வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (30/04/2017)

கடைசி தொடர்பு:09:27 (30/04/2017)

'இரு அணிகளும் மிகவும் இணக்கமாக இருக்கிறோம்' : திண்டுக்கல் சீனிவாசன் அடடே பேட்டி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில்,   அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, இரு அணிகள் இணைவதற்கு பன்னீர்செல்வம் அணி இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

Dindigul Srinivasan


அதன்படி, ஜெயலலிதாவின் மரணத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை நடத்த, எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே. இரண்டு அணிகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக, பன்னீர்செல்வம் அணியின் பொன்னையன் நேற்று கூறியிருந்தார். 


இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை, தி.மு.க-வுக்கு அழைத்து வர ஸ்டாலின் முயல்வதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். ஒரு மத்திய அமைச்சராக இருந்து கொண்டு பொய் தகவலை பரப்பி வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.


எங்களது ஆட்சிக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. எனவே, ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக, கட்சியில் இரு அணிகளும் மிகவும் இணக்கமாகதான் இருந்து வருகிறோம்" என்றார்.