Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“விபத்தில் கால் இழந்தேன்... நம்பிக்கையை அல்ல!” - மிஸ் இந்தியா ராஜலெட்சுமி

 ராஜலெட்சுமி

'ச்சே.. என்னடா வாழ்க்கை இது?' என்று புலம்புபவர்கள், ராஜலெட்சுமியின் கதையைக் கேட்டால் வாழ்க்கையை சலிப்பாகப் பார்க்கும் மனப்பான்மை மறந்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும்.  

புன்னகை ததும்பும் முகம், குறும்புப் பார்வை, நேர்த்தியான  ஆடை, வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெளிப்படும் நம்பிக்கை என, தன் வீல் சேரில் உட்கார்ந்தபடி அனைவரையும் வசீகரிக்கிறார் ராஜலெட்சுமி. வீல்சேர் மிஸ் இந்தியா, பல் மருத்துவர், மாடலிங்கில் சாதிப்பவர் என்று தன்னம்பிக்கை மனுஷியாக வலம் வருகிறார் ராஜலெட்சுமி. சமீபத்தில் சென்னை வந்திருந்தவரிடம் அலைபேசியில் பேசினோம். 

''பெங்களூர்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல இருந்து படிப்புல, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ்ல கில்லியா இருப்பேன். ஸ்கூல், அப்புறம் பல் மருத்துவம்னு வாழ்க்கை ஜெட் வேகத்துல போயிட்டு இருந்தது. 

காலேஜ் முடிக்கிறப்ப கோல்டு மெடல் வாங்கின சந்தோஷத்தோட சென்னையில நடந்த கான்பிரன்ஸ்க்காக வந்தேன். கான்பிரன்ஸ் போகுறதுக்காக கார் புக் பண்ணி அதுல டிராவல் பண்ணிட்டு இருந்தேன். நினைப்பெல்லாம் நடக்கப்போற கான்பிரன்ஸ் பத்தியே இருந்தது. அப்பதான் டமார்னு ஒரு சத்தம் கேட்ட மாதிரி நினைவு. அவ்வளவுதான் தெரியும். அதுகப்புறம் நடந்தது எதுவும் நினைவில்லை. 


 ராஜலெட்சுமிஹாஸ்பிட்டல்ல கண்ணு முழிச்சுப் பார்த்தப்ப என் இரண்டு கால்களும் வெட்டியெடுக்கப்பட்டிருந்தன. நான் டிராவல் பண்ணின கார் ஆக்ஸிடன்ட் ஆகியிருச்சு. அதோட பலனைத்தான் நான் அனுபவிச்சுட்டு இருக்கேன்னு உணர்ந்தேன். கால்போயிருச்சு, முதுகுத்துண்டுல பலமான அடி காரணமா வீல்சேர்தான் வாழ்க்கைன்னு ஆனது. ஒரு விபத்து என் வாழ்க்கையையே அசாதாரணமா மாத்தும்ன்னு நினைக்கவே இல்ல. வீல்சேர்ல உட்கார்றப்ப மனசுல ஏற்பட்ட வலியை தாங்கிக்கவே முடியல.நடந்ததை ஜீரணிச்சுக்கவே எனக்கு ஆறு மாசம் பிடிச்சது.

என்னைச் சுத்தி இருக்கிறவங்க, '‘ஐயோ உனக்கு இப்படி ஆயிடுச்சே?”னு பரிதாபமா பார்த்தாங்க. அது எனக்குள்ள இருந்த நம்பிக்கையை உடைச்சு என்னை இன்னும் நிலைகுலைய வைச்சது. தெனமும் அப்படிப்பட்ட வார்த்தைகள், பார்வைகளைப் பார்த்து பார்த்து நானா எனக்குள்ள வைராக்கியத்தை உருவாக்கிக்கிட்டேன். நான் சாதாரணப் பொண்ணில்ல, என்னால சாதிக்க முடியும்னு நிரூபிக்கத் துடிச்சேன். எத்தனை நாள்தான் ஒரே இடத்துல உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்து அழுதுட்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்க ஆரம்பிச்சேன்" என்கிற ராஜலெட்சுமிக்கு சிறுவயதில் இருந்தே மாடலிங் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதை மறுபடியும் புதுப்பித்திருக்கிறார் .

