சிறையில், தூக்கில் தொங்கிய கைதி! ஜாமீனில் எடுக்காததால் விபரீத முடிவு?


காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சிறைச்சாலையில் விசாரணைக் கைதியான துரை என்பவர், மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இந்தச் சம்பவம் சிறைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம், மடிப்பாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர், துரை (47). கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, சிறுமி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக, சென்னை மடிப்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக, கடந்த ஒரு மாதமாக இருந்துவருகிறார்.
2014 வரை செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலை, அகதிகள் சிறப்பு முகாமாகச் செயல்பட்டுவந்தது. இலங்கை அகதிகள் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்த நிலையில், அகதிகள் சிறப்பு முகாம், 2014-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதிக்கு மாற்றப்பட்டது. பிறகு, கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் செங்கல்பட்டு மாவட்டச் சிறைச்சாலை திறக்கப்பட்டது. தற்போது, சுமார் 80 கைதிகள் இங்கே அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், கைதி துரை மர்மமான முறையில் இறந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

காவல்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். “சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததால், அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் ஜாமீனில் எடுக்க விரும்பவில்லை. இதனால், மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். ஜெயிலில் அமைதியாக இருப்பார். சமையல் நன்றாகத் தெரியும் என்பதால், இவரை சிறைத்துறையினர் சமையல் வேலைக்குப் பயன்படுத்திக்கொண்டனர். காவலர்களுக்கு ருசியாகவும், வெரைட்டியாகவும் இவர் சமைத்துக் கொடுத்துவந்தார். இதனால், இவர் பெரும்பாலும் சமையல் அறையிலேதான் இருப்பார். காவலர்களும் தங்களுக்குத் தேவையானதை துரையிடம் சொல்லி சமைக்கச் சொல்வார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் சமைத்துக் கொடுத்துவந்தார். இந்த நிலையில், திடீரென ஸ்டோர் ரூமில் உள்ள மின்விசிறியில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செங்கல்பட்டு பிணவறையில் துரையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் பார்க்க வராததே துரையின் இறப்புக்குக் காரணம்'' என்றார்.

உறவினர்கள் பார்க்க வராததால், கைதிகள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வார்களா எனப் பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர். மற்ற கைதிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமா... அல்லது காவல்துறையினர் தொடர்ந்து சமையல் வேலைக்கு உட்படுத்துவதால், அதன் காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமா என்பதெல்லாம் மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.

- பா.ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!