தேர்வு எழுத வந்த இடத்தில் தாயான விழுப்புரம் பெண்! | A woman has delivered a girl baby when she writes a exam

வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (30/04/2017)

கடைசி தொடர்பு:15:18 (30/04/2017)

தேர்வு எழுத வந்த இடத்தில் தாயான விழுப்புரம் பெண்!

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த இடத்தில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்ட அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 


தமிழக அரசின் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று நடந்த நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டு எழுதும் இந்தத் தேர்வில் தேர்சி பெறுபவர்களைக் கொண்டு சுமார் 1000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இன்று காலை விழுப்புரம் இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், விழுப்புரம் மாவட்டம் சின்ன எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்திலேயே தகுதித் தேர்வில் கலந்து கொண்டார்.  

அதேபோல விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்ததையடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜின் மனைவி நோயம் ரோஸ்மேரி (வயது 24), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் தேர்வு எழுத வந்துள்ளார். அவர் தியாகதுருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கலந்து கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதினார். தேர்வு தொடங்கிய 15 நிமிடத்தில் நோயம் ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சசிகலா தேவி 108 ஆம்புலன்ஸைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, சிறிது நேரத்தில் அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வில் பார்வையற்ற ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தேர்வெழுதினர்.

blind


 

படம் : தே.சிலம்பரசன்.