வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (06/05/2017)

கடைசி தொடர்பு:11:25 (06/05/2017)

வறண்டு காட்சியளிக்கும் கும்பகோணம் மகாமகக் குளம்!

kumbakonam

உலகப் பிரசித்திபெற்றது, கும்பகோணம் மகாமகத் திருவிழா. திருவிழாவின் சிறப்பே, மகாமகக் குளத்தில் புனித நீராடல்தான். மகாமகக் குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் புண்ணியமாகக் கருதுவார்கள். ஆனால், அடிக்கும் வெயிலுக்கு, சிறப்பு வாய்ந்த குளமும் தப்பிக்கவில்லை. பல லட்சம் பக்தர்கள் புனித நீராடிய மகாமகக் குளம் தற்போது தண்ணீரின்றிக் காட்சியளிக்கிறது. இதனால், வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும், குளத்தில் தண்ணீர் இல்லாதது கண்டு வருந்துவதைக் காணமுடிகிறது.

இந்திய அளவில் மூன்று முக்கியமான தீர்த்தங்கள் எனக் காசி, ராமேஸ்வரம், கும்பகோண மகாமகத் தீர்த்தங்களைத்தான் சொல்வார்கள்.  அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மகாமகக் குளம் வறண்டுள்ளது. குளத்தின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 4.96 ஏக்கர். ஆழம் 22 அடி. இந்தக் குளத்துக்கு அரசலாற்றில் இருந்துதான் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதன் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளால் தடைப்பட்டதும், நகராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து மகாமகக் குளத்துக்குத் தண்ணீர்விட்டனர். தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு, குளம் வறண்டுவிட்டது.