வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (05/05/2017)

கடைசி தொடர்பு:16:26 (05/05/2017)

எடப்பாடி பழனிசாமி சமரசத்தை ஏற்றதா பா.ஜ.க மேலிடம்?! - சசிகலா ‘நம்பிக்கை’யின் பின்னணி #VikatanExclusive

சசிகலா

பெங்களூரு சிறையில் இருந்தபடியே தமிழக அரசியல் சூழல்களைக் கவனித்து வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ‘சொத்துக்குவிப்பு வழக்கில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ததற்குக் காரணமே, தீர்ப்புக்குத் தடை வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கைதான். கட்சிக்குள்ளும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகியோர் இடையில் இணைப்பு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. 'சசிகலா குடும்பத்துடன் உறவு வைத்துக் கொண்டு, நாடகம் ஆடுகிறார்கள். அந்தக் குடும்பத்தை முழுமையாக அகற்றும் வரையில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை' எனக் கொந்தளிக்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, 'கட்சிப் பதவியும் வேண்டும்; முதலமைச்சர் பதவியும் வேண்டும் என அனைத்தையும் அவர்கள் கேட்கிறார்கள். நிதி அமைச்சர் பதவியைத் தவிர பன்னீர்செல்வத்துக்கு வேறு எதுவும் கொடுக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. எங்கள் பக்கம் 90 சதவீத நிர்வாகிகள் உள்ளனர்' என வரிந்து கட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார் பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியும், நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். "இரண்டு தரப்பினரும் சுமூக உடன்பாட்டுக்கு வருவதாகத் தெரியவில்லை. ‘அணிகள் இணைவதால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' என தினகரன் விலகிவிட்டார். 'சசிகலாவும் சிறையில் இருப்பதால், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வாருங்கள்' என்றால், பன்னீர்செல்வம் அணியினர் முரண்டு பிடிக்கிறார்கள். இப்படியே போனால், அ.தி.மு.க என்ற ஒரு கட்சி இல்லாமல் போய்விடும் என்பதால், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் சசிகலா" என விவரித்த அவருடைய உறவினர் ஒருவர், 

"பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்பு போல சசிகலாவை சந்திக்க முடிவதில்லை. 15 நாளைக்கு ஒருமுறைதான் அவரைச் சந்திக்க முடியும். முன்பு வாரத்துக்கு ஓரிருமுறை வழக்கறிஞர்கள் சந்தித்து வந்தனர். 'சிறை வழியாக தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்தே அசைண்மென்ட் செல்கிறது' என்ற சந்தேகத்தில், பார்வையாளர்களுக்கு கெடுபிடி விதித்திருக்கிறது சிறை நிர்வாகம். ஆனாலும், மத்திய அரசிடம் அனுசரித்துச் சென்றே காரியம் சாதிக்கும் வேலைகளில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. 'நீங்கள் சொல்வதைக் கேட்கும் அரசாக இது இருக்கும்' என எடப்பாடி பழனிசாமி இறங்கிச் செல்கிறார். அமைச்சரவைக் கூட்டத்திலேயே, 'மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்' என உத்தரவிட்டு, மீடியாக்களிடம் செய்தி பரப்பினார். இது முழுக்க முழுக்க பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகள்தான். 'இதற்கு மேலும் சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ ஆட்சி அதிகாரத்துக்குள் வர மாட்டார்கள்' என்பதை டெல்லி தூதுவர்கள் மூலம் தெரிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் வந்ததால்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் சீராய்வு மனு போட்டார் சசிகலா. இதற்கு முன்பு பெங்களூரு சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றல் கோரி மனு செய்யும் வேலைகளில் வழக்கறிஞர்கள் இறங்கினார்கள். அதற்குப் பதில் அளித்த சசிகலா, 'சிறை மாறினால் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும். இரண்டு அரசுகளும் விருப்பம் தெரிவித்தாலும், இப்போதுள்ள சூழலில் அமைதியாக இருப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார். 

எடப்பாடி பழனிசாமி

இப்போது மனு போடுவதற்குக் காரணமே, டெல்லியில் இருந்து வந்த தகவல்கள்தான். 'கட்சி தங்கள் கையைவிட்டுப் போய்விடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறையில் இருக்கப் போகிறார் தினகரன். அப்படியே அவர் வெளியில் வந்தாலும், பெரா வழக்குகளின் மூலம் அவரை நெருக்குவார்கள். தற்போதுள்ள சூழலில் இரண்டு விஷயங்களை யோசிக்கிறார் சசிகலா. ஒன்று, 'கட்சிக்கு நான்தான் பொதுச் செயலாளர்' என்று உணர்த்தும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது; இரண்டாவது தனது குடும்பத்தில் இருந்து ஒருவரை முன்னிறுத்துவது. இதை அறிந்து, கட்சிப் பதவிக்காக பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க விரும்பினார் டாக்டர் வெங்கடேஷ். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இளவரசி மகன் விவேக்கை முன்னிறுத்தியபோதும், 'அவருக்கு சசிகலா உறவினர் என்ற இமேஜைவிட, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர் என்ற இமேஜ் உள்ளது. ஆனால், கட்சிப் பதவியை தாங்கக் கூடிய வயது அவருக்கு வரவில்லை. ஜெயா டி.வியை மட்டும் நிர்வகிக்கட்டும்' என்று உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, தானே களமிறங்கும் எண்ணத்தில்தான் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். தீர்ப்புக்குத் தடை கிடைத்தால், 'ஜாமீனில் வெளிவந்துவிடலாம்' என நம்புகிறார்" என விவரித்தவர், 

"அ.தி.மு.க என்ற கட்சி தற்போது மூன்று அணிகளாகப் பிரிந்து கிடந்தாலும், சசிகலா தரப்புக்கு சாதகமாக நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தினகரன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றன. அதேபோல், கட்சிக்கு என புதிய செய்தித் தொடர்பாளர்களை அறிவிக்கும் முடிவில் இருக்கிறார் சசிகலா. நமது எம்.ஜி.ஆர் மருது அழகுராஜ் உள்ளிட்டவர்களுக்குக் கட்சிப் பதவி வழங்க இருக்கிறார். இதன்மூலம், தங்களுக்கு ஆதரவான குரல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என குடும்ப உறுப்பினர்கள் திட்டமிடுகின்றனர். சீராய்வு மனுவின் தீர்ப்பை ரொம்பவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சசிகலா" என்றார் நிதானமாக. 

"ஆட்சி அதிகாரத்தையே சசிகலா குடும்பம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. திவாகரன் தொடர்புடையவர்கள் சொல்வதுதான் ஆட்சியில் எடுபடுகிறது. ஜெயா டி.வியும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. அதனால்தான், 'கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி' எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். இணைப்பு என்ற பெயரில் பன்னீர்செல்வத்தைப் பதம் பார்க்கும் வேலைகளை கூர்தீட்டி வருகின்றனர். எனவேதான், மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பன்னீர்செல்வம். 'நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என்பதை மக்கள் அறிவார்கள்" என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர்.


டிரெண்டிங் @ விகடன்