந்த தினம் இன்று.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் சகோதரர்தான் இந்த இரா.செழியன். மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்த இரா.செழியன், பின்னர் தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயலாற்றினார். அவருடைய நம்பிக்கைக்கு முழு பாத்திரமாக விளங்கினார். அதன்பிறகு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதாக் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார். அந்தக் கட்சி பின்னர், ஜனதா தளமாக மாறியபோதும் முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்துவந்தார். ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் இரா.செழியன் ஈடுபட்டார். சமூக சேவகர் அண்ணா ஹசாரே, 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது... அதற்கு ஆதரவு தெரிவித்த இரா.செழியன், ''இந்தப் போராட்டம் இந்தியாவில் 1975-ம் ஆ‌ண்டே தொடங்கியது. அண்ணா ஹசாரேவின் வடிவில் 2011-ம் ஆ‌ண்டி‌ல் இந்தப் போராட்டம் வலுப்பெற்றுள்ளது'' என்றார். 

இரா செழியன் எழுதிய நூல்20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.செழியன், பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்துள்ளார். அப்படி நாடாளுமன்றத்தில் பேசிய அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு, 'Parliament for The People' என்ற நூலாக வெளிவந்துள்ளது. 1975-76 நெருக்கடிக் கால அத்துமீறல்களை ஷா கமிசன் விசாரித்து 525 பக்கங்களில் அறிக்கை அளித்தது. இதை அப்போதைய இந்திய அரசு கிடப்பில் போட... செழியன் அதனை மீட்டெடுத்து, 'Shah Commission Report -Lost and Regained' என்ற நூலாக வெளியிட்டார். அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இரா.செழியன், தற்போது அதிலிருந்து ஓய்வுபெற்று வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

''தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள். டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள். கட்டடங்கள், அரண்மனைகள் அழிந்தால்கூடப் பரவாயில்லை. ஓர் இனம், மொழி அழிந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதனை மீட்க முடியாது. இலங்கையில் ஓர் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இலங்கைப் பிரச்னைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியாது. டெல்லிதான் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் இந்தியாவை விற்றாலும் ஆச்சர்யம் இல்லை. அதனைப் பங்குபோட பலர் தயாராக உள்ளனர். யாரை எதிர்ப்பது யாரை எதிர்த்துப் போராடுவது என்றே புரியவில்லை'' எனக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நூல் வெளியீட்டின்போது... ஈழத்தமிழர்களின் வாழ்வையும், வேதனையையும் புரிந்தவராய் இப்படிப் பேசியிருந்தார் இரா.செழியன்.

மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும், எழுத்தாளராகவும் பயணித்துச் சிறப்புச் சேர்த்திருக்கும் இரா.செழியனுக்கு, இன்று அவருடைய
95-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் சிறப்பு விழா நடைபெற இருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!