வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (04/05/2017)

கடைசி தொடர்பு:08:11 (04/05/2017)

தினகரன் - மல்லிகார்ஜூனா நட்பும் அதன் முழுப் பின்னணியும்! #VikatanExclusive

                                    கைவிரலைக் காட்டுகிறார் டி.டி.வி.தினகரன்                                                                       
டி.டி.வி. தினகரன், அண்மைக்காலமாக செய்தியின் நாயகனாகி இருக்கிறார், இரட்டை இலைச் சின்னத்தை தங்கள் அணிக்குப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைதாகியுள்ளார். தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனிடம் டெல்லி போலீஸார் தீவிரமாக விசாரித்துள்ளனர். ஜனார்த்தனன் என்கிற ஜனா அ.தி.மு.க-வில் பரவலாக அறியப்பட்டவர். காரணம் ஜெயா டி.வி.யில் கொடிகட்டிப் பறந்த அவரது அதிகாரம்தான்.

மல்லிகார்ஜூனாவைப் பொறுத்தவரை, சென்னை புரசைவாக்கம் பகுதியில் பாண்டுரங்க செட்டியார் என அறியப்பட்டவரின் மகன். அந்தப் பகுதியில், பாண்டுரங்க செட்டியார் வீடு என்றால் அனைவருக்கும் தெரியும். மூன்று தலைமுறையாக அங்கு வசிக்கும் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம். ஏற்கெனவே, வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த 'திமிரி' என்ற இடத்திலும் இவர்கள் குடும்பம் வசித்து வந்துள்ளது. திமிரி-யின் முதல் எழுத்தான 'டி' யையும், பாண்டுரங்கன் என்பதன் முதல் எழுத்தான 'பி'-யையும் சேர்த்து தனது பிள்ளைகளுக்கு டி.பி. என்று இனிஷியல் வைத்துள்ளார் பாண்டுரங்கன். அவருக்கு ஐந்து ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள். குடும்பத்தின் மூத்தமகன் டி.பி. சனத்குமார், கணக்கு வழக்கில் புலி. தி.மு.க. அமைச்சராக இருந்த நாஞ்சில் கி.மனோகரன், பாண்டுரங்கனின் எதிர்வீட்டில் வசித்தவர். நாஞ்சிலாரைப் பார்க்க வந்த வி.ஐ.பி-க்களில் சிலர், சனத்குமாரின் ஆற்றலால் கவரப்பட, அவர் இடம்பெயர்ந்தார்.

1988-ம் ஆண்டு....எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க. இரண்டு அணிகளாக உடைந்திருந்த காலகட்டம். ஜெயலலிதா தலைமையில் சில தலைவர்கள் நின்றனர். கட்சிப் பொறுப்பில் இல்லாத நடராஜனும் அப்படி நின்றவர்களில் ஒருவர். அப்போது நடராஜனுக்கு நெருக்கமானவராக திகழ்ந்த ஒரே ஆள் சனத்குமார்தான். காலம் உருண்டோடியது; காட்சிகள் மாறின... ஜெயலலிதா முதலமைச்சரானார். 1991 முதல் 1996-ம் ஆண்டுவரை சனத்குமார், நடராஜனுடன் இருந்தார். 1996-ம் ஆண்டுக்குப் பின் என்ன நினைத்தாரோ, சனத்குமார் யாருடனும் தொடர்பில் இல்லாமல் முழுவதுமாக ஒதுங்கியே இருந்தார். நடராஜனின் வீட்டுக்கு அண்ணன் சனத்குமாரை வண்டியில் அழைத்துச் செல்வது, அங்கிருந்து தனது அண்ணனை அழைத்து வருவது என ஐந்தாண்டுகளில் சனத்குமாருக்குத் துணையாகச் சென்றவர் அவரின் தம்பி டி.பி. மல்லிகார்ஜூனா. கையில் எப்போதும் குங்குமப்பொட்டலம், விபூதி, பச்சைக்கயிறுடன் நடமாடிய மல்லிகார்ஜூனாவை சசிகலா குடும்பத்துக்கு மிகவும் பிடித்துப் போனது. எந்தப் பிரச்னைக்கு என்ன பரிகாரம், எந்தக் கோயிலுக்குப் போனால் பிரச்னைகள் தீரும் என்று, மல்லிகார்ஜூனா என்கிற மணி சாதாரணமாக சொல்லியதைக் கண்டு, சசிகலா குடும்பத்தினரிடையே அவருக்கு மவுசு அதிகரித்தது. சசிகலா குடும்பத்தில் தவிர்க்க முடியாத நபரானார் மணி. ஐந்தாண்டு காலம் சலிக்காது கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொடுத்த சனத்குமாரை விடவும் மணி, சசிகலா குடும்பத்தினரிடம் பிரபலமானார். அவர்கள் அனைவரின் கண்களும் மணியின் வரவை எதிர்பார்க்கத் தொடங்கின.     
                               ஆர்.கே.நகரில் தினகரன்                                       சசிகலா குடும்பத்தினர் எந்த தொழில் ஆனாலும், "மணியிடம் ஒருவார்த்தை கேட்டுவிட்டு பிறகு தொடங்கலாம்" என்கிற அளவுக்கு முக்கியஸ்தரானார் அவர். மெதுமெதுவாக டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமாகி அவரின் நிழல் மனிதர் போல ஆனார் மணி. பணப்பட்டுவாடா, பினாமி நிறுவனங்கள் பதிவு என்று அனைத்திலும் மல்லிகார்ஜூனாவின் வார்த்தைகளே எடுபட்டு வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மல்லிகார்ஜூனாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. அமைச்சர்கள் பலரும் மல்லிகார்ஜூனாவைப் பார்த்த பின்னரே, தொகுதியில் மற்ற வேலைகளைப் பார்த்திருக்கிறார்கள். தொகுதி நிலவரத்தை காணொலிக்காட்சியாக  வாங்கி வைத்துக் கொண்டு, அடுத்து செய்ய வேண்டியதை இருந்த இடத்திலிருந்தே 'ஆபரேட்' செய்திருக்கிறார் மல்லிகார்ஜூனா.

