வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (07/05/2017)

கடைசி தொடர்பு:17:34 (07/05/2017)

போலீஸ் துரத்தியதில் வாகன ஓட்டி பரிதாப சாவு.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சுரேஷ். திருப்பூர் பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வரும் இவர், நேற்று நள்ளிரவு சிலம்பரசன் என்பவருடன் திருப்பூர் கணபதிபாளையம் பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுகொண்டு இருந்தார்.

Suresh

வீரபாண்டி பிரிவு என்ற இடத்தை கடக்கும்போது ஊர் காவல் படையினைச் சேர்ந்த சிலர், சுரேஷை வழி மறித்து மதுபோதையில் இருக்கிறாரா? என்று சோதனை செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் அங்கிருந்து தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றிருக்கிறார் சுரேஷ். அவரை துரத்திக்கொண்டு காவலர்களும் பைக்கில் பின்தொடர, மிக வேகமாக சென்ற சுரேஷ் , சென்னிமலைப்பாளையம் பகுதியில் இருந்த கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடன் பயணித்த சிலம்பரசன் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சத்தம் எழுப்ப, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரேஷின் மரணத்துக்குக் காவல்துறைதான் காரணம் என்றுகூறி, இறந்த சுரேஷின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றவிடாமல், தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

tirupur accident

கணபதிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பைக்கில்  ரோந்து செல்லும் காவல்துறையினர், வாகன ஒட்டிகளை ஒருமையில் அழைப்பதும், கேஸ் போட்டுவிடுவோம் என்று மிரட்டி, வாகன ஓட்டிகள் வைத்திருக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு அனுப்புவது தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

‘வழிப்பறி கொள்ளையர்களை போன்று தான் தினந்தோறும் இவர்களது நடவடிக்கை இருக்கிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிலரையும் உடன் வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் இங்கு காவல்துறையினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறார்கள்.

இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இப்பகுதியை கடக்கும்போது போலீஸ் காவலர்களைக் கண்டாலே, வழிப்பறி கொள்ளையர்களை பார்ப்பதுபோல், இவர்களிடம் இருந்து தப்பித்தாலே போதும் என்று நினைப்பில் வாகனத்தை வேகமாக செலுத்துகிறார்கள்.

இதனால் அடிக்கடி இந்த சாலையில் வாகன விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய மரணமும் பார்க்கப்படுகிறது’ என்று அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

காவல்துறையினர் பேசும்போது, இறந்தவரிடம்,  வண்டிக்கான ஆர்.சி புத்தகம் இல்லை. இதனால் காவல்துறையை கண்டு அச்சத்தில் வண்டியை வேகமாக செலுத்தி, விபத்தில் சிக்கிக்கொண்டார் என்கிறார்கள். 

tirupur
 

‘திருப்பூர் நகரத்தில் டாஸ்மாக் கடைகள் இப்போது அதிகமாக இல்லை என்பதனால், கடந்த சில வாரங்களாக மதுபோதையில் வாகனம் ஒட்டி வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் காவல்துறையினரின் வசூல் வேட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால், மதுபோதையில் வாகனம் ஒட்டி வருபவர்களை மடக்கி, காவல்துறையினர் அதிகமாக கேஸ் எழுதுவது கிடையாது.

இருக்கின்ற பணத்தை பிடுங்கிவிட்டு, பிரண்டஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் தங்களுடன் கூட்டிச் செல்லும் பள்ளி மாணவர்களுக்கு, உணவுக்கும், கை செலவுக்கும் பணம் கொடுக்கிறார்கள். அந்த மாணவர்களும், போலீஸ் என்ற நினைப்பிலேயே பொதுமக்களை அதட்டுவதும், மிரட்டி பணம் பிடுங்குவதும் திருப்பூர் மாநகரில் தினந்தோறும் நடைபெறும் காட்சி. 

அரசாங்கம் தானே மதுபானக் கடையை திறந்து வைத்திருக்கிறது. அங்கு சென்று மது குடித்துவிட்டு, வீடு திரும்புகையில் போலீஸ் மடக்கி பணம் பிடுங்குகிறார்கள். மது தானே பிரச்னை, மதுக்கடையே வேண்டாம்.. அகற்றுங்கள் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினாலும் போலீஸ் கைது செய்கிறார்கள். இந்நிலையில், விபத்துக்கு காரணமான காவலர் செபஸ்டின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’ என்றார் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர்.