Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“யார் புரோக்கர்?” - திருமாவளவனை கேள்வி கேட்கும் தமிழருவி மணியன்

“ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடிய இளைஞர்கள், மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மட்டும் ஏன் ஒன்றுகூட மறுக்கிறார்கள். காரணம் அவர்களில் பாதிபேர் மதுவுக்கு அடிமையானவர்கள்'' என்று அதிரடி கருத்தினை வெளியிட்டு அனல் கிளப்பியவர் தமிழருவி மணியன். தன் மனதுக்கு சரியென்று தோன்றிய கருத்தை,  தயங்காமல் வெளியிட்டுவரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனிடம் சமகால அரசியல் குறித்துப் பேசினோம்...  

தமிழருவி மணியன்

''எனக்கு சரியென்று படுவதை வைத்துதான் நான் பேசுவேன். 2014-ம் ஆண்டு மோடியை முன்வைத்து தமிழகத்தில் கூட்டணியை கட்டமைக்கும்போது எனக்கு வராத எதிர்ப்பா...? இதே திருமாவளவன், அப்போது என்னைப்பார்த்து 'புரோக்கர்' என்றுகூட சொன்னார். அவர் சொன்னதுபோலவே வைத்துக்கொண்டால்கூட, ஒரு புரோக்கர் என்றால், முதலில் அவனுக்கு ஒரு கமிஷன் கிடைக்கணும்; அல்லது லாபம் கிடைக்கவேண்டும். அப்படி எந்த ஒரு லாபத்தையும் அடையும் நோக்கில் நான் செயல்படவில்லையே.... குறைந்தபட்சம் ஒரு வலுவான நாடாளுமன்றத் தொகுதியில் நான் நின்று வெற்றி பெறுவதற்காகவாவது இந்தக் கூட்டணியைக் கட்டமைத்திருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு முயற்சியையும் நான் எடுக்கவில்லையே...?

20 ஆண்டுகால ஆசிரியர் பணியை செவ்வனே செய்துமுடித்து, தற்போது 20 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில்தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம். ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் என்று பொது மேடைகளில் எனது பேச்சுக்கு கிடைக்கும் சன்மானத்தில் இருந்துகூட சல்லிக்காசு எடுத்து தேநீர் அருந்தியதும் கிடையாது. அத்தனையையும் என்னால் முடிந்த அளவுக்கு நற்காரியங்களுக்குத்தான் பயன்படுத்தி வருகிறேன். அதனைப் பட்டியல் போட்டு சொல்ல விரும்பவில்லை.

என்னுடைய 48 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பஞ்சாயத்துபோர்டு எலக்‌ஷனில்கூட நான் இதுவரை நின்றதில்லை. மூப்பனார் உயிரோடு இருந்தபோது, 'ஆயிரம் விளக்கு தொகுதியில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நீங்கள் நிற்கவேண்டும்' என்று என்னிடம் கேட்டபோதுகூட நான் உறுதியாக மறுத்துவிட்டேனே... ஆக, அன்றைக்கு நான் கூட்டணியை அமைத்ததன் நோக்கம், தமிழகத்தை இந்த இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்கு ஒரு தேசியக் கட்சியின் தலைமையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால்தான், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு பொருத்தப்பாடு இருக்கும். இல்லையென்றால் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில், என் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு பாடமும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் 2014-ல் நான் அந்த அணியை உருவாக்கினேன்.

அன்றைக்கு 'பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி போன்ற கட்சிகளையெல்லாம் ஒரே அணியாக சேர்க்கப்போகிறேன்' என்று நான் சொன்னபோது எல்லோருமே சிரித்தார்கள். 'இதெல்லாம் நடக்கக்கூடியதா?' என்று கேட்டார்கள். ஆனால், அதை நான் சாத்தியப்படுத்தி காட்டினேனா இல்லையா? மொத்தமாக அந்தக் கூட்டணிக்கு 19 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. 75 லட்சம் மக்கள் நம்பி வாக்களித்தார்கள். அதே சமயம், ஊரில் இருக்கிற கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நான் அவர்களுக்கு விரோதமாக இருப்பதாகக்கூட நினைத்தார்கள். 

