'நீட்' விலக்கு - முதல்வர் கையில் மாணவர்கள் எதிர்காலம்! | NEET Exam : Will complaints from students be heard by TN Chief Minister?

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (09/05/2017)

கடைசி தொடர்பு:10:50 (09/05/2017)

'நீட்' விலக்கு - முதல்வர் கையில் மாணவர்கள் எதிர்காலம்!

நீட்

‘இந்தியாவில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு இந்த நீட் தேர்வு அவசியம். இதில் எந்த ஒரு மாநிலத்துக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. ஏனென்றால், நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்துவது சம்பந்தமான சட்ட வரைவு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்து விட்டார். எனவே அனைத்து மாநிலங்களிலும்  கட்டாயமாக நீட் தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது.‘சென்னை வந்திருந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆணித்தரமாக இப்படிக் கூறினார். அவரின் குரல் என்பது மத்திய அரசின் குரலாக இருக்க, தாம் சொன்னதுபோலவே மே -7 ம் தேதி நீட் தேர்வையும் நடத்திமுடித்தது மத்திய அரசு. 

மாணவ செல்வங்களிடம் வரம்பு மீறல்:

''இத்தேர்வின்போது, தேர்வு எழுத சென்ற, மாணவ- மாணவிகளுக்கு ஏற்பட்ட துயரங்கள் நாடு முழுக்கவே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள் முழுக்கை சட்டையை கிழித்தும், மாணவிகளின் உள்ளாடைகளை நீக்கச் சொல்லியும் நடத்தப்பட்ட பரிசோதனை மாணவ - மாணவிகளை மட்டுமல்ல, பெற்றோர்களையும் உளவியல் ரீதியாக பாதித்தது. உச்சநீதிமன்றமே ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றபோதும், பல மாணவ - மாணவிகளை ஆதார் அட்டை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். தேர்வுக்கான புகைப்படங்கள் சரியாக இல்லை என்று கூறி, அதே இடத்தில் ஒரு புகைப்படத்துக்கு 50 ரூபாய் என்று புகைப்படம் எடுத்துக் கொடுத்துள்ளனர். இந்தவகையிலும் வசூல் வேட்டை நடந்துள்ளது. கேரளாவில் இதுபோன்று நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை அம்மாநில எம்.பி ஸ்ரீமதி எழுப்பியுள்ளார். அம்மாநில மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. தலையிட்டால், நாடு முழுக்க பரிசோதனை என்ற பெயரில் மாணவ செல்வங்கள் மீதான உளவியல் தாக்குதலுக்கு விடை கிடைக்கும். இந்த துயரம் ஒருபுறமிருக்க, நீட் விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் குடியரசு தலைவர் நிலுவையில் வைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நீட் தேர்வு நடத்தியது என்பது மாணவர்கள் மீது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமைகள் மீதான திணிப்புமாகும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் இது தவறான அணுகுமுறையாகும். மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கையே இது காட்டுகிறது'' என கல்வியாளர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

நீட் விலக்கு சட்ட அனுமதி :

இதுகுறித்து களத்திலிருக்கும்  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு “நீட்-விவாத பொருளாக இருக்கும்போதே, 2013-ம் ஆண்டு கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் (சி.எம்.சி) போட்ட ஒரு வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் முன் வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் அல்டாமிஸ் கபிர் மற்றும் விக்ரம் சிங் செப் ஆகிய இருவரும் ‘நீட் செல்லாது’ என்றனர். நீதிபதி அனில் ஆர் தவேர் மட்டும் இதை ஏற்கவில்லை. பெரும்பான்மை அடிப்படையில் 2013-ல் நீட் ரத்து செய்யப்பட்டது. பிறகு அந்த இரண்டு நீதிபதிகளும் ஒய்வு பெறுகின்றனர். அனில் ஆர் தவேர் சீனியர் நீதிபதியாகிறார். 2016-ல், அவர் தலைமையிலான பெஞ்சில் மறு ஆய்வு மனு போடப்படுகிறது. அப்போது, ‘முன்பு போட்ட உத்தரவை திரும்பப் பெறுகிறேன்’ என்று மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடுகிறார். அதேநேரம் ஏப்ரல் 28 அன்று சங்கல்ப் என்பவர் ‘மத்திய அரசு இன்னும் ஏன் நீட் தேர்வு நடத்தாமல் இருக்கிறது?’ என்று ஒரு வழக்கு போடுகிறார். இதையொட்டி, உடனடியாக நீட் நடத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது.

அதுவரை, நீட் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் ஒரு நோட்டிபிகேசன் மட்டுமே கொடுத்திருந்தது. அதன் பின்புதான் மத்திய அரசு ‘இந்திய மருத்துவ கவுன்சில் 10 டி பிரிவை இணைக்கிறார்கள். அது, ‘இனிமேல் மருத்துவ மாணவ சேர்க்கை, அகில இந்திய தேர்வின் அடிப்படையில் சேர்க்கப்படும்’ என்று சட்டமாக்கப்படுகிறது. அதிலேயே, '2016-2017 கல்வியாண்டுக்கு மட்டும், நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக ‘நீட் பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் வெவ்வேறானவை. எனவே மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்த இயலாது’ என்கிறது. அப்படியென்றால், மத்திய அரசே ‘மாநில கல்வி, மத்திய கல்வி’ இரண்டும் வெவ்வேறானவை என்று ஒப்புக்கொள்கிறதல்லவா? மேலும் நடப்பாண்டிலும் அதே நிலை தொடரும்போது ஏன் நீட் தேர்வு அமல்படுத்த வேண்டும்? இன்று தேர்வு எழுதிய பல மாணவ - மாணவிகள் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று வேதனையோடு தெரிவித்துள்ளனரே” என்றார் நியாயமான குரலில்.

தமிழ்நாடு அரசு சட்ட மசோதா :

'நீட் தேர்வு அமல்படுத்துவது தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு எதிரானது’ என்கிறார் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன். தொடர்ந்து விளக்கும் அவர், ‘'முன்பு தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர சி.இ .டி (C.E.T) எனும் நுழைவுத் தேர்வு முறை இருந்தது. 2006-ல் இந்த தகுதித் தேர்வு முறையை நீக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்தது. வல்லுநர்கள் குழு கொண்டு ஆராய்ந்து, அதன் பரிந்துரையில் அப்போதைய தமிழ்நாடு அரசு, நுழைவுத் தேர்வை நீக்கி சட்டம் இயற்றியது. இதையொட்டி சென்னை உயர் நீதிமன்றம், ‘நுழைவுத் தேர்வு ரத்து என்பது சமூக நீதியின் அடிப்படையில் நியாயமான நடவடிக்கை. இது ஒன்றும் உயர்கல்வி தரத்தை குறைக்கவில்லை.'என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை அப்போதே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 7-வது அட்டவணையின் ஒரே சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இயற்றினால்,சம்பந்தப்பட்ட மாநில அரசு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு, அந்த மசோதாவை அனுப்ப வேண்டும். பொதுப்பட்டியலில் இயற்றப்படும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது பொதுவான மரபு. ஒப்புதல் கிடைத்தால் அது அந்த மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும். இப்படித்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட்டது. இந்தவகையில் நீட் தேர்வு வேண்டி மத்திய அரசு சட்டம் இயற்றியதால், தமிழ்நாட்டில் 2006-ல் போடப்பட்ட சட்டத்தின் தொடர்ச்சியாக, 2017-ல் தமிழ்நாடு அரசு, ‘நீட்தேர்வுக்கு விலக்கு’ கேட்டு சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்ட மசோதா நிறைவேற்றியது. இந்த  சட்ட மசோதாவுக்கு, இதுவரை முறையான பதில் அளிக்காமல் மௌனம் சாதிக்கிறது மத்திய அரசு'' என்கிறார் விரிவாக.

