சிட்டியிலிருந்து களத்தூர் கிராமத்துக்கு மாணவர்களை வரவழைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்! | Government school teacher moved students from city to village

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (06/05/2017)

கடைசி தொடர்பு:15:06 (06/05/2017)

சிட்டியிலிருந்து களத்தூர் கிராமத்துக்கு மாணவர்களை வரவழைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

அரசுப் பள்ளி

‘நான்காம் வகுப்பில் உங்கள் பிள்ளை படித்தாலும், எழுதப் படிக்க தெரியவில்லையா... எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் மூன்றே மாதங்களில் தெளிவாக படிக்க, எழுதுமளவு உருவாக்கி விடுகிறோம்' என்கிறார் எம்.களத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி.

திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் மேக்கல்நாயக்கன்பட்டியில் இறங்கி, எம்.களத்தூருக்கு நான்கு கிலோமீட்டர் செல்ல வேண்டும். அங்கு செல்ல ஒருநாளைக்கு இரண்டு முறைதான் பேருந்து வசதி உண்டு.  ஆனாலும், களத்தூர் மட்டுமல்ல, அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை களத்தூர் தொடக்கப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அப்படி என்னதான் செய்கிறார்கள் அந்தப் பள்ளியில், ஆசிரியர் குருமூர்த்தியிடம் பேசினோம்.

அரசுப் பள்ளி

“தங்கள் பிள்ளை சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கோபப்படுவது சரியானதல்ல. ஏனென்றால், பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் ஆசிரியருக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இதை நான் முழுமையாக நம்புகிறேன். மாணவர் ஒருவருக்கு பாடம் புரியவில்லை என்றால் நடத்தும் விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதாக நான் புரிந்துகொள்கிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், சென்னையைப் பற்றிய பாடத்தை நடத்திக்கொண்டிருந்தேன். மெரினா பீச் பற்றி சொன்னபோது, நாங்கள் யாருமே மெரினா பீச் போனது இல்லை என்றனர். அடுத்த நாள் யூ டியூப் மூலமாக சென்னையில் புகழ்பெற்ற இடங்களை வீடியோவில் காட்டினேன். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதைப் பார்த்தார்கள். அப்போதுதான் மாணவர்களின் பாடங்களை வீடியோக்களாக உருவாக்கலாமே என்ற எண்ணம் எனக்கு உருவானது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும், இரவு 7 முதல் 12 மணி வரை தினந்தோறும் ஐந்து மணி நேரம் இதற்காக செலவிட்டேன். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றேன். ஒவ்வொரு வகுப்பாக முடித்து, இப்போது ஐந்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடங்களும் வீடியோ படங்களாக தயார் செய்துவிட்டேன். விடுமுறை நாள்கள் முழுவதையும் இதற்கென்றே ஒதுக்கினேன். கணக்குப்போட்டுப் பார்த்தால் 7,000 மணி நேரத்துக்கும் மேலாக இதற்கு காலம் தேவைப்பட்டது.

எனது முயற்சியை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துகொண்டிருந்தேன். வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர் முத்துகுமார் அவற்றைப் பார்த்துவிட்டு, ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். வீடியோ படங்களைத் திரையிடுவதற்கு நான் உதவி செய்கிறேன் என்றார். சொன்னதைப் போல 32 இன்ச் எல்.இ.டி டிவி வாங்கித்தந்தார். அதைப் பார்த்ததும் எங்கள் மாணவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவருக்கு இந்த நேரத்தில் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

அரசுப் பள்ளி

காட்சிகள் வழியே விரைவாக கற்றுக்கொள்வதுடன், சந்தேகமின்றி கற்கின்றனர். மேலும், டிவி பார்ப்பது எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. அதை பாடம் நடத்துவதற்கு பயன்படுத்தும்போது, வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இப்படி பாடம் நடத்துவது மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் இது மட்டுமே கற்பித்தலுக்கான சரியான வழி என்று கூறவில்லை. எங்கள் பள்ளியின் மாணவர்களின் இயல்பின் அடிப்படையில் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தேன்.

நான் உருவாக்கி வைத்திருக்கும் வீடியோக்களை கல்வித் துறை சார்ந்தவர்கள் பார்த்துவிட்டு, பாராட்டும்போது மகிழ்ச்சியோடு பெருமையும் சேர்ந்துகொள்கிறது." என்று இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தவரிடம், 'மாநகரத்திலிருந்து உங்களின் கிராமத்துக்கு மாணவர்கள் படிக்க வரப் போகிறார்களாமே?' என்றோம்.

"உண்மைதான். அது எனக்கே பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது. பள்ளி சேர்க்கைக்கு பெரிய அளவில் ப்ளக்ஸ் தயார் செய்து, மேக்கல்நாயக்கன்பட்டியில் வைத்திருந்தேன். அதை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்த சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்புகொண்டார். விவரங்களைக் கேட்டார். நான், எங்கள் பள்ளியில் கற்பிக்கும் முறைகளைப் பற்றி விளக்கமாக கூறினேன். ஓரிரு நாள்கள் கழித்து மனைவி, மகன்கள் ஆகியோருடன் பள்ளிக்கே வந்துவிட்டார். அவரின் மூத்த மகன், சேலம் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். ஆனால் A,B,C,D தவிர சொற்களைப் படிக்கவோ எழுதவோ தெரியவில்லை. அதிலும் தமிழில் எழுத்துகளும் முழுமையாகத் தெரியவில்லை. அவனிடம் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு, எங்கள் பள்ளியில் படித்தால் மூன்றே மாதங்களில் நன்றாக எழுதவும் படிக்கவும் செய்வான். அதற்கு நான் உறுதி; ஆனால் நீங்கள் வெளியூர் என்பதால் அங்கிருந்து வரமுடியாதே என்றேன். அவரும் ஆமாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அரசுப் பள்ளி

ஆனால், அடுத்த நாளே எங்கள் பள்ளியில்தான் அவரின் இரண்டு பிள்ளைகளைச் சேர்க்கப்போகிறேன் என்றார். இந்த கிராமத்திலேயே வாடகை வீட்டில் தங்கி படிக்க வைக்கப்போகிறாராம். எங்கள் பள்ளியை நம்பி இவ்வளவு தூரம் அவர் வருவதில் எங்களுக்கு பெருமையே." என்று கூறும் குருமூர்த்தியின் குரலில் பெருமிதம் ததும்பியது.

பள்ளியில் அருமையான நூலகமும் இசைக்கருவிகளையும் சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். குருமூர்த்தி போன்றவர்களில் அக்கரையும் கவனிப்பும் மிக்க ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளுக்கு இன்னும் கூடுதல் சிறப்பு சேர்கிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close