Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மே தினம்’ என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்? #SpotReport

மே தினம்

“நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்'' என்றார் மாவோ! அப்படித்தான் உருவானது மே தினமும்.... 18 -ம் நூற்றாண்டின் இறுதியில், வளரும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களை 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்தித்தனர். பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நெசவாளர்கள், விவசாய கூலிகள், கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் கால நேரம் பார்க்காமல், செக்கு மாடுகளைப் போன்று உழைத்தனர். ரத்தம் சிந்திய மே தினம் ..! இதை எதிர்த்து பல நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் தோன்றின. பல இடங்களில் போராட்டமும் நடந்து வந்தன. 1886-ல் அமெரிக்காவில், 'தொழிலாளர் கூட்டமைப்பு' நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. முதலாளித்துவத்துக்கு எதிராக மிகப்பெரிய அதிர்வலைகள் எழுந்து கொண்டிருந்த சூழலில் சிகாகோவில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்துக்காக கூட்டத்தை திரட்டியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. எட்டு மணி நேர வேலை,ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் நிறைவேறிய அந்த தினமே 'மே தினம்'.

தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை போராடி பெற்ற அந்த தினத்தை உலக நாடுகள் பலவும் இன்றும் கொண்டாடி வருகின்றன.131 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள இந்த 'மே தினம்' குறித்த விழிப்பு உணர்வும்,தொழிலாளர்களின் உரிமைகள் குறித்தும் இன்றைய தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்? என அவர்களை சந்தித்துப் பேசினோம்.

"அதிக நேரம் வேலை... தாமதமாகும் கூலி..."

மே தினம் தொழிலாளர்கள்கட்டிடத் தொழிலில் சித்தாள் வேலை செய்து வரும் லட்சுமியிடம் பேசினோம்.. ''மே தினத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வேலை இருக்கிறது என்று மேஸ்திரி சொன்னால் வந்து செய்துதான் ஆக வேண்டும். எனக்கு மட்டுமே அதிக வேலை கொடுத்தால் கேட்பேன். தவறான வார்த்தைகள் எதாவது பயன்படுத்தினால் ஏன் இப்படிபேசுகிறீர்கள்? என்று கேட்பேன். ஆரம்ப காலத்தில் இந்த வேலைக்கு வந்தபோது என்ன வேலை சொன்னாலும்செய்வேன். பிறகு என்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. அதன்பிறகு தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால் செய்யமாட்டேன் அமைதியாக நழுவி விடுவேன்."

ஆந்திராவில் இருந்து வந்து கட்டிட வேலை செய்யும் அப்பாராவிடம் பேசியபோது "ஆரம்பத்தில் மொழி தெரியாத காரணத்தால் என்னை எங்க முதலாளி நல்லா ஏமாத்தினார். பிறகு இங்குள்ள தமிழ் மக்கள்தான் எனக்குப் புரிய வச்சாங்க. அவர்களுடன் பேசிப் பழகியதால தமிழ் பேசுவதற்கும் கற்றுக்கொண்டேன். காலையில் 8 மணிக்கு வந்தா இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போறேன். ஆனால், கூலி ஒழுங்கா கொடுப்பதில்லை. பலமுறை எங்க மேஸ்திரியிடம் கேட்டுவிட்டேன். இந்த வாரம் தருகிறேன், அடுத்த வாரம் தருகிறேன் என்று நாளை கடத்துகிறார். தெரியாத இடத்துல சண்டைபோட முடியாது. அவரு எப்போ கொடுக்கிறாரோ அப்போ வாங்கிட்டு கணக்கை முடித்து விட்டு வேறு மேஸ்திரியிடம் வேலைக்குப் போகணும்"என்றார். ''வந்த இடத்தில் உரிமை பேசமுடியாது'' உழைத்த உழைப்புக்கான கூலியை சரியாகக் கொடுப்பதில்லை என்று கவலை தெரிவிக்கிறார் கட்டிட தொழிலாளி.

