'குடும்பங்கள் பட்டினியால் வாடுகிறது'- மாற்று வேலைக்கேட்டு போராடும் டாஸ்மாக் ஊழியர்கள்

கடலூர் மாவட்டத்தில் பணியிழந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேறு இடத்தில் பணி நியமனம் வேண்டி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 234 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவைத் தொடர்ந்து 36 கடைகள் மூடப்பட்டன. மீதி 198 கடைகள் இயங்கி வந்தன. அதில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 129 கடைகள் மூடப்பட்டன. இந்தக் காரணத்தால் மாவட்டம் முழுவதும் 519 டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது மீண்டும் வேறொரு இடத்தில் பணி அமர்த்தக் கோரி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அனைத்து பணியாளர்கள் சங்கத் தலைவர் சரவணன் கூறுகையில், 'உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் 519 ஊழியர்கள் வேலை இழந்துள்ளோம். கடந்த ஒரு மாத காலமாக எங்களது குடும்பங்கள் பட்டினியால் வாடுகிறது. எங்களுக்கு மாற்று இடத்தில் பணி அமர்த்த வேண்டும். இதே நிலைமை தொடர்ந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சிங்காரவேலர் என்ற ஒருவர் மட்டும் நெய்வேலியில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலாளரைக் கேட்டபோது அமைச்சர் சம்பத்தின் உத்தரவைத் தொடர்ந்து பணி வழங்கியதாக தெரிவித்தார். அமைச்சர் எம்.சி.சம்பத்தை கண்டித்தும்தான் போராட்டம் நடத்துகிறோம்' என்று  தெரிவித்தார். 

படம் : தேவராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!