Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அரசை எதிர்த்தால் இதுதான் நடக்குமா?’ - இடிக்கப்பட்ட மருத்துவர் புகழேந்தியின் கிளினிக்

மருத்துவர் புகழேந்தி மருத்துவமனை

‘சைக்கிளில் வரும் டாக்டர்; காரில் வரும் பேஷண்ட்' என்றுதான் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியை அழைப்பார்கள். எந்தக் கட்டணமும் பெறாமல் கடந்த 30 ஆண்டுகளாக கிராமப்புற மருத்துவ சேவையை மேற்கொண்டு வருகிறார். கல்பாக்கம் அணுஉலையில் தொடங்கி மருத்துவ உலகின் அனைத்து மோசடிகளையும் வெளி உலகின் பார்வைக்கு முன்வைப்பவர்.

 

இன்று காலை வழக்கம்போல தன்னுடைய கிளினிக்குக்கு வந்தவருக்கு பேரதிர்ச்சி. கிளினிக்கின் கூரை ஓடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, அலுவலக நாற்காலிகளும் மருந்துக் குடுவைகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. காவல்நிலையத்தில் அவருடைய குமுறலைக் கேட்கவும் ஆள் இல்லை. வழக்கம்போல, அவரிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வந்த கிராமப்புற மக்களும் அந்தக் காட்சியை அதிர்ச்சியோடு நின்று கவனித்தார்கள். 

மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். 

மருத்துவர் புகழேந்தி“கல்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை செய்து வருகிறேன். இந்தக் கட்டடத்தில் 1990-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியில் இருந்து மருத்துவம் பார்த்து வருகிறேன். தற்போது வாடகையாக 950 ரூபாய் கொடுத்து வருகிறேன். தொடக்கத்தில் இருந்து எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு கட்டட உரிமையாளர் மனோகரனுடன் முரண்பாடு ஏற்பட்டது. 'என்னைக் காலி செய்ய வைக்க வேண்டும்' என்பதற்காக, சில வேலைகளைச் செய்தார். 'மின் கட்டண இணைப்பை முறைகேடாகப் பெற்றுவிட்டேன்' என அவதூறு பரப்பினார். நான் அவரிடம், 'அப்படி எந்த இணைப்பையும் நான் பெறவில்லை. கட்டட உரிமையாளர் ஒப்புதல் இல்லாமல் மின்வாரியத்தில் இணைப்புக்கான அனுமதி கொடுக்க மாட்டார்கள்' எனப் பதில் கொடுத்தேன். அவருக்கு வாடகை கொடுத்து அனுப்பினாலும், அதைப் பெறுவதில்லை. எனவே, நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைப் போட்டேன். வாடகையையும் நீதிமன்றத்தில் செலுத்தி வருகிறேன். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜ் என்பவரை அழைத்துக் கொண்டு என்னை வந்து பார்த்தார் மனோகரன். 'இவர் இந்த இடத்தை வாங்கிவிட்டார். இனி இவரிடம் வாடகையைக் கொடுங்கள்' என்றார். நான் பதிலுக்கு, 'நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அங்கு வாடகையை செலுத்தி வருகிறேன். அங்கு பார்த்துக் கொள்கிறேன்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டேன். 

இதனை அடுத்து சதுரங்கபட்டினம் காவல்நிலைய எழுத்தர் தயாளன் என்னைத் தேடி வந்தார். 'உங்க மேல புகார் கொடுத்திருக்காங்க. ஸ்டேசனுக்கு வாங்க'ன்னு சொன்னார். 'சிவில் வழக்கில் போலீஸார் தலையிட சட்டம் அனுமதிக்கவில்லை. பிறகு நீங்கள் எப்படி என்னை ஸ்டேசனுக்கு அழைக்க முடியும்?' எனக் கேள்வி எழுப்பினேன். அவரும் திரும்பிச் சென்றுவிட்டார். அடுத்தநாள், துரைராஜ் ஆட்கள் கிளினிக் ஓடுகளைப் பிரித்துக் கொண்டிருந்தனர். நான் உடனே சம்பவ இடத்துக்குப் போய் சத்தம் போட்டதும், ஓடிப் போய்விட்டார்கள். 'இனியும் தாமதிக்கக் கூடாது' என சதுரங்கபட்டினம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜயகுமாரிடம் புகார் மனு கொடுத்தேன். மனுவில், 'நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக என்னை அப்புறப்படுத்தப் பார்க்கின்றனர். என்னுடைய கிளினிக்குக்கு பாதுகாப்பு கொடுங்கள்' எனக் குறிப்பிட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று காலை 8.30 மணிக்கு கிளினிக் வந்து பார்த்தால் எல்லாவற்றையும் நொறுக்கிப் போட்டுவிட்டார்கள். மேல் கூரை ஓடுகளும் இல்லை. நாற்காலி, மருந்து பட்டைகள், குடுவைகள் உள்பட அனைத்தையும் சேதப்படுத்திவிட்டார்கள். 'மக்கள் வரக் கூடாது' என்பதற்காக ஜல்லிக்கல்லையும் கொட்டிவிட்டார்கள். அவசர உதவிக்கு காவல் உதவி எண்ணான 100-க்குத் தொடர்பு கொண்டேன். அவர்களும் உதவி செய்யவில்லை" என வேதனையோடு விவரித்தவர், 

