வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (06/05/2017)

கடைசி தொடர்பு:14:50 (06/05/2017)

தமிழகம் வருவதை ஏன் தவிர்த்தார் அமித் ஷா? - மிரள வைத்த ‘அறிவிப்பு’ பின்னணி #VikatanExclusive

அமித் ஷா-மோடி

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். ‘தமிழகத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க விரும்பினார் அமித் ஷா. ஆனால், தமிழக பா.ஜ.க நிர்வாகிகளின் அவசரத்தால் சில விஷயங்கள் வெளியாகிவிட்டன. எனவேதான், பயணத்தை ஒத்திவைத்தார்’ என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

உத்தரப்பிரதேசத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் அமித் ஷா. அதன் ஒருபகுதியாக வரும் 10-ம் தேதி சென்னை வரவும் திட்டமிட்டார். அதற்கான பணிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். “அமித் ஷாவின் பயணத்தில் கொங்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார். காரணம். சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை வாரிக் கொடுத்த பகுதி என்பதுதான். அங்கு தொழிலபதிபர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரையில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டத்தில் தனி நபர்களை சந்திக்கவும் அவர் விரும்பவில்லை. பொதுவாக, அனைவர் முன்னிலையிலும் பேசத் திட்டமிட்டிருந்தார். இதுதவிர, அமைப்புரீதியாக சில விஷயங்களை முன்னெடுக்கவும் விரும்பினார். இதுகுறித்து மாநில நிர்வாகிகளிடம் விவாதித்து வந்தார்" என விவரித்த பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், அமித் ஷாவின் பயணத் திட்டம் உறுதியானவுடன், தமிழக நிர்வாகிகளுக்குக் கண்டிப்பான குரலில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், ' நான் சென்னை வருவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக மீடியாக்களுக்குத் தகவல் கொடுங்கள். முன்கூட்டியே தகவல் கசிந்தால், சில முன்னேற்பாடுகளைச் செய்வதில் தாமதம் ஏற்படும்' எனத் தெரிவித்திருந்தார். 

தமிழிசைஅதன்படி, அவருடைய பயணத் திட்டத்தின் நோக்கத்தை மிக ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், மாநிலத் தலைவருக்குப் பெயர் கிடைப்பதை விரும்பாத சில நிர்வாகிகள், நான்காம் தேதியே மீடியாக்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டனர். இதில், அமித் ஷாவின் புரோகிராம் குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகிவிட்டன. கூடவே, 'மாநிலத் தலைவருக்கு எந்த முக்கியத்துவத்தையும் அகில இந்தியத் தலைமை கொடுக்கவில்லை. தலைவர் பதவியில் மாற்றம் வரப் போகிறது. தமிழிசை நீடிக்க வாய்ப்பில்லை' எனவும் தகவல் பரப்பினர். இதனால் கொந்தளித்துப் போன தமிழிசை, இதுகுறித்து அகில இந்திய தலைமையின் கவனத்துக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து, தமிழக நிர்வாகிகளிடம் பா.ஜ.க தலைமை அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களிடமும், ' தலைமையால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் தலைவர் பதவியில் இருக்கும்போது, புதிய தலைவர் குறித்து தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். இதனால் அமைப்புரீதியாகச் செயல்பட முடியவில்லை' என ஆதங்கப்பட்டுள்ளனர். இதனையடுத்தே, அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டது" என்றார் விரிவாக. 

“தேசியத் தலைவரின் பயணத் திட்டத்தை முன்கூட்டியே கசியவிட்ட கோபம் ஒருபுறம் இருந்தாலும், தற்போதுள்ள தமிழகச் சூழலில் சில விஷயங்களை முன்னெடுக்க விரும்புகிறது தலைமை. 'உள்ளாட்சித் தேர்தலில் என்ன மாதிரியான கூட்டணியை உருவாக்கலாம்?' என மாநிலத் தலைவரிடம் கேட்டுள்ளனர். அவரோ, 'திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகங்களைத் தவிர்த்து, நம்மை ஆதரிக்கும் சமூகங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரலாம். அதிக வார்டுகளில் நாம் போட்டியிட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க தலைமைக் கழக நிர்வாகிகள், 'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு, தமிழகம் வருவது குறித்து அமித் ஷா முடிவு செய்வார்' எனக் கூறியுள்ளனர். அமித் ஷா வருகை ரத்தானதால், கோவைத் தொழிலதிபர்கள் வருத்தத்தில் உள்ளனர்" என்கிறார் பா.ஜ.க மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர். 

தமிழக பா.ஜ.கவில் நடக்கும் கோஷ்டி மோதலின் விளைவாகவே, பயணத்தை ரத்து செய்திருக்கிறார் அமித் ஷா. 'பொன்னாரா? தமிழிசையா?' என்ற யுத்தத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறியக் காத்திருக்கிறார்கள் பா.ஜ.க தொண்டர்கள்.


டிரெண்டிங் @ விகடன்