கொடநாடு காவலாளி கொலையில் சிக்கிய சசிகலா டிரைவரின் அதிரவைக்கும் பக்கம்

 

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சசிகலாவின் கார் டிரைவர் பற்றி அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வெடுக்கும் இடமாக இருந்துவந்தது. 'ஜெயலலிதா இறந்த பிறகு இந்த பங்களா இனி யாருக்குச் சேரப்போகிறது' என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்துவந்த நிலையில் திடீரென, கடந்த 24-ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்துகொண்டிருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரைத் தாக்கிவிட்டு எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையிலான போலீஸார் கொடநாடு பங்களாவுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பிறகு இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர் கனகராஜ். இவர் போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். இந்நிலையில், டிரைவர் கனகராஜ் நேற்றிரவு 8.30 மணிக்கு ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார்.

யார் இந்தக் கனகராஜ்

கனகராஜின் சொந்த ஊர் எடப்பாடி அருகே உள்ள சித்திரம்பாளையம். இவரின் அண்ணன் தனபால் அ.தி.மு.க.வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவராக இருந்தவர். பிறகு பதவிநீக்கம் செய்யப்பட்டார். இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்காளி முறையைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக கனகராஜ், போயஸ்கார்டனில் டிரைவர் வேலைக்குச் சென்றார். போயஸ்கார்டனில் சசிகலாவின் தனிப்பட்ட கார் டிரைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார். பிறகு போயஸ்கார்டனிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் அவரின் சித்தி வீடு ஆத்தூரை அடுத்த சந்தனகிரி சக்திநகரில் இருக்கிறது. அந்த வீட்டில் மூன்று நாள்களாகத் தங்கியிருந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும்போது விபத்து ஏற்பட்டது. உடனே ‘108’ ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தற்போது கனகராஜின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொடநாடு காவலாளி கொலை வழக்கில் நேற்று கேரளப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஊட்டி துணைக் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் தனிப்படை கேரளா விரைந்தது. கடந்த இரண்டு நாளாக  கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சூரைச் சேர்ந்த சதிஷ், சந்தோஷ், தீபக் என்பவர்களிடமும் மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

- வீ.கே.ரமேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!