அரசு மருத்துவர்கள் மீது எஸ்மாவை பயன்படுத்துங்கள்! அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்

மீண்டும் அவகாசம் அளித்து போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அதிரடியாக கூறியுள்ளது.

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று காலை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்கள் போராட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜரானார்.  அப்போது, உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாரும் அரசு மருத்துவமனையை அணுகுவதில்லை. மருத்துவர்கள் தொழிலாளர்கள் இல்லை. கடவுள்போல் மக்களால் மதிக்கப்படுபவர்கள். நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று கூறியது.

மேலும், வழக்கு இருக்கிறபோது போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை நம்பவில்லை என்பதாகும் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்களுடன் மீண்டும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தது. 

உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நோயாளிகளுக்கு பாதிப்பின்றி நடக்கும் மருத்துவ சேவை பற்றி விளக்கம் அளித்துள்ளேன். பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிபதிகள் கூறினர். நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படாது என உறுதியளித்தோம்" என்று கூறினார்.

வழக்கை தொடர்ந்த வேலன் கூறுகையில், இரண்டு வாரத்தில் சுமுக முடிவு காண சுகாதாரத்துறை செயலாளர் அவகாசம் கேட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

போராட்டம் தாெடரும்

இதனிடையே,  மருத்துவர்கள், பணியாளர்களின் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் சங்கச் செயலாளர் கதிர்வேல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் போராட்டம் தொடர்ந்திருக்காது. போராட்டத்துக்கு மதிப்பளித்து உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே போராட்டம் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!