அதன் விளைவு, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த  மிஸ். இந்தியா  வீல்சேர் போட்டியில் அழகிப் பட்டம் வென்றிருக்கிறார் ராஜலெட்சுமி. “கிட்டதட்ட 250  பேர் கலந்துகிட்ட போட்டி அது. பேஷன், அழகு, திறமைன்னு நிறைய தேர்வுகள் வெச்சாங்க. அதெல்லாம் கடந்து வந்த எனக்கு வெற்றியைத் தேடித்தந்தது தேர்வாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்தான். ‘உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சா, யாரா வாழ ஆசைப்படுவீங்க?’னு கேட்டாங்க. ‘எனக்குக் கிடைச்ச இதே வாழ்க்கைய வாழவே ஆசைப்படுறேன்’னு சொன்னேன். பலத்த கரகோஷம், ஆரவாரத்தோட மிஸ் இந்தியா க்ரீடம் சூடின அந்த நிமிஷம் எனக்கு ஆயிரம் யானை பலம் வந்ததா ஃபீல் பண்ணினேன். அந்த நிமிஷம் கிடைச்ச தன்னம்பிக்கை அளவில்லாதது. நிச்சயம் இந்த விபத்து மட்டும் நடக்கலைன்னா நல்லா படிக்கிற பெண்ணா வாழ்க்கையைக் கடந்து போயிருப்பேன். இப்படிப்பட்ட உணர்வுகளை சந்திச்சிருக்க மாட்டேன். மிஸ் இந்தியா மேடையும் கிடைச்சிருக்காது" என்பவரின் வார்த்தைகளில் அத்தனை சந்தோஷம்.. 

மருத்துவத்திலும் இவர் சளைத்தவர் அல்ல. “என்னுடைய  அப்பா அம்மா இரண்டு பேருமே  டாக்டர்ஸ். கர்நாடகாவுல அப்பா க்ளினிக் வைச்சிருந்தாங்க. அப்பாவை எல்லாரும் ‘தேவரு’ன்னு (devaru) கூப்பிடுவாங்க. அப்படின்னா கடவுள்னு அர்த்தம்.  நான்  பத்தாவது படிச்சிட்டு இருந்தப்போ, அப்பா தவறிட்டாரு. அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கு இயல்பாகவே மருத்துவம் மேல ஆர்வம் இருந்தது” எனும் ராஜலெட்சுமி, சொந்த க்ளீனிக் வைத்து நடத்திவருகிறார்.

“நான் தொடர்ந்து பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துட்டு வரேன். அதனால, கார்  ஓட்டுறதுல இருந்து காய்கறி வாங்கிட்டு வர வரைக்கும்  பெரும்பாலும் என் வேலைகள நானே  செஞ்சிடுவேன் ” என்று உற்சாகமாகக் கூறுகிறார். 

அவ்வப்போது  மேடை நிகழ்ச்சிகளில்  தன்னம்பிக்கை உரையாற்றி வரும் இவருக்கு, மிகவும் பிடித்த பொழுதுபோக்கு ‘பயணம்!’  “எப்போ எல்லாம் நேரம் கிடைக்குதோ..அப்போ ஏதோவொரு ஊருக்குப் போயிடுவேன். பின்லாந்து, லண்டன், துபாய், இலங்கைன்னு கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்குப் போயிருக்கிறேன். இன்னும் நிறைய  ஊர்கள் பார்க்க வேண்டியது இருக்கு” என்று கூறி முடிக்கிறார்  இந்த நம்பிக்கை மனிதி! 

இவரின் தடங்கள்  இன்னும்  பல மைல்கள் நீளும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement