வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (02/05/2017)

கடைசி தொடர்பு:09:50 (02/05/2017)

‘இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்’ - ஓ.பி.எஸ். அணியினர் உறுதி!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாட்களாக  அ.தி.மு.க. அணியில் இருந்தவர்கள் 'கருத்து' சொல்வதாக சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். தற்போது வரை அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

o.panneerselvam


இப்போதோ, இரு அணிகளின் தலைவர்களே 'இனி நாங்கள் சேரமாட்டோம்' என்பதை தங்களின் பேச்சால் உறுதிப்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 30-ம்தேதி சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, 'எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், கட்சியும்- ஆட்சியும் எங்களிடமே இருக்கிறது. யார் வந்தாலும், போனாலும் கவலையில்லை' என்றார். எடப்பாடிக்கு பதிலடியாக, சென்னை ஆர்.கே.நகரில் அதற்கு அடுத்த நாள் பேசிய ஓ.பி.எஸ், 'எடப்பாடியும், தினகரனும் கூட்டாளிகள். தினகரனையும், சசிகலாவையும் முழுமையாக ஒதுக்காமல் இணைப்பு குறித்து பேசுவது  அர்த்தமற்றது" என்றார்.

ஓ.பி.எஸ். இவ்வாறு பேசிய பின்னர், தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்ட எடப்பாடி, "திறந்த மனதோடு வெளிப்படையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம், பேச்சுவார்த்தை நல்லபடியாக நடத்தவிடாமல் வெளியில் இருந்தபடி சிலர், முட்டுக்கட்டை போடுகிறார்கள்" என்றார்.

ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோ, 'எடப்பாடியிடம்தான் ஆட்சி இருக்கிறது. ஓ.பி.எஸ். கையில் ஆட்சி இல்லை, உள்ளாட்சித் தேர்தலுக்குள் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களை சந்தித்து நியாயம் கேட்க ஓ.பி.எஸ். கிளம்பி விட்டார், உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள்தான் பெரும்பான்மையைப் பிடிப்போம், இரட்டை இலை சின்னம் தானாக கைக்கு வரும்' என்கிறார்கள்.

 
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அதில் சுமார் ஒன்றை லட்சம் பதவிகள் இருக்கின்றன. அதில் பெரும்பான்மையை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பது தேர்தலுக்கு பிறகே தெரியவரும்.