திருச்சி: குப்பை தொட்டியில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள்!

திருச்சி: திருச்சியில் குப்பை தொட்டியில் லட்சக்கணக்கான ரூபாய்  நோட்டுகள் கிடப்பதை பார்த்து பொது மக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

திருச்சி உறையூர் 57-வது வார்டு அவுசிங் போர்டு காலனி ரோட்டில் அடுக்குமாடி  குடியிருப்புகள் உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் பணக்காரர்கள் வசிக்கும்  பகுதியாகும்.

இந்த குடியிருப்பையொட்டி மாநகராட்சியின் 2 பெரிய குப்பை தொட்டிகள் உள்ளது.  இங்கு மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் வந்து லாரிகளில் குப்பைகளை அள்ளி  செல்வது வழக்கம்.

வழக்கம் போல் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றுவதற்கு  லாரியில் வந்தனர்.அப்போது குப்பை தொட்டியில் இருந்து பாலிதீன் பைகளை  சேகரித்தனர்.அங்கு 2 பெரிய பாலிதீன் பைகள் கிடந்தது.அதனை அவர்கள் பிரித்து  பார்த்தனர்.அந்த பையில் 1000 ரூபாய், 500 ரூபாய் என ரூபாய் நோட்டுகள் துண்டு  துண்டாக கிழிக்கப்பட்டு இருந்தது.அதனை பார்த்து மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி  அடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.தகவல் அறிந்ததும் ஏராளமான  பொது மக்கள், சிறுவர்கள் திரண்டனர். அவர்கள் குப்பை தொட்டியில் இறங்கி அதில்  இருந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

தகவல் அறிந்ததும் வார்டு கவுன்சிலர் வனிதா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.  அவர்கள் அங்கு கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர்.அதன் மதிப்பு மொத்தம் ரூ.  20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.அவை அனைத்தும்  நல்ல நோட்டுகள் ஆகும்.வங்கியில் வைக்கப்பட்ட சீல் கூட ரூபாய் நோட்டுகளில்  காணப்பட்டது.குப்பை தொட்டிகள் பக்கம் 3 வங்கிகள் உள்ளது.பொதுவாக வங்கியில்  உள்ள பழைய, கிழிந்த நோட்டுகளை குப்பை தொட்டியில் போட்டு தீவைத்து எரிப்பது  வழக்கம்.எனவே அது போன்ற ரூபாய் நோட்டுகளா? என்ற கோணத்திலும் போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடியிருப்பை சுற்றி ஏராளமான பணக்காரர்களின் வீடு உள்ளது.போலீஸ் மற்றும் வருமான  வரித்துறையினரின் சோதனைக்கு பயந்து யாராவது பணத்தை கிழித்து வீசி சென்றார்களா?  என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!