மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது! 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்புக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

high court

மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.

இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித  இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'. நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில், 'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார். இந்த நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாரயணா, 'மருத்துவர்கள் சேர்க்கையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளே பின்பற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்தாகிறது. மேலும் கிராம மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு மதிப்பெண்களும் ரத்தாகிறது. இந்தத் தீர்ப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 'நீதிபதியின் தீர்ப்பு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது' என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!