மே தினம் தொழிலாளர்கள்ஓட்டலில் வேலை செய்து வரும், பிரதீப், "தொழிலாளர் தினமாக இருந்தாலும் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்ய வந்தாகிவிட்டது. வந்த இடத்தில் உரிமை பேச முடியாது" என்கிறார். "என் குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். திடீரென்று இது சரியில்லை அது சரியில்லை என்றுசொல்லிவிட்டு வேலையைவிட்டுப் போக முடியாது. என் முதலாளி கொடுக்கிற வேலையை செய்துதான் ஆக வேண்டும். அதே நேரத்தில், அவர் கொடுக்கிற வேலை நியாயமானதா? என்று பார்க்கும் அறிவு எனக்கு உள்ளது. ஓட்டல் வேலை தொடர்பாக என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன். மற்ற வேலை கொடுத்தால் செய்யமாட்டேன். அவரும் அவ்வாறு இதுவரை கொடுக்கல" என்றார். கேள்விகேட்பேன் எதிர்த்துப் பேசுவேன் 'வேலை செய்யும் இடங்களில் குடும்ப சூழலை எண்ணிப்பார்த்துதான் உரிமையைப் பேச வேண்டியுள்ளது' என்கிறார் பிரதீப்.

கட்டிட தொழிலாளியான சுதாகர், "என் மனசுக்கு நியாயமாகத் தெரிகிற எந்த விஷயத்தையும் யாருக்காகவும்,எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எதிர்த்துப் பேசுவேன், கேள்வி கேட்பேன்" என்கிறார். "உழைப்பாளர் தினத்தில் எப்போதுமே விடுமுறை எடுத்துக் கொள்வேன். என்னுடைய மேஸ்திரி வரச் சொன்னாலும் எனக்கு பிடித்தால்தான் வருவேன். எதாவது பிரச்னை இருந்து அது நியாயமாக தெரிந்தால் அதனை தைரியமாக தட்டிக் கேட்பேன். எனக்கென்ன என்று அமைதியாக போக மாட்டேன். சக தொழிலாளிக்கு ஒரு பிரச்னை என்றால் அவருக்காக கேட்பேன். அதனாலேயே என்னை சண்டைக்காரன் என்று சொல்வார்கள். இப்போது எல்லாம் அப்படி யாரும் பிரச்னை செய்வதில்லை. செல்போன் இருப்பதால் கொஞ்சம் பயப்படறாங்க" என்றார்.

''மே தினம் பற்றி தெரியாது...''

மே தினம் தொழிலாளர்கள்இதனைத் தொடர்ந்து பூ விற்கும் ஷியாமலாவிடம் பேசியபோது "மே தினத்தைப் பற்றி தெரியாது. வீட்டில் உள்ள குழந்தைகள் வறுமையால் வாடுகின்றனர். அதனால் நேரம் காலம் பார்க்காமல் வருமானத்துக்காக மட்டுமே பூ விக்கிறேன். வாங்கிய பூ விற்றால்தான் வீட்டில் அடுப்பெரியும்" என்கிறார். பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் விஜயா, ''உரிமைகளைப் பற்றியோ, உழைப்பின் நேரம் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது" என்கிறார். "நான்கு பேரப் பிள்ளைகைள் இருக்கிறார்கள். வசதியான குடும்பம். என்னுடைய கணவரையும், என்னையும் நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள்.

நோயாளியான என் கணவரும், நானும் பிளாஸ்டிக் பேப்பர், அட்டைகள் போன்றவற்றை சேகரித்து அதனை விற்றுத்தான் பிழைப்பை ஓட்டுகிறோம். அதனால் எங்களுக்கு ஓய்வு நாட்கள் என்று எதுவும் இல்லை" என்கிறார். இந்த நாட்டில் விளம்பு நிலை மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்றால் ஆயிரம் ஆயிரம் புரட்சித் தலைவர்களும்,போராட்டக்களமும் அவசியமாகிறது என்பதே உழைக்கும் தொழிலாளர்களின் குரல்கள் நமக்கு உணர்த்தும் பாடம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close