Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செயலற்ற உள்ளாட்சி அமைப்புகளால் சிதையும் ஜனநாயகம்!

செயலற்ற உள்ளாட்சி அமைப்புகளால்  சிதையும் ஜனநாயகம்!

''உள்ளாட்சித் தேர்தலை ஜூலை மாதத்துக்குள் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்குள் தேர்தல் நடக்குமா அல்லது மீண்டும் தமிழக அரசு நீதிமன்றத்தில் குட்டு வாங்குமா எனத் தெரியவில்லை'' என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். இதற்கிடையில், உள்ளாட்சி அமைப்புகளின் மீதான புகாரை விசாரிப்பதற்கென ஓர் அமைப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது. இது, 'தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறை மன்ற நடுவம்'' என அழைக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரிய வேண்டிய இந்த அமைப்பு, அ.தி.மு.க-வின் விதிமீறிய நியமனத்தால் அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது,

தமிழகத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார்களைத் தெரிவிப்பதற்காக இந்த அமைப்பு, 2015 ஏப்ரல் முதல் சென்னைக் கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இதை, உள்ளாட்சி அமைப்புகளின் மீதான அக்கறையில் தமிழக அரசு கொண்டுவரவில்லை. 'அவற்றின் மீதான புகார்களை விசாரிக்க இந்த அமைப்பைக் கொண்டுவந்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க முடியும்' என்று 13-வது நிதி ஆணையம் தெரிவித்துவிட்டது. இதன் பரிந்துரையைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தாததால், 2014 - 15-ம் நிதி ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தர வேண்டிய நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. அதனால், கட்டாயத்தின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் தமிழகத்தில்  கொண்டுவரப்பட்டது. அத்துடன், இந்த அமைப்புக்கு முறை மன்ற நடுவராகத் தகுதியான நபரை நியமனம் செய்யாமல்.... டாஸ்மாக நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராகவும் இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சோ.அய்யரை (ஆம்புட்ஸ்மேனா) அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவசரகதியில் நியமித்தார். இந்த அமைப்புக்கு, மாநில அளவிலான சொத்து வரிக்குழுவைச் செயல்படும் நிலையில் வைத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் உள்ளூர் நிதி தணிக்கை வருடாந்திர அறிக்கையைத் தாக்கல் செய்தல் உள்ளிட்ட ஒன்பது பரிந்துரைகளை நிதி ஆணையம் வழங்கியிருக்கிறது. ஆனால், பரிந்துரைகள் எதையும் அது அமல்படுத்தாத நிலையில், சோ.அய்யரை ஆம்புட்ஸ்மேனாக நியமிப்பதில் மட்டும் சட்டத்திருத்தம் செய்து  தமிழக அரசு அவசரம் காட்டியது. ''உத்தரப்பிரதேசம் மாநிலம்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக உள்ளாட்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதிபெற்று இருக்கிறது. இதற்குத் தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்'' என்று ஆம்புட்ஸ்மேன் நியமனத்தின்போதே தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். 

சோ.அய்யர்இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் அந்த அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றித் தெரிந்துகொள்ள நாம் அங்குச் சென்றோம். இதுகுறித்து அங்குள்ளவர்கள், ''உள்ளாட்சி அமைப்புகளின் முறை மன்ற நடுவம் செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், கட்சிக்காரர்களின் கூட்டம் மட்டும் தினமும் களைகட்டுகிறது. இந்த அமைப்பில், ஒருநாளைக்கு ஒருசில வழக்குகள்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விசாரணைக்கு வரும் பொதுமக்களும், அதிகாரிகளும் மணிக்கணக்கில் காக்க வைக்கப்படுகின்றனர். ஆனால், சோ.அய்யரைப் பார்க்கவரும் அ.தி.முக-வினர் மட்டும் எந்த நேரத்திலும் உள்ளே செல்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்காகச் செயல்பட வேண்டிய இந்த அமைப்பு அ.தி.மு.க-வின் கட்சி அலுவலகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளைக் கண்காணித்து அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய இந்த அமைப்பு, இப்படிப் பொறுப்பில்லாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வரும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகாவது இந்த அமைப்பு முறையாகச் செயல்பட வேண்டும்'' என்கின்றனர் சிறுகுமுறலுடன்.

இதுதொடர்பாக சோ.அய்யரிடம் பேசினோம். ''இங்கு, பெரும்பாலும் கிராமப்புற ஊராட்சி மன்றங்கள் தொடர்பான புகார்கள்தான் அதிகம் வருகின்றன. அதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நடவடிக்கைக்கு அனுப்பிவிடுகிறோம். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மீதான புகார்களை மட்டும்தான் விசாரிக்க இந்த உள்ளாட்சி முறை நடுவத்துக்கு அதிகாரமுள்ளது. கிராமப்புற பஞ்சாயத்துகளையும் இந்த அமைப்பின் அதிகாரவரம்புக்குள் சேர்க்க வேண்டுமென்றால், அதற்குச் சட்டத்திருத்தம் அவசியம். அதன்மூலமே கிராமப்புற ஊராட்சி அமைப்புகளை இந்த விசாரணை வரம்புக்குள் சேர்க்க முடியும்'' என்றவரிடம், ''இந்த அமைப்பு பற்றிப் பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறதே'' என்று நாம் கேட்டதற்கு, ''நாங்கள் இதுகுறித்து விளம்பரம் செய்யாமல் அமைதியாகப் பணிபுரிந்து வருகிறோம்'' என்றார், அவர். அதற்கு நாம், ''இது மக்களுக்கான அமைப்பு; இதைப் பற்றி மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்; நீங்கள், மக்களுக்கு எந்த விழிப்பு உணர்வும் தராமல் அமைதியாகச் செயல்பட்டால்... மக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மீதான புகாரை எங்குத் தருவார்கள்'' என்று கேட்டோம். அதற்கு அவர், ''நீங்கள் திடீரென வந்துவிட்டதால், அதிக தகவல்களை என்னால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. ஆகையால், உங்கள் செல்பேசி எண்ணைத் தாருங்கள்; நானே, உங்களை அழைக்கிறேன்'' என்றவர், இதுவரை நம்மைத் தொடர்புகொள்ளவில்லை. நாம் அழைத்தாலும் நம் அழைப்பை எடுப்பதில்லை.

அவருக்கு என்ன பிரச்னையோ...?

- அ.பா.சரவண குமார்

மாணவப் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close