திருமாவளவன்

அந்தத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்யும்போது பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தே.மு.தி.க ஒரேயடியாக தனக்கு மட்டுமே 23 சீட்கள் கேட்டன. இப்படி ஆளாளுக்கு பிரச்னையை கிளப்பியபோது, பொன்.ராதாகிருஷ்ணன் என்னிடம், 'நீங்கள் டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கை சந்தித்து தொகுதி உடன்பாடு பிரச்னைகள் குறித்துப் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அப்போது நான், 'டெல்லிக்கு சென்று ராஜ்நாத் சிங்கை சந்திப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், இங்கிருந்து டெல்லிக்கு டிக்கெட் போட்டு செல்லவோ, அங்கே விடுதியில் தங்கியிருந்து ராஜ்நாத்சிங்கை சந்திக்க காரில் சென்றுவரவோ எனக்கு வசதி கிடையாது. குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவழிக்கக்கூடிய அளவுக்குகூட எனக்கோ என் இயக்கத்துக்கோ வசதி கிடையாது' என்பதை எடுத்துச் சொன்னேன். 

உடனே பொன்னார், 'எல்லா செலவுகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று உறுதி கொடுத்தார். உடனடியாக அதை மறுத்துப் பேசிய நான், 'நீங்கள் அப்படி செய்தால், திருமாவளவன் ஏற்கெனவே கூறியதுபோல் நான் 'புரோக்கர்' வேலை செய்வதாகத்தானே அர்த்தப்படும். அதனால், இதற்கு நான் தயாரில்லை. வேண்டுமானால், ராஜ்நாத் சிங் இங்கே சென்னைக்கு எப்போது வருகிறாரோ... அப்போது நான் பார்த்துப் பேசிக்கொள்கிறேன்' என்று கூறிவிட்டேன். இதே விஷயத்தை வைகோவிடம் கூறியபோதும், 'என்ன அண்ணே... அவர்களை விடுங்கள்... எல்லா செலவுகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார். உடனே நான், 'அவர்கள் கொடுத்தாலும் ஒன்றுதான்; நீங்கள் கொடுத்தாலும் ஒன்றுதான். எனவே, நான் ஒருக்காலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்தக் கையால் எவரிடத்திலும் எதன் பொருட்டும் எதையும் எனக்கென்று பெற்று பழக்கம் இல்லை. சமூக நலனுக்காக இந்தக் கூட்டணியை அமைக்க முயற்சிக்கிறேன். அமைந்தால், நல்லது... அப்படி அமையாவிட்டாலும் எனக்கு தம்பிடி நட்டம் ஒன்றும் கிடையாது' என்று கூறி யாருடைய உதவியையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.

மக்கள் நலக் கூட்டணி

அதன்பிறகு ராஜ்நாத் சிங் சென்னை வந்திருந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரை சந்தித்துப் பேசினேன். பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசனும் அப்போது உடனிருந்தனர். 'உங்களோடு கூட்டணி அமைத்திருக்கும் பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க என அனைத்துக் கட்சிகளுமே ஈழம் வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் உள்ளவர்கள். அதனால், ஈழத்துக்கு எதிரான எந்த ஒரு நிலைப்பாட்டையும் நீங்கள் எடுக்கக்கூடாது. காங்கிரஸ் போன பாதையிலேயே நீங்களும் போகக்கூடாது. அதேபோல, சிறுபான்மை இனத்தவர் ஆதரவு, பாபர் மசூதி விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில், உங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளை விதித்துதான் அந்தக் கூட்டணி கட்டமைக்கப்பட்டதே  தவிர... எனக்காக நான் சிந்திக்கவும் இல்லை... பேசவும் இல்லை! ஆனாலும் போற போக்கில், என்னை 'புரோக்கர்' என்றார் திருமாவளவன். அவருடைய வாழ்வியல் என்ன? என்னுடைய வாழ்வியல் என்ன? என்பதையெல்லாம் நான் இப்போது பட்டிமன்றம் போட விரும்பவில்லை.  ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 'மக்கள் நலக் கூட்டணி'க்காக வீடு வீடாக சென்று தேடினாரே திருமாவளவன்... இவர் என்ன புரோக்கர் வேலையா பார்த்தார்?

வால்மீகி ராமாயணத்தில் ஒரு அருமையான வசனம் உண்டு... 'சேற்றைக் கையில் எடுத்து ஆகாயத்தில் உள்ள சூரியனை நோக்கி வீசினால், அழுக்குப் படுவது உன் கையே தவிர, சூரியன் இல்லை'. அதனால், எந்த விமர்சனம் குறித்தும் நான் கவலைப்படுவதில்லை; எனக்கு சரியென்று படுகிற விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறேன்... எனக்குள் தோன்றுகிற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!'' என்று கொதித்து அடங்கினார் தமிழருவி மணியன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement