''இனி எலக்‌ஷன்னு வரட்டும்... குடத்தாலேயே விரட்றோம்'' - ஆர்.கே.நகர் பெண்கள் ஆவேசம் #RKNagarSpotVisit | If somebody comes for election campaign once again, we will beat them - slams RK nagar ladies!

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (05/05/2017)

கடைசி தொடர்பு:16:56 (05/05/2017)

''இனி எலக்‌ஷன்னு வரட்டும்... குடத்தாலேயே விரட்றோம்'' - ஆர்.கே.நகர் பெண்கள் ஆவேசம் #RKNagarSpotVisit

 ஆர்.கே.நகர் பெண்கள்

ரபர தமிழக அரசியல் சூழலில் கடந்த மாதம் விறுவிறுவென  நடந்து கொண்டிருந்தது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேலைகள். ஏப்ரல் பன்னிரண்டாம் தேதி தங்கள் தொகுதிக்கென ஓர் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்துவிடலாம். நமக்கான தேவைகளும் கோரிக்கைகளும் விரைவில் பூர்த்தியாகிவிடுமென விரலில் மை  பதிக்கக் காத்துக்கொண்டிருந்த வாக்காளர்களுக்கு விழிகளில் ஏக்கமே மிஞ்சியிருந்தது. எலக்‌சனுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக இடைத்தேர்தலை ரத்து செய்து அதிரடியாய் ஆப்படித்தது தேர்தல் ஆணையம். காரணம், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்ததுதான். 

மைக் செட்டும், பிரசார மேடைகளும், கட்சிக் கொடிகளுமாக திருவிழாவைப்போல் கொண்டாட்டத்தோடு இருந்த ஆர்.கே நகர் தொகுதி சட்டென ஒரே நாளில் அமைதியாகிவிட்டதா, இப்போது அங்கே என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது? தொகுதி எப்படி இருக்கிறது? தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வெள்ளிக்கிழமை காலையிலேயே சென்று இறங்கினோம். 

தெருவுக்குத் தெரு மாரியம்மன் பாடல்கள் ஒலிக்க,  பக்திப் பரவசத்தோடு நாம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் அன்று அலுவலகத்துக்குச் செல்பவர்களை விட கோவில்களுக்குப் போகிறவர்கள்தான் அதிகமாக தென்பட்டார்கள். அவர்களில் பெண்கள்தான் நமது டார்கெட். அவர்களோடு பேச ஆரம்பித்தோம். 

ஆர்.கே.நகர் பெண்கள்

பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவிலுள்ள மாரியம்மன் கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்த வசந்தா என்பவரிடம் பேசினோம்,  “எலெக்சன் சமயத்துல ஜே ஜேன்னு இருந்த எடம் தம்பி இது. தெனமும் ஒவ்வொரு கட்சிக்காரங்களும் வந்து காசு கொடுத்துட்டு போனாங்க. காசப் பாத்ததும் சனங்களும் ரொம்ப ஆர்வமா இருந்துச்சுங்க. காசு கொடுத்தாங்களே புண்ணியவானுங்க எல்லாருக்குமா கொடுத்தானுங்க. அதையும் பாத்து பாத்துதான் கொடுத்தானுங்கயா. நான் இங்க கோவிலாண்ட பூ வித்துனு பொழக்கிறேன். என் அம்மா கை, கால் முடியாத வீட்டுல கெடக்குது. அதுக்குகூட ஒரு உதவித்தொகை கொடுக்கலையா.

நல்லா இருந்த எடத்த வந்து நாறடிச்சிட்டுப் போயிட்டானுங்க. அதுல வெளியூர்ல இருந்து வரானுக பாரு அவங்கள பத்தி தொந்தரவே இல்ல. உள்ளயே கெடக்கானுங்களே கட்சிக்காரனுங்க அவங்கதான்யா தொல்லையே. தமிழ்நாட்டுல எல்லா தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் இருக்குறாங்க. நாங்க மட்டும் என்ன பாவம் செஞ்சோம். இங்க தேர்தல் சீக்கிரமே வேணும். நல்ல தலைவர நாங்க முடிவு பண்ணிக்குறோம். அதோட, எங்களுக்கும் நெறய தேவை இருக்குயா. ஆனா, இப்போ இந்த எடத்துக்கு  தீர்வு வருமாண்ணே தெரியல. அதோ தெரு முக்குல ஒரு ஒயின்ஷாப்பு இருக்கு. அத யாரு இழுத்து மூடுறாங்களோ அவங்களுக்குத்தான் எங்க ஓட்டு. பொம்பளப்புள்ளங்க அந்த வழியா போகவே முடியல தம்பி. குடிச்சிப்போட்டு வந்து மேலயே விழுந்துடுற மாதிரி வரானுங்க. இதுக்கெல்லாம் தேர்தல் வந்தாதானே தீர்வு கெடைக்கும்” வசந்தா அம்மாவிடம் தங்கள் பகுதிக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

மகாராணி தியேட்டர் அருகே மளிகை கடை வைத்திருக்கும் கார்த்திகை லெட்சுமி, “ஆரம்பத்துல எப்புடி இருந்துச்சோ அப்டியேதாம்ப்பா இப்பவும் இருக்கு. நாம வேலை பாத்தாதான் நமக்கு சோறு. கட்சிக்காரங்க வந்து வித்தை காட்டுனதும் பொழப்ப போட்டுட்டு போய் வேடிக்கை பாக்க முடியாது. அதே சமயத்துல தேர்தல் வேணாம்னும் சொல்லிட முடியாது. ரெண்டு கட்சிங்களும் மாறி மாறி சண்ட போடாம சமரசமா பேசி வச்சி வந்தாங்கன்னா நாங்க நல்ல முடிவு எடுப்போம். அவங்களோட பொறுப்பை அவங்க உணர்ந்து வருவாங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு”.


