“ஜெயலலிதாவின் அறைகளைக் குறிவைத்தே மர்மச் சம்பவங்கள் நடக்கின்றன!” இரா.முத்தரசன் குற்றச்சாட்டு | Mutharasan speaks about mystery in Kodanad

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (05/05/2017)

கடைசி தொடர்பு:10:51 (05/05/2017)

“ஜெயலலிதாவின் அறைகளைக் குறிவைத்தே மர்மச் சம்பவங்கள் நடக்கின்றன!” இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் விளக்கம் மற்றும் கட்சி வளர்ச்சி நிதியளிப்புப் பொதுக்கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் கீரைக்கடை மைதானத்தில் நேற்று (3-5-17) நடைபெற்றது. அந்தக் கட்சியின் கிழக்குப் பகுதிச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாநில செயற்குழு நிர்வாகி பத்மாவதி ஆகியோர் சகிதமாக மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய முத்தரசன், “ 'ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் கறுப்புப் பணம் மீட்கப்படும். அதில், ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்; விலைவாசி கட்டுப்படுத்தப்படும்; ஊழல் ஒழிக்கப்படும்; 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்' என முழங்கினார் மோடி. இந்த வாக்குறுதிகளை அவர் மறந்துவிட்டார். 'ஊழல் இல்லாத ஆட்சிதான் சாதனை' என்கிறார் மோடி. பத்திரிகைகளில், ரயில்வே துறையில் ஒரு கிலோ தயிர் 9,720 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் 1,241 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் கணக்குக் காட்டப்பட்டுச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படியெனில், எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்... யார் யாருக்கு எவ்வளவு சென்றிருக்கும்? இதற்கெல்லாம் மோடி விளக்கமளிப்பாரா? செய்யமாட்டார்.

தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள், 'தங்கள் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்' என்று கூறுவதில் தவறு இல்லை. ஆளும் கட்சியாக மாற மாநில மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். காவிரிப் பிரச்னையில் பி.ஜே.பி தமிழகத்துக்கு ஆதரவாக இருக்கிறதா? தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவுகிறது. இங்கு, 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளார்கள். தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டம் நடந்துள்ளது. முதல்வர் எடப்பாடியும் முறையிட்டார். 'தமிழகத்தில், பி.ஜே.பி ஆட்சி வர விரும்புகிறீர்களே... தமிழகத்துக்கு 62,000 கோடி ரூபாய் தாருங்கள்' என தமிழகத் தலைவர்கள் கேட்டார்கள். ஆனால், கொடுத்தது மொத்தம் 2,000 கோடி ரூபாய் மட்டும்தான்.

முத்தரசன்

தமிழக அரசு, தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. வர்தா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ்., மத்திய அரசிடம் நிதிகேட்டு பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்டார். ஆனால் பலனில்லை. மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் இந்தியைக் கட்டாயப்படுத்த வேண்டும் எனும் மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. இந்தி, வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ரிசர்வ் பேங்க் கவர்னர், 'நாட்டின் பொருளாதாரம் கடன் ரத்தால் சீரழியும்' என்கிறார். விவசாயத் துறை அமைச்சர் இதை வழிமொழிகிறார். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வட்டியும், முதலும் வரவில்லை... மல்லையாவுக்குக் கொடுத்த கடனை வசூலிக்கவில்லை மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு நடவடிக்கை குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும். ஆனால், அமைக்கவில்லை. மாறாக, ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இதற்குத் தமிழக பி.ஜே.பி-யின் பதில் என்ன? மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு ரத்து தொடர்பாகப் போராட்டம் 15 நாள்களாகத் தொடர்கிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் மருத்துவர் போராட்டங்களை வாழ்த்தியிருக்கிறார்கள். ஆளும் கட்சிகளைத் தவிர. இவை அனைத்தும் தமிழகத்தின் உரிமை. விவசாயிகள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிராகச் செயல்படும் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது கனவாகவே தொடரும். ஒருபோதும் அக்கட்சி ஆட்சிக்கு வர இயலாது.

ஜெயலலிதா இறந்துவிட்டார்... தமிழகத்தில் பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அவரது மரணத்துக்கு அ.தி.மு.க உறுப்பினர்களே காரணம். அவரது இறப்புக்குப் பிறகு உட்கட்சிப் பூசலால் கட்சி தடுமாறுகிறது. இது அவருக்குக் களங்கம் கற்பிப்பது. விவசாயப் பிரச்னைகளுக்கு மாநில அரசிடமிருந்து தீர்வுபெற முடியவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெறாத காரணத்தால் மாநில அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இத்தனை பிரச்னைகளுக்கும் யார் காரணம்? மோடி சர்க்கார் காரணமில்லையா? பி.ஜே.பி ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தபிறகு அதன் தலைமையிலான மத்திய அரசு, அ.தி.மு.க-வைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. கொடநாட்டில் பல மர்மங்கள் தொடர்கின்றன. கொள்ளை, கொலை நடந்துள்ளது. முதல்வரின் அறைகளைக் குறிவைத்தே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனகராஜ் விபத்தின் மூலம் மரணம். இரண்டாவது குற்றவாளியும் விபத்தில் மரணம். அதேபோல் சிறுதாவூர் பங்களாவில் தீப்பிடித்து எரிகிறது. இவை அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று கூறுவதின் மர்மம் என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க பலவீனமடைந்துள்ளதைப் பயன்படுத்தி, தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என பகல் கனவு காண்கிறது. அ.தி.மு.க அணிகள் ஒன்றுசேர்வது மோடியின் கைகளில் இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும்வரை இது தொடரும்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்