ஆன்லைனில் மருந்துகள் விற்பனை! மத்திய அரசுக்கு எதிராக மருந்து வணிகர்கள்

ஆன்லைன் வர்த்தகத்தில் அடுத்த அதிரடியாக மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் களமிறங்கவுள்ளனர்.

medicine

உண்ணும் உணவு தொடங்கி, உடுத்தும் உடை வரை அனைத்தும் ஆன்லைனில் வந்துவிட்டது. இதன் அடுத்த கட்டமாக மருந்துப் பொருள்களும் விற்பனைக்குத் தயாராகி வருகிறது. இதற்கு முன்னரே மருந்து வணிகர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும், மீண்டும் இ-ப்ளாட்ஃபார்ம் என்னும் வடிவத்தில் மருந்து வணிகத்தை ஆன்லைன் வர்த்தகம் கைப்பற்றப்பார்க்கிறது. மத்திய அரசின் இத்திட்டத்தை கண்டித்து மருந்து வணிகர்கள் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடையடைப்பு நடத்தப்பட்டது.

med

இந்நிலையில், மத்திய அரசின் மூலம் திணிக்கப்படும் திட்டத்துக்கு எதிராக மீண்டும் மருந்து வணிகர் சங்கம் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, மருந்து வணிகர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'ஆன்லைனில் மருந்து வணிகத்தை மேற்கொள்ளும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு எங்கள் எதிர்ப்பை மீறி திணிக்க முயல்கிறது. இதைக் கண்டித்து அகில இந்திய அளவில் கடையடைப்பு நடத்தியும் பயனில்லை. மேலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை பலமுறை சந்திக்க முயன்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் சிறு, குறு மருந்துக் கடைகள் வைத்திருப்போர் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். மேலும், பல தவறான மருந்துகளை மிக எளிதாக இளைஞர்களும் மாணவர்களும் வாங்கும் பேராபத்தும் உண்டு. இதன் மூலம் கருத்தடை மாத்திரைகளைக் கூட எளிய முறையில் வாங்க முடியும். இதுபோன்ற பல பாதகமான அம்சங்களே இத்திட்டத்தில் உள்ளன. எனவே, இதற்கு எதிராக அனைத்து மருந்து வணிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளோம். விரைவில் இத்திட்டத்துக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்' என்கிறார் அந்த மருந்து வணிகர் சங்க நிர்வாகி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!