 ஆர்.கே.நகர் விஜயா எலக்‌ஷன்

“என் வீடு ரெண்டு தெரு தள்ளி இருக்கு. குடிக்க நல்ல தண்ணி கெடையாது.அதனாலதான் இங்க வந்து அடிபம்புல அடிச்சிட்டு போறேன். அதுவும் ரெண்டு நாளைக்கு ஒருமுறைதான் தண்ணி வருது. எனக்கு என்னோட பொழப்பே பெரும்பாடா இருக்குது. இதுல அரசியல் பத்திலாம் பேச நேரம் இல்லப்பா. தேர்தல் வச்சாங்கன்னா போய் ஓட்டுப் போடப்போறேன். அவ்ளோதான்” என்று அலுத்துக் கொள்கிறார்  விஜயா.

முனியம்மா எலக்‌ஷன்

“கட்சிக்காரங்க எல்லாரும் அடிக்கடி வந்து போயிட்டு இருந்தாங்க.  போட்டி போட்டு காசு கொடுத்தாங்க. எங்க பகுதியில இருக்குற படிச்ச பசங்க காசெல்லாம் வேணாம்னு சொன்னாலும் அவங்க வீட்டுல கொடுத்துட்டு போயிட்டாங்க. இங்க எல்லாமே காசு கொடுத்தாதான் நடக்கும்னு அவங்க தப்புக் கணக்கு போட்டுட்டாங்க. நம்மள சுத்தி இருக்குற பிரச்னைய பத்தி யாருமே பேசல. பத்தாந்தேதி வரை இங்க வியாபாரம்லாம் நல்லா நடந்துட்டு இருந்துச்சு. இப்போ அதிகமா இல்லாட்டியும் ஏதோ ஓரளவுக்கு போகுது.  என்ன எலக்ஷன் சமயத்துல சுத்தி சுத்தி வந்தவுங்க இப்போ எட்டிக்கூட பாக்கல. அததான் வேதனையா இருக்குது” என்கிறார் ஹோட்டலில் வேலை பார்க்கும் முனியம்மா.

பச்சையம்மாள் ஆர்கேநகர் எலக்‌ஷன்

இல்லத்தரசி பச்சையம்மாள் பேசும்போது, “ இந்தப் பகுதியில இருந்த மண்டபம், சமுதாயக்கூடம் முழுக்க கூட்டமா இருக்கும். எல்லா இடத்துலயும் கட்சிக்காரங்கதான் இருந்தாங்க. தேர்தல் ரத்துன்னு சொன்ன அடுத்த நிமிஷமே இந்த எடம் வெறிச்சோடி போயிடுச்சு. அவங்களுக்குத் தேவைனு வந்ததும் ஓடி வந்து வேலை பாத்தவங்க இப்போ எங்க கெடக்குறாங்கன்னே தெரியல. இனிமேலும் சனங்க அவங்கள உள்ள விடுவாங்க. எல்லாரும் சுதாரிச்சிட்டாங்க கண்ணு. சாரதாரண ஏழ சனங்களுக்கு என்னப்பா பெருசா தேவை இருந்துடப் போகுது. ரேசனுக்குப் போனா எந்தப் பொருளும் இல்லன்னு சொல்லாம கொடுக்கணும். தண்ணிக்குப் பஞ்சம் இல்லாம இருக்கணும் அவ்ளோதானே. அதைக்கூட சரியா செஞ்சிக் கொடுக்காதவங்க இனி எதுக்குயா” ஆதங்கத்தோடு பேசுகிறார் பச்சையம்மாள். 

தெருமுனையில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த வெங்கட்டம்மாவும் ரத்னாவும் மாறி மாறி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். “நாங்க என்ன வீடு கட்டிக் கொடுங்க, இலவசமா ஆடு கொடுங்க, மாடு கொடுங்கன்னாயா கேக்குறோம். குடிக்க நல்ல தண்ணியக் கொடுங்க, சாக்கடைய சுத்தம் பண்ணுங்கன்னுதான்யா கேக்குறோம். ஆனா, இவங்க ஒரு மடக்குத்தண்ணிக்கு எங்கள திண்டாட விடுறானுங்க. இனிமேலும் எலக்ஷன் அது இதுன்னு எவனாவது உள்ள வரட்டும் கையில இருக்குற கொடத்தாலேயே வெரட்டி அடிக்கிறோம்” என்கிறார்கள் அழுத்தமாக.

அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலையம் வந்தோம். ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளைப் பிடித்து வேலைக்குச் செல்கிறார்கள். நாம உழைத்தால்தான் நமக்கு சோறு என சொல்லிய கார்த்திகை லெட்சுமி சட்டென நினைவுக்கு வந்தார். அதுவும் உண்மைதானே. 


டிரெண்டிங் @ விகடன்