அதிரடி காட்டிய மதுரை கலெக்டர் வீரராகவராவ்! அதிர்ந்துபோன அதிகாரிகள்

மதுரையில், பாலித்தீன் பைகளை விற்ற கடைக்காரர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் ஆட்சியர் வீரராகவராவ்.

veera raghava rao

மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராகவராவ் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். சிறப்பாகப் பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாராட்டுப்பத்திரமும் இவர் பெற்றுள்ளார். கடந்த 30-ம் தேதி,  தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. இதில், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டுமருந்து முகாமை ஆய்வுசெய்யச் சென்றுள்ளார், ஆட்சியர் வீரராகவராவ். 

மூன்று மாதங்களுக்கு முன்பே, பாலித்தீன் பைகள் மதுரையில் தடை செய்யப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்துக்குள் உள்ள ஒரு ஸ்வீட் கடையில், பாலித்தீன் பையில் பொருள்கள் விற்கப்படுவதைக் கண்ட அவர், தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்ததற்காக, கடைக்காரருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தார். அதிகாரிகளிடம் சொல்லி, பேருந்து நிலையத்துக்குள் உள்ள மற்ற கடைகளையும் ஆய்வுசெய்யச் சொன்னதில், இதேபோல மேலும் இரண்டு கடைகளில் பாலித்தீன் பைகள் விற்பனைசெய்து வந்ததைக் கண்டுபிடித்து, அந்தக் கடைகளுக்கும் அபராதம் விதித்து, அவற்றைப் பறிமுதல் செய்தார்.

ஆட்சியர் வருவார், சொட்டுமருந்து கொடுப்பதைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பிவிடுவார் என அலட்சியமாக இருந்த அதிகாரிகள், ஆட்சியரின் ஆய்வையும்  உத்தரவையும் பார்த்து அதிர்ந்துபோனார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!