‘தினகரன் விசாரணை..!’ தமிழக போலீஸுக்கு தண்ணி காட்டும் டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸ்

ஸ்காட்லாந்து  காவல்துறைக்கு இணையானது தமிழக போலீஸ்” என்ற பெருமைக்கு ஒரே நாளில் உலை வைத்திருக்கிறார்கள் டெல்லி காவல்துறையினர்.


தினகரனின் ஒவ்வொரு மூவ்மன்டுகளையும் ஆரம்பத்தில் இருந்தே கழுகுப் பார்வையால் கண்காணித்துவந்தது டெல்லி காவல்துறை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டை இலைக்கு லஞ்சம்கொடுக்க முயன்று டெல்லி போலீஸ் வலையில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிக்கினார். அவர் தினகரன் தான் பணம் கொடுக்க முன்வந்தார் என்று கூற, அதை எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி போலீஸார் தினகரனை விசாரணைக்கு அழைக்கத் தயாரானார்கள். தினகரன் வீட்டுக்குச் சென்றே சம்மன் கொடுக்க முடிவு செய்து, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தனர். டெல்லி போலீஸார் சென்னைக்கு வந்தபோது அது குறித்த முழுமையான விவரங்கள் கூட தமிழக போலீஸாருக்கு தெரியவில்லை. 


அதன் பிறகு டெல்லிக்கு விசாரணைக்கு சென்ற தினகரன் நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த வியாழக்கிழமை அன்று சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். தினகரனை சென்னைக்கு அழைத்துவரும் விவரங்கள் குறித்த எதுவும் தெரியாமல் ஆரம்பத்தில் குழப்பத்தில் இருந்தார்கள் தமிழக போலீஸார். விமான நிலையத்தில் தமிழக போலீசாரை டெல்லி காவல்துறையினர் பக்கத்தில் கூட விடவில்லை. எஸ்கார்டுக்கு வந்தவர்கள் தள்ளி நின்றே பாதுகாப்பு வழங்குங்கள் என்று ஏகத்துக்கும் கெடுபிடி காட்டியுள்ளார்கள். தமிழக போலீசாரிடம் வாகனங்களை மட்டுமே கேட்டுள்ளார்கள். விசாரணைக்காக எங்கெங்கு போகிறோம் என்கிற தகவல்களை வண்டி எடுக்கும் வரை தமிழக போலீசாரிடம் சொல்லுவதில்லையாம், வண்டி கிளம்பியபின்தான் போகும் , இடத்தை சொல்லியுள்ளார்கள். அதேபோல் தினகரன் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டபோதும் தமிழக போலீசாரை வீட்டு வாசலைத்தாண்டி உள்ளே வர அனுமதிக்கவில்லை. இதனால் நொந்து போய்விட்டனர் தமிழக காவல்துறையினர். 
தினகரனை பெசன்ட் நகரில் ராஜாஜி பவனில் தான் தங்கவைத்திருந்தனர். அங்கும் தமிழக போலீசாரை அனுமதிக்கவில்லை. காலையில் “நான் வாக்கிங் போக வேண்டும்” என தினகரன் டெல்லி போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு “நீங்கள் வாக்கிங் போங்க, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த அறைக்குள் மட்டுமே வாக்கிங் போக வேண்டும்” என்று சொன்னதும் தினகரன் நொந்து போய்விட்டாராம். தினகரனை போலீஸ் வண்டியில் நடு இருக்கையில் அமரவைத்து தான் டெல்லி போலீசார் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்கள். 

தினகரன்


அதேபோல் தினகரன் வழக்கில் சம்பந்தபட்ட ஐந்து நபர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்தனர். வெள்ளிக்கிழமை காலை ராஜாஜி பவனிலிருந்து டெல்லி டீம் திடீரென ஓரிடத்துக்கு புறப்பட்டுச் சென்றார்கள். எங்கே போகிறார்கள் என்ற தகவல் தமிழக போலீசாருக்கே தெரியாமல் டெல்லி டீம் சென்ற வண்டியை துரத்திச் சென்றுள்ளார்கள். அந்த வாகனம் அனுராதாவின் உறவினர் பொறியாளர் மோகன் முகவரியைத் தேடிச் சென்றது. மோகன் வீடு ஆதம்பாக்கத்தில் திருவள்ளுவர் தெருவில் உள்ளது, ஆனால் டெல்லி போலீசார் திருவள்ளுவர் நகருக்கு சென்று ஒவ்வொரு வீடாகச் சென்று கதவை தட்டி விசாரித்துள்ளனர். அங்கு வந்த தமிழக போலீசாரிடம் யாரை விசாரிக்கப் போகின்றோம் என்று கூட சொல்லவி்ல்லையாம். அதே போல் சௌகார் பேட்டையில் நரேந்திரகுமார் வீட்டுக்கு டெல்லி போலீசார் வந்து விசாரணை நடத்திய தகவலே அரை மணி நேரம் கழித்து தான் அந்த பகுதி காவல்துறையினருக்கே தெரிந்துள்ளது. 

தினகரன் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர் என்பதால், தமிழக போலீசார் எதாவது உதவிகள் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் டெல்லி போலீசாரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிகிறது. தினகரன் அருகில் தமிழக போலீசாரை நெருங்கவிடாத அளவுக்கு டெல்லி போலீசார் கொடுக்கும் நெருக்கடியால் நொந்து போய் உள்ளார் தினகரன். 

- அ.சையது அபுதாஹிர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!