Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடையில் பாதிக்கப்படும் கால்நடைகள்... பாதுகாக்க சில வழிமுறைகள்!

கால்நடை வளர்ப்பு

கோடையின் உச்சகட்டமான அக்னி வெயில் ஆரம்பமாகிவிட்டது. வெயிலின் வெப்பநிலைத் தாக்கம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சதத்தைத் தாண்டிவிட்டது. விவசாயிகள் வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்ப்பதிலும் அதிக சிரமங்களை மேற்கொள்கின்றனர். சில விவசாயிகள் கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் கொடுக்க முடியாமல் காடுகளிலும், வனங்களிலும் கொண்டு சென்று விட்டுவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிக மழை பெய்யும் காலத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும் கோடையில்தான் கால்நடைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் பராமரிப்பில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பையும், பராமரிக்கும் முறைகளைப் பற்றி தெளிவாக விளக்குகிறார், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் நிஷா.

"கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப் போல கால்நடைகளையும் அதிகமாகப் பாதிக்கும். கால்நடைகளுக்கும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். கோடைக்காலங்களில் சூரியக் கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் மண்டல வெப்பநிலை ஆகிய அனைத்தையும் பொறுத்தே கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். அதிகமான வெப்பக் காலங்களில் கால்நடைகள் உணவு உட்கொள்ளுதல், கால்நடைகளின் வளர்ச்சி ஆகியவற்றைப் பாதிக்கும். கறவை மாடுகளில் கோடைக்காலங்களில் பால் உற்பத்தி 20% குறையும். கால்நடைகள் சினைக்கு வரும் தன்மையும் பாதிக்கப்படும். சினை பிடித்தலும் 20% முதல் 30% வரை பாதிக்கப்படுகிறது.

வெயில் காலத்தில் உணவு உட்கொள்ளுதலும் பாதியாக குறையும், தண்ணீரை அதிகமாக உட்கொள்ளும். எருமை மாடுகளில் பசுக்களைவிட வேர்வை நாளங்கள் குறைவாக உள்ளதால் எருமைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. எருமை மாட்டின் தோல் கருப்பாக இருப்பதால் சூரிய கதிர்வீச்சு அதிகமாகத் தாக்கும். எருமையின் சினைப் பருவகால அறிகுறிகள் முழுமையாகத் தென்படாது. பருவத்துக்கு வரும் காலமும் குறையும். ஆடுகளில் அதிகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத் திறன் குறையும். கோடையில் கோழிகள் உணவு உட்கொள்ளுதல் குறையும் வாய்ப்புகளும் அதிகம். கோழிகள் வெபத்தை தாங்க ம் முடியாமல் வாய் வழியாக மூச்சுவிடும். இதனால் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும். முறையான பராமரிப்பு இல்லாமல் போனால் அதிகமான கோழிகள் இறப்பினை சந்திக்கக் கூடும். வளர்ப்பு பன்றிகளில் வெயில் வெப்ப தாக்க நோய், தோல்புண், கருவுறுதல் குறைவு ஆகியவை ஏற்படும். நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் காளைகள் வெயில் காலத்தில் மேலும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

பரண்மேல் ஆடு வளர்ப்பு

கால்நடைகள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.நிழலான இடங்களைத் தேடி அலைந்து நின்று கொள்ளும்.
2. மூச்சுவிடுதல் அதிகமாகும், அதிகமாக மூச்சிறைக்கும்.
3. அளவுக்கு அதிகமான நீர் உட்கொள்ளும்
4. பசியின்மை ஏற்பட்டு உணவு உட்கொள்ளுதல் குறையும்.
5. மேய்யச்சலின்போது சோம்பல் ஏற்பட்டு கால்நடைகள் மந்தமாக அலையும்.
6. மாடுகளில் உமிழ்நீரானது அதிகரிக்கும்.
7. எப்போதும் சிறிய நடுக்கத்துடன் காணப்படும்.
8. வெயிலின் தாக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டால் உணர்வு இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

பராமரிக்கும் முறைகள்:

கால்நடைகளுக்குக் கோடையில் அதிகமான காற்றோட்டமுள்ள இடங்கள் அவசியம். கால்நடைகள் இருக்கும் கொட்டகைக்குள் சூரிய ஒளிபடாதவறும் இடம் அமைய வேண்டும். கால்நடை கொட்டகை அமைக்கும்போது அகலம் குறைவாக இருக்க வேண்டும். அதாவது 20 முதல் 25 அடி வரை அகலம் இருக்கலாம். மேலும் கொட்டகையின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். கூரையின் நடுவில் 10-15 அடி உயரமாகவும், பக்கவாட்டில் 5-8 அடி வரை உரமாகவும் அமைக்க வேண்டும். கூரையின் இருபக்கமும் சாய்வை சற்று நீளமாக அமைக்க வேண்டும். இவ்வாறு கொட்டகை அமைப்பதால் வெயிலின் தாக்கம் குறையும். கொட்டகையின் கூரையை தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு அமைத்தால் கொட்டகையின் உள்ளே வெப்பம் வெகுவாக குறையும். ஆஸ்பெட்டாஸ், அலுமினியம் ஆகியவற்றால் கொட்டகை அமைக்கப்பட்டால் வெயில் நேரங்களில் கொட்டகையின் மேற்புறம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரையின் மேற்புறம் நனைந்த ஓலை, வைக்கோல் ஆகியவற்றைப் பரப்பி அதன் மேல் தண்ணீர் ஊற்றினால் வெயிலின் தாக்கத்தை மிகவும் கட்டுப்படுத்தலாம்.

வெயில் நேரத்தில் மரநிழல் உள்ள இடங்களில் கால்நடைகளை கட்டலாம். வெயில் மிகவும் அதிகமாக இருக்கும்போது கால்நடைகளைக் குளிப்பாட்ட வேண்டும். கொட்டகையின்மீது நீர்த்தெளிப்பான் அமைப்பது மூலமும் வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். எருமை மற்றும் பன்றிகள் வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள குளிர்ச்சியான இடங்களில் படுத்தோ அல்லது நீர் நிலைகளில் தனது உடலை நனைத்தோ உஷ்ணத்தை தணித்துக் கொள்ளும். கூண்டுகளில் வளர்க்கப்படும் கோழிகள் கோடையில் அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கும் மேற்சொன்னபடி கொட்டகை உயரமாகவும், தென்னை கீற்றுகளிலும், கூண்டினை சுற்றிலும் ஈரச் சாக்குகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதேபோல கோழிகளுக்கு அதிகமான தண்ணீர் கொடுக்க வேண்டும். செம்மறியாடுகளுக்கு அவற்றின் கம்பளத்தோல் வெயிலிலிருந்து உண்டாகும் புண்களிலிருந்து பாதுகாக்கிறது. வெயில் காலங்களில் செம்மறியாடுகளுக்கு முடிவெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளின் கொட்டகையை சுற்றிலும் புற்கள், மரங்கள் அதாவது சுற்றிலும் பசுமையாக இருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகள் தப்பிக்கலாம்.

கால்நடை

நம் நாட்டுக் கால்நடைகள் வெயில் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டு இன கால்நடைகள் வெயிலைத் தாக்கு பிடிக்காது. பொதுவாக ஹால்ஸ்டியன் பிரிசியன் கலப்பினப் பசுக்கள், ஜெர்சி பசுக்கள் வெயிலால் அதிகமாகப் பாதிப்படையும். கோடையில் கால்நடைகளுக்கு உணவளிக்கும்போது அதிக எரிசக்தியும், புரதச்சத்தும் உள்ள உணவாக அளிக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலங்களில் உணவு உட்கொள்ளுதல் குறைந்து, நீர் அருந்துவது அதிகமாகும். உணவில் உள்ள சத்துக்கள் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும். மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் விடியற்காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்குச் செல்வது நல்லது. மதிய வேளைகளில் நிழலான இடங்களில் அவற்றை வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்கு எப்போதும் சுத்தமான நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மற்ற கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்தான உணவு, மருத்துவம் ஆகியவற்றோடு வெப்பம் அதிகம் பாதிக்காமல் பராமரிக்க வேண்டும். கோடையில் கால்நடைகளை கவனமாகப் பராமரித்து பயனடைய வேண்டும்.

தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம். தொலைபேசி - 044-27452371.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement