ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு | An invite for M.K.Stalin for participate UN human rights conference

வெளியிடப்பட்ட நேரம்: 08:11 (02/05/2017)

கடைசி தொடர்பு:08:18 (02/05/2017)

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

ஜெனிவாவில், ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

m.k.stalin


ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பதுகுறித்து தி.மு.க தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'மு.க.ஸ்டாலின் ஐ.நா சபையில் அளித்த டெசோ அமைப்பின் தீர்மானங்கள், ஐ.நா சபையின் இந்த ஆண்டுக்கான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம், ஈழ மக்களின் பிரச்னைக்கு தி.மு.க குரல்கொடுப்பது உலக அரங்கில் ஆணித்தரமாக வெளிப்பட்டுள்ளது. நாடு கடந்த தமீழீழ பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'இந்த ஆண்டு மே 19–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள தமிழீழ அரசாங்கத்தின் 2–வது அரசவையின் 7–வது நேரடி அமர்வில், மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஜெனிவாவில், ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழீழ மக்களின் பிரச்னைகள் குறித்தும், விடுதலைக்கான தீர்வுகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.