"இது ஏதோ திடீரென நடந்த சம்பவமாக நான் பார்க்கவில்லை. தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். எம்.ஆர்.தடுப்பூசியின் பின்னணி குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை ஆய்வறிக்கைகளாக வெளியிட்டேன். எம்பாமிங் செய்தது முதல் அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகளைப் பட்டியலிட்டேன். என்னுடைய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளால் பதில் கூற முடியவில்லை. சதுரங்கபட்டினத்தில் தடுப்பூசி போடச் சொல்லி குழந்தைகள் வற்புறுத்தப்பட்டனர். நான் கேட்டபோது, 'காஞ்சிபுரம் கலெக்டரின் ஆர்டர்' என்றார்கள். 'தடுப்பூசியைக் கட்டாயப்படுத்த கலெக்டருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?' என சண்டை போட்டேன். நேரடியான விவாதத்துக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். என்னை வழிக்குக் கொண்டு வராத ஆத்திரத்தில்தான், கட்டட உரிமையாளர் மூலமாக என்னை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். சதுரங்கபட்டினம் காவல்நிலையத்தில் உள்ளவர்களுக்கும் எனக்கும் சில விவாதங்கள் நடந்திருக்கின்றன. இப்போதுள்ள சூழலை அவர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் மருத்துவம் பார்த்து வருகிறேன். கட்டடத்தை இடிப்பதற்கு முன்பு என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. முறையான அறிவிப்பையும் கட்டட உரிமையாளர் வெளியிடவில்லை. மக்களை வதைக்கும் மருத்துவ மோசடிகளுக்கு எதிராக தனி மனிதனாகவே போராடி வருகிறேன். எனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் சட்டரீதியாகவே எதிர்கொள்வேன்" என்றார் கொந்தளிப்புடன். 

“மருத்துவம் பார்க்க வருகின்றவர்களிடம் பார்வைக் கட்டணமாக எதையும் பெறாதவர் புகழேந்தி. பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால் சலுகை விலையில் அவருக்கு மருந்துகள் கிடைக்கின்றன. உதாரணமாக, ரத்த சோகைக்குத் தீர்வாகக் கொடுக்கப்படும் டானிக்கை, 97 ரூபாய் விலையில் மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். அதே டானிக்கை 27 ரூபாய்க்கு வாங்கி, கூடுதலாக பத்து ரூபாய் விலை வைத்து மக்களுக்கு விற்கிறார். ரத்தக் கொதிப்புக்கு வழங்கப்படும் அம்லோடிபின் என்ற மாத்திரை வெளியில் பத்து மாத்திரை 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவரோ, நான்கு ரூபாய்க்கு வாங்கி, பத்து ரூபாய்க்குக் கொடுக்கிறார். இதில் கிடைக்கும் சில ரூபாய்களைத்தான் கிளினிக் நடத்த வாடகையாகக் கொடுத்து வந்தார். தினமும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 80 நோயாளிகள் வரையில் தினமும் வந்து செல்கிறார்கள். பத்து ரூபாய் இருந்தால், அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும். மருந்துக் கம்பெனியின் பிரதிநிதிகள் யாரும் அவரை நெருங்க முடியாது. 'எந்த நோய்க்கு என்ன மருந்து மலிவான விலையில் கொடுக்கும்?' என்பதை விசாரித்து, அவரே நேரடியாக மருந்துகளைக் கொள்முதல் செய்கிறார். அவருடைய செயல்பாடுகளை மருத்துவ உலகினர் ஏற்றுக் கொள்வதில்லை. அரசின் துணையில்லாமல், அவரது கிளினிக் இடிக்கப்பட வாய்ப்பில்லை" என்கின்றனர் கல்பாக்கம் மக்கள். 

சதுரங்கப்பட்டனம் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். "விசாரணை நடந்து வருகிறது" என்றதோடு முடித்துக் கொண்டனர். எஸ்.ஐ விஜயகுமாரைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close