நீட் தேர்வு பரிசோதனை

வணிகமாக மாற்றப்படும் மருத்துவக் கல்வி :

'' 'நீட் தேர்வு'-க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதே கோரிக்கையை பிரதமர்  மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இப்படிப்பட்ட நடைமுறைகள் நடந்து வரும் வேளையிலேயே நீட் தேர்வை நடத்தி முடித்துள்ளது மத்திய அரசு. 2001-2014 வரை குஜராத் முதல்வராக இருந்த மோடி ஆட்சிக் காலத்தில் 8 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டன. அதில் 5 அரசு கல்லூரி. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த கல்லூரியில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவிலேயே மருத்துவம் படிக்க இயலும். தற்போது பயிற்சி நிலையங்களில் இலட்சங்களில் செலவு செய்து தேர்வாகி வருபவர்களால் இந்த இடங்கள் நிரப்பப்பட்டால், குறைந்த செலவில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போகும் அபாய சூழல் ஏற்படுகிறது. கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது நேர்முக தேர்வு நடக்கும். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் படிக்காதவர்களாக, ஏழையாக இருந்தால் அவரின் பிள்ளைக்கு தான் கல்லூரியில் சேர வாய்ப்பளிப்பார்.’அரசு ஊழியர் பிள்ளையோ, படித்தவர்கள் பிள்ளையோ இந்தமுறை இல்லையென்றால் பிறகு எப்படியாவது கல்லூரியில் சேர்ந்துவிடலாம். ஆனால் ஏழைகள், முதல் தலைமுறை பட்டதாரிகள் கல்வி பயின்றால் அதற்கு பின்னான அவர்கள் சந்ததியே வளரும்’ என்று வாய்ப்பளித்தார்.

எளிய மனிதர்களை மேலே தூக்கிவிட்டார். ஆனால் இன்று நீட் தேர்வின் மூலம் பிராய்லர் பண்ணைகள் போன்ற பயிற்சி நிலையங்கள் உருவாகி, லட்சங்களை கடக்கிறது மருத்துவக் கல்விச் செலவுகள். இப்படி செலவழித்து படிக்க வருபவர், மருத்துவத்தை வைத்து கோடிகளில் சம்பாதிக்க விரும்புவாரா? இல்லை கிராமங்களுக்கு சென்று ஏழைகளுக்கு சேவை செய்ய நினைப்பாரா? சேவைத்துறையை வணிகமாக்கிவிட்டது மத்திய அரசு'' என கடுமையாக சாடுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. 

மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

முதல்வர் போராடுவாரா?

தொடர்ந்து பேசும் அவரே, ''இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. தற்போது நடந்த நீட் தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 15 சதவிகித அகில இந்திய கோட்டாவுக்கான இடம்தான். நீட் தேர்வு எழுதியவர்கள் இங்கு இணையலாம். தற்போது மருத்துவக் கல்லூரி சேர்க்கை காலம் தொடங்குவதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தால், அனைவருமே ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலே இங்கே கல்லூரியில் சேரலாம். இதை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு உணர்த்தவேண்டும். டில்லியையே அதிர வைத்த அய்யாக்கண்ணு போராட்டத்தையும் மிஞ்சக்கூடிய வகையில் போராட்டம் செய்யலாம். உடனடியாக அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேசி அனைவருடன் இணைந்து பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தலாம். இரண்டு அவை எம்.பி-களும் நாடாளுமன்ற அவைகள் முன் போராட்டம் செய்யலாம்; கோரிக்கை வைக்கலாம். பிரதமர் அலுவலகத்தை முற்றுகை இட்டு நம் கோரிக்கையின் நியாயம் உணர்த்தலாம். ஆனால், இவற்றையெல்லாம் எடப்பாடி பழனிசாமி செய்வாரா? என்பது தெரியவில்லை. இனியும் நீட் விலக்குக்காக உண்மையான உணர்வோடு முயற்சிக்கவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்கிறது என்றே பொருள்'' என்கிறார் காட்டமாக. 

இது தமிழ்நாடு அரசின் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலம் குறித்தது  மட்டுமல்ல, மருத்துவத்துறையின் எதிர்காலம் குறித்துமான சிக்கல். சிந்திக்குமா மத்திய பி.ஜே.பி அரசு?


டிரெண்டிங் @ விகடன்