வெகுஜன மக்கள் தொடர்பில் இருந்த சில அமைப்புகள், துப்பறியும் நிறுவனங்கள், தனியார் ஏஜென்சிகள் அனைத்தும், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற மல்லிகார்ஜூனா வகுத்த திட்டம் குறித்து சிலாகித்துப் பேசுகின்றன. அவர் சொன்ன பரிகாரங்கள் அனைத்தும் பலிப்பதாக சசிகலா குடும்பத்தினர் முழுமையாக நம்பினர். ஆனால், கடைசியாக  மல்லிகார்ஜூனா சொன்னதுதான் நடக்காமல் போய் விட்டது. "அக்னி தலமான திருவண்ணாமலையில் குறிப்பிட்ட திசையில் வாராஹி கோயில் அமைத்தால் அத்தனை வழக்குகளில் இருந்தும் விடுபடலாம்" என்பதே அது. சசிகலா குடும்பத்துக்காக, குறிப்பாக, தினகரனின் நலனுக்காக தன்னுடைய செலவிலேயே திருவண்ணாமலையில் வாராஹி கோயில் ஒன்றை கட்டி முடித்திருந்தார் மல்லிகார்ஜூனா. அதுகுறித்த விளம்பரத்தையும் மீடியாக்களுக்கு கொடுத்திருந்தார் அவர். இதற்கிடையில் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், வாராஹி கோயில் கும்பாபிஷேகப் பணிகள் பாதியிலேயே நின்றுபோனது. இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின் அந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என்ற முடிவில் தினகரனும், மல்லிகார்ஜூனாவும் அந்தப் பணிகளைத் தள்ளி வைத்திருந்தனர். ஆனால், அதற்குள் இருவரும் கைதாகி விட்டனர்.

அவர்கள் இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்து கும்பாபிஷேகப் பணிகளை மீண்டும் தொடங்கும் வரை, வாராஹி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறாத நிலை உருவாகியுள்ளது. இவ்வளவு சக்திவாய்ந்த 'வாராஹி'- அம்மனின் சிறப்பு மற்றும் புராண வரலாறு என்ன? என்பது பற்றி கேட்டறிந்தோம். "விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பது மற்றும் பலன் அளிப்பதைக் கடமையாகக் கொண்டவள். குறிப்பாக, எதிரிகளை நாசம் செய்து, வெற்றியை அள்ளித் தரக்கூடியவள்" என்கிறது வாராஹி அம்மன் பற்றிய புராணத் தகவல்கள்... எது எப்படியானாலும் கோயில் பணிகள் நிறைவடைந்